மோஜோ 6 | செல்பேசி இதழாளர்கள் களம் காணும் முன் கவனிக்கத்தக்கவை

செல்பேசியைக் கொண்டு கதை சொல்ல களத்தில் இறங்கும்போது அடிப்படையாகக் கவனிக்க வேண்டியவை இவைதான்.
 | 

மோஜோ 6 | செல்பேசி இதழாளர்கள் களம் காணும் முன் கவனிக்கத்தக்கவை

மோஜோ 6 | செல்பேசி இதழாளர்கள் களம் காணும் முன் கவனிக்கத்தக்கவைசெல்பேசியைக் கொண்டு கதை சொல்ல களத்தில் இறங்கும்போது அடிப்படையாக சில விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும். செல்பேசியை எப்படிக் கையாள்வது என்பதை தெரிந்துகொண்டு செயல்பட்டால், தொழில்முறை நோக்கில் நேர்த்தியாக படம் பிடிப்பது சாத்தியம். செல்பேசி படங்கள் பல நேரங்களில் அமெச்சூர்தனமாக இருக்க காரணம், கேமராவின் தரம் அல்ல, மாறாக செல்பேசியை முறையாக கையாள தவறியதுதான். செல்பேசியை சரியான முறையில் கையாள்வதற்கான வழிகள்:

செல்பேசி எப்படி இருக்க வேண்டும்?!

செல்பி எடுப்பது என்றால் நீங்கள் செல்பேசியை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் செய்தி நோக்கில் படம் எடுக்கும்போது, செல்பேசியை எப்போதும் பக்கவாட்டில் வைத்திருப்பதே சரியானது. குறிப்பாக வீடியோ காட்சிகளை படம் பிடிக்க இது அவசியம். காரணம் வழக்கமாக வைத்திருப்பது போல நீளவாட்டில் செல்பேசியை வைத்து படம் எடுக்கும்போது திரையில் தோன்றும் காட்சி அகன்ற திரையில் பொருத்தமாக இருக்காது. யூடியூப் போன்ற தளங்களில் சில வீடியோக்களை பார்க்கும்போது, நடுவே நீளமாக படம் தோன்ற இரு பக்கமும், கருப்பு பட்டைகள் தெரிவது இதனால்தான். இதைத் தவிர்க்கவே எப்போது செல்பேசியை பக்கவாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் வீடியோவை பிரதானமாக செல்பேசியில்தான் பகிர்ந்து கொள்ள இருக்கிறீர்கள் எனில், நீளவாட்டிலும் வைத்திருக்கலாம். ஆனால் ஒன்று... எப்படி படம் எடுத்தாலும், அதே முறையில் எல்லா காட்சிகளையும் படம் எடுக்க வேண்டும். ஒரு காட்சி நீளவாட்டிலும், இன்னொரு காட்சி பக்கவாட்டிலும் இருந்தால் பின்னர் எடிட் செய்யும்போது சிக்கலாகிவிடும்.

ஏர்பிலேன் மோடு

களத்தில் இறங்குவதற்கு முன், முதலில் உங்கள் செல்பேசியில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, ஏர்பிலேன் மோடை இயக்க வேண்டும். இதன் மூலம், படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு வருவதைத் தவிர்க்கலாம். பேட்டியின் நடுவே செல்பேசியில் பேசுவது சரியாக இருக்காது என்பதோடு, படம் எடுப்பதையும் பாதிக்கலாம்.

நிலைத்து நில்லுங்கள்

செல்பேசியில் எடுக்கப்படும் படம் அல்லது வீடியோவின் தரம் மோசமாக இருக்க முக்கிய காரணம், அவை சரியான முறையில் எடுக்கப்படாததே. அதாவது படம் எடுக்கும்போது ஏற்படும் அசைவுகள் அல்லது கேமராவை பிடித்திருக்கும்போது ஏற்படும் நடுக்கம் ஆகியவை படத்தின் துல்லியத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்க செல்பேசியை அசையாமல் நிலையாக பிடித்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த வழி செல்பேசியை வைத்துக்கொள்ள டிரைபாடு சாதனத்தை நாடலாம். அசையாமல் செல்பேசியை பிடித்துக்கொள்ள உதவும் பிரத்யேக ஸ்டாண்ட்களும் இருக்கின்றன. இவை எதுவும் இல்லை என்றால், ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் அந்தக் கையை ஆடாமல் பிடித்துக்கொள்ளலாம். சுவரில் சாய்ந்து நிற்பதன் மூலம் அசைவை குறைக்கலாம்.

ஒலியில் கவனம்

நல்ல வீடியோவுக்கு மிகவும் முக்கியமானது என்ன தெரியுமா? 

துல்லியமான ஒலி (ஆடியோ) தான். வீடியோவில் சில இடங்கள் மங்கலாக இருந்தால் கூட பார்வையாளர்கள் அதிகம் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் வீடியோவில் யாரேனும் பேசும்போது ஒலி சரியாக கேட்கவில்லை என்றால், பார்வையாளர்கள் கடும் அதிருப்தி அடைவார்கள். மோசமான ஒலியை உங்களால் ஈடு செய்யவும் முடியாது. எனவே வீடியோ எடுக்கும்போது ஒலியில் தனி கவனம் செலுத்த வேண்டும். செல்பேசியில் உள்ள மைக் போதுமானதல்ல என்று தோன்றினால் தனியே மைக் பொருத்திக் கொள்ளலாம். மேலும் இயன்றவரை பேசுபவர் அருகே சென்று செல்பேசியை வைத்திருப்பது ஒலி நன்றாக பதிவாக உதவும். கையால் செல்பேசியை பிடித்திருக்கும்போது, மைக் பகுதியை கை மறைக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைக்கில் ஒலி நன்றாக பதிவாக, காற்று வீச்சை தடுக்கும் விண்ட்ஷீல்ட் கவசத்தையும் பயன்படுத்தலாம். 

ஒளியிலும் கவனம்

படம் எடுக்க போதுமான வெளிச்சம் உள்ளதா என கவனிக்க வேண்டும். செல்பேசியில் படம் எடுக்கும்போது இயற்கை ஒளியை இயன்ற அளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிச்சம் நேர்திசையில் வராமல் எதிர்திசையில் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஜன்னல் போன்றவற்றில் இருந்து வரும் வெளிச்சம் பேட்டி அளிப்பவர் முகத்தின் மீது விழுவதை தவிர்க்க வேண்டும். பின்னணியில் மரம் அல்லது கம்பம் / தூண்கள் இருக்க கூடாது. இல்லை எனில் அவை பேசுபவர் தலையில் இருந்து நீட்டிக்கொள்வது போல தோன்றலாம். அதேபோல தேவையில்லாத பொருட்கள் பின்னணியில் தோன்றுவதை தவிர்க்க வேண்டும்.

லென்ஸ்

படம் எடுப்பதற்கு முன் செல்பேசி கேமரா லென்சை மெல்லிய துணியால் துடைத்துவிட வேண்டும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் அதில் தூசி படர்ந்திருக்கலாம். இது படத்தின் தரத்தை பாதிக்கும். எனவே முதலில் லென்சை மறக்காமல் துடைத்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

புதுவித ஜூம் 

சிறந்த முறையில் கதை சொல்ல பலவித காட்சிகள் தேவை. எனவே பல கோணங்களில் படம் எடுத்துக்கொள்ளுங்கள். எப்போதும் வெளிநாட்டில் படம் எடுப்பது போல நினைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்பதே மோஜோ பயிற்சியாளர்கள் சொல்லும் அறிவுரை. வெளிநாட்டில் படம் எடுக்கும்போது, ஒரு காட்சி தேவை எனில் மீண்டும் போய் படமெடுக்க முடியுமா? இதைத் தவிர்க்க, எல்லா கோணங்களிலும் படம் எடுத்துக்கொள்வது போல எப்போதுமே, வாய்ப்புள்ள கோணங்களில் எல்லாம் படம் எடுத்துக்கொள்ளுங்கள். 

அருகாமை காட்சிகள் தேவை எனில் ஜூம் வசதியை பயன்படுத்த வேண்டாம். அதற்கு மாறாக கால்களால் ஜூம் செய்யவும் என்கின்றனர். அதாவது நீங்கள் நடந்து சென்று அருகாமையில் படம் பிடிக்கவும். 

சரிபாருங்கள்

படம் எடுத்தவுடன் அல்லது ஆடியோ பதிவு செய்தவுடன் அந்த இடத்திலேயே அது எவ்வாறு பதிவாகி இருக்கிறது என பார்த்துக் கொள்ளவும். சரியாக பதிவாகவில்லை எனில் மீண்டும் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அலுவலகம் சென்ற பிறகு படம் பதிவாகவில்லை எனத் தெரிந்தால் எதுவும் செய்ய முடியாது.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 5 | செல்பேசி இதழியலின் அடிப்படைகள் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP