மோஜோ 7 | செல்பேசி இதழியலில் கதை சொல்வது எப்படி?

மோஜோ கதையை உருவாக்குவது எப்படி? இதற்கு தேவையான உபகரணங்கள் எவை? என்னவிதமான செயலிகளை பயன்படுத்தலாம்? இதற்கான நுட்பங்கள் என்ன?
 | 

மோஜோ 7 | செல்பேசி இதழியலில் கதை சொல்வது எப்படி?

மோஜோ 7 | செல்பேசி இதழியலில் கதை சொல்வது எப்படி?நவீன செல்பேசிகள் மூலம் ஒளிபரப்பு தரத்தில் வீடியோ எடுக்க முடிவதும், அதை செல்பேசியிலேயே எடிட் செய்து தொழில்முறையாக தொகுக்க முடிவதும் இதழாளர்களுக்கு புதிய வாயில்களை திறந்து விட்டுள்ளன. இந்த சாதக அம்சங்களை பயன்படுத்திக்கொண்டு பல முன்னணி இதழாளர்கள் செல்பேசியிலேயே கதை சொல்லத் துவங்கியிருக்கின்றனர். இதழியல் துறையைச் சாராத பலரும் கூட இந்த ஆற்றலை பயன்படுத்தி அருமையான கதைகளை உருவாக்கி வருகின்றனர்.

 இவ்வாறு செல்பேசி மூலம் உருவாக்கப்படும் பல் ஊடக தன்மை கொண்ட செய்திகள் மோஜோ கதைகள் என பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. இந்த வகையான கதை முயற்சிகள் மோஜோ கதை வடிவம் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சரி, மோஜோ கதையை உருவாக்குவது எப்படி? இதற்கு தேவையான உபகரணங்கள் எவை? என்னவிதமான செயலிகளை பயன்படுத்தலாம்? இதற்கான நுட்பங்கள் என்ன? இப்படி பல கேள்விகள் எழலாம்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்வதற்கு முன் மனதில் கொள்ளவேண்டிய முக்கியமான ஒரு விஷயம்: 'மோஜோ கதை சொல்லல் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது என்பதை விட கதை சொல்லல் சார்ந்தது' என்பது ஆகும். மோஜோ என சுருக்குமாக குறிப்பிடப்படும் மொபைல் ஜர்னலிஸம் என்பது அடிப்படையில் இதழியல் நோக்கிலான கதை சொல்லலே. எனவே செல்பேசி கேமராவை இயக்குவது, செயலிகளைக் கையாள்வது ஆகியவற்றை எல்லாம் கற்றுக்கொள்வதற்கு முன், முதலில் கதை சொல்வதன் அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஊடகங்களில் வழக்கமாக கதை சொல்ல என்ன உத்திகளும், வழிகளும் பின்பற்றப்படுகின்றனவோ அவையே மோஜோவிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆய்வும் திட்டமிடலும்

செல்பேசி கேமரா கையில் இருப்பதால் நினைத்த மாத்திரத்தில் காட்சிகளை பதிவு செய்யத் துவங்கி விட முடியாது. அவ்வாறு செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவை இதழியல் கதைகளாக இருக்காது என்பதே விஷயம். மாறாக, செல்பேசி எனும் கருவி அளிக்கும் அனைத்து சாத்தியங்களையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு பல் ஊடக தன்மை கொண்ட கதைகளை உருவாக்கி பகிர்ந்துகொள்ள விரும்பினால், அதற்கு ஆய்வும், திட்டமிடலும் அவசியம். அதன் பிறகே களத்தில் இறங்கலாம்.

எந்தக் கதையை உருவாக்க விரும்பினாலும், முதலில் அதற்கான அடிப்படை கரு, அதாவது ஐடியா மனதில் இருக்க வேண்டும். இந்தக் கருவை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். நாளிதழ் அல்லது இணையதள செய்திகளில் இருந்து கிடைக்கும் பொறி கருவாக அமையலாம். அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள், கேள்விப்படும் தகவல்கள் கருவாக உருவாகலாம்.

எழுத்தாக்கம்

இந்தக் கருவை ஒரு காகிதத்தில் எழுதிவைக்க வேண்டும். ஒரு வரி தலைப்பாக அல்லது சில வரி விவரிப்பாக அது இருக்கலாம். கேமராவை கையில் வந்த பிறகும் எழுத்தா? என கேட்கத் தோன்றலாம். எந்த சாதனத்தில் கதை சொல்வதாக இருந்தாலும், அதற்கு அடிப்படையாக எழுத்தாக்கம் தேவை. அனுபவம் வாய்ந்தவர்கள் இதை மனதிலேயே செய்து கொள்ளலாமே தவிர தவிர்ப்பதற்கில்லை. எழுத்தாக்கத்தில் தான் கதைகள் உருவாகின்றன. 

கேமராவில் காட்சிகளைப் படம்பிடிக்க களத்தில் இறங்கும் முன், கதைக்கு ஏற்ப எந்த வகையான காட்சிகளை, எப்படி எடுக்கப் போகிறோம் என்று நன்றாக யோசித்து, அதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அனிமேஷன் அல்லது செய்திப்படங்களுக்கு ஸ்டோரி போர்டு எழுதுவது போல தான் இதுவும். பலவிதமான காட்சிகளைப் படமாக்கலாம். நேர்காணல்களை சேர்க்கலாம், பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம். இவற்றில் நாம் சொல்ல விரும்பும் கதைக்கு ஏற்றவை எவை என்பதை தீர்மானிக்க வேண்டும். கதையின் மையம் என்ன என்பதிலும் அதை எப்படி நகர்த்திச் செல்வது என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்த அம்சங்களை எல்லாம் தீர்மானிக்க ஆய்வு செய்வதும் அவசியம். தொடர்புடைய செய்திகளை படித்து தகவல்களை திரட்ட வேண்டும். இணையத்திலும் தகவல்களை தேடி தொகுத்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் கதையை சிறப்பாகச் சொல்வதற்கு தேவையான புரிதல் கிடைக்கும் அளவுக்கு ஆய்வு செய்ய வேண்டும்.

ஸ்டோரி போர்டு

கதைக்கான திட்டமிடலை ஸ்டோரி போர்டு வடிவில் உருவாக்கும்போது காட்சி மொழியில் யோசிக்க வேண்டும். நாம் சொல்ல இருப்பது சில நிமிட கதையோ அல்லது கால் மணி நேர கதையோ எதுவாக இருந்தாலும், அத்தனை நிமிடங்களுக்கு ஓடக் கூடிய காட்சிகளை அப்படியே தொடர்ச்சியாக அல்லது வெவ்வேறு சூழலில் படமாக்கி வைத்துக்கொண்டு பின்னர் எடிட்டிங்கில் தொகுத்துக் கொள்ளலாம் என்று நினைக்க முடியாது. அத்தகைய காட்சி பதிவுகள் அலுப்பூட்டக் கூடிவையாகவே இருக்கும்.

தொழில்முறை நேர்த்தியுடன் காட்சிகளை பதிவு செய்ய வேண்டும் எனில், காட்சி மொழியில் யோசிக்க வேண்டும். பார்வையாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கதையை எப்படி ஒவ்வொரு கட்டமாக நகர்த்திச்செல்ல வேண்டும் என யோசிக்க வேண்டும். இதற்கு வரிசை முறையில் காட்சிகளை அமைத்துக் கொள்வது ஏற்றது என்கின்றனர். ஆங்கிலத்தில் சீக்வென்ஸ் என குறிப்பிடப்படுகிறது. பல வகையிலான ஷாட்கள்தான் இதற்கு அடிப்படை.

 முதலில் ஒரு பரந்த காட்சியிடன் துவங்குவது, பின்னர் இடைப்பட்ட காட்சிகள் மற்றும் குளோஸ் அப் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ளாலாம். கதையின் போக்கிற்கு ஏற்ப இந்த வகை காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம். பொதுவான விதியாக, கதை நிகழும் களத்தை உணர்த்த பரந்த காட்சியை நிறுவும் காட்சியாக பயன்படுத்தலாம் என்கின்றனர். ஒரு நிறுவும் காட்சி, அதன் பிறகு இடைப்பட்ட காட்சி, தொடர்ந்து நெருக்கமான காட்சி என மாறும்போது ஒரு சில நொடிகளில் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திவிடலாம். அதன்பிறகு காட்சிகளாகவே கதை நகர வேண்டும்.

எந்த இடத்தில் பின்னணி குரலை பயன்படுத்தலாம், எந்த இடத்தில் கதை மாந்தர்களை பேச வைக்கலாம் என்பதை கதையின் தன்மைக்கேற்ப தீர்மானிக்கலாம். காட்சிகளை படமாக்கும்போது, ஒலி மற்றும் ஒளி தொடர்பான பால பாடங்களையும் மறந்துவிடக்கூடாது.

சிறந்த கதை

எளிமையான கதையோ, பல அடுக்குகள் கொண்ட சிக்கலான கதையோ அதற்கு ஒரு அமைப்பு இருக்க வேண்டும். ஒரு ஆரம்பம், நடுப்பகுதி பின்னர் முடிவு எனும் விதமாக கதை அமைப்பு இருக்க வேண்டும். இந்த மைய அமைப்பின் படி, சொல்ல விரும்பும் கதை, அதன் முக்கிய அம்சங்களுக்கு ஏற்ப காட்சிகளை அமைத்துக்கொள்ளலாம். 

கதை முடியும்போது அதன் நோக்கம் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். கதை ஒரு கேள்வியை எழுப்பியிருந்தால் அதற்கான பதிலை அளித்திருக்க வேண்டும். அல்லது அது தொடர்பான சிந்தனையையேனும் தூண்டிவிட்டிருக்க வேண்டும். கதை ஒரு பிரச்சனையை முன்வைத்தால் அதற்கான தீர்வை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும். விவாதம் அல்லது சர்ச்சையை மையமாக கொண்டிருந்தால் அதன் முக்கிய கோணங்கள் பற்றியை புரிதலை அளித்திருக்க வேண்டும். தனிமனிதர்கள் பற்றிய பதிவு எனில் அவர்களை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும் அல்லது அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன என்று உணர்த்த வேண்டும். 

ஆய்வு, எழுத்து, காட்சி அமைப்பு, திட்டமிடல் இவை எல்லாம் சரியாக இருக்கும்போதே சிறந்த கதையை உருவாக்க முடியும். இதை இன்னும் சிறப்பாக செய்ய, காட்சி அமைப்பு உத்திகளை அறிந்திருக்க வேண்டும். வீடியோ இதழியலின் நீட்சியாக சொல்லப்படும் அந்த நுணுக்கங்களை அடுத்ததாக பார்க்கலாம்.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 6 | செல்பேசி இதழாளர்கள் களம் காணும் முன் கவனிக்கத்தக்கவை 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP