மோஜோ 5 | செல்பேசி இதழியலின் அடிப்படைகள்

செல்பேசி இதழியல் அடிப்படைகளை கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது. அதற்கு சில நாட்களே போதுமானது. ஆ
 | 

மோஜோ 5 | செல்பேசி இதழியலின் அடிப்படைகள்

மோஜோ 5 | செல்பேசி இதழியலின் அடிப்படைகள்செல்பேசி இதழியல் அடிப்படைகளை கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது. அதற்கு சில நாட்களே போதுமானது. ஆனால், செல்பேசி இதழியலில் தேர்ச்சி பெறுவது என்பது எளிதல்ல; அதற்கு முறையான பயிற்சியும், கடின உழைப்பும் அவசியம்.

செல்பேசி இதழியலில் சிறந்து விளங்க, செல்பேசி தொழில்நுட்பம் மற்றும் அதற்கான பலவிதமான செயலிகளை பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, இதழியிலின் அடிப்படைகளிலும் அனுபவம் இருக்க வேண்டும். ஏனெனில், செல்பேசி இதழியலில், 'செல்பேசி' என்பது ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறது. மற்றபடி இதழியலுக்கான அடிப்படை நெறிமுறைகள், விதிகள், செயல்முறைகள் இதற்கும் பொருந்தும். முக்கியமாக இதழியலுக்கான அறம் செல்பேசி இதழியலிலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.

இணையம் சார்ந்த செய்தி வெளியீட்டை இணைய இதழியல் என குறிப்பிடுகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் செய்தி சேகரிப்பு, வெளியீடு, பகிர்வு ஆகியவற்றை எளிதாக்கி இருக்கிறது. மேலும் இணையம் மையமாக திகழும் புதிய ஊடகத்தின் தன்மை காரணமாக நவீன இதழியலின் அம்சங்கள் தலைகீழாக மாறியிருக்கிறது. வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் என்பவர்கள் மறைந்து எல்லோரும் பங்கேற்பாளர்களாக ஆகியிருக்கின்றனர். இதில் எண்ணற்ற சாதகங்களும், பாதகங்களும் இருந்தாலும் இதழியலின் அடிப்படை விதிகள் மாறிவிடவில்லை. அவை இணைய இதழியலுக்கும் பொருந்தும். இப்போது செல்பேசி இதழியலுக்கும் பொருந்தும். எதிர்காலத்திலும் பொருந்தும்.

பொதுநலனுக்கான செய்தி

செல்பேசி திரையில் ஆடியோ மற்றும் வீடியோவை எடிட் செய்ய கற்றுக்கொள்ள அரை நாளே போதுமானது என்கிறார் செல்பேசி இதழியல் முன்னோடி மற்றும் பயிற்சியாளரான ஸ்டீபன் குவின். அதன்பிறகு பயிற்சி பெற்ற இதழாளர்களுக்கு செய்தி சேகரிப்பு என்பது மிகவும் எளிதான செயல்முறை என்கிறார் அவர். அடுத்ததாக அவர் சொல்லும் விஷயம் தான் முக்கியமானது. 'செல்பேசி இதழியலின் முக்கிய அம்சம் கதை சொல்லும் கலையாகும். அதாவது தொழில்நுட்பம் மூலம் மேம்பட்ட இதழியலை அளிப்பது' என்கிறார். இது தொழில்நுட்ப திறனை கடந்தது. எனவே அரை நாளில் கற்றுக்கொள்ள முடியாதது என்கிறார். ஆக, செல்பேசி இதழாளராக விளங்க வேண்டும் எனில் அடிப்படையில் இதழாளராக இருக்க வேண்டும்.

காகித குறிப்பேட்டுடன் செய்தி சேகரிக்கச் சென்றாலும் சரி, முழு தொலைக்காட்சி குழுவுடன் சென்றாலும் சரி அல்லது கையில் நவீன செல்பேசியுடன் செய்தி சேகரிக்கச் சென்றாலும் சரி, எது செய்தி, அதை எப்படிச் சொல்ல வேண்டும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன என்பது போன்ற விஷயங்களில் அக்கறைகொள்ள வேண்டும். இதழியல் என்பது பொது நலனுக்கான செய்தி வெளியீடு என்பதை எப்போதும் மறக்கக் கூடாது.

செல்பேசியில் உள்ள கேமராவின் ஆற்றல் மேம்பட்டு வருவதும், செல்பேசியிலேயே எடிட் செய்யக் கூடிய, இணையத்தில் வெளியிடக் கூடிய வசதியை அளிக்கும் எண்ணற்ற செயலிகள் உருவாக்கப்படுவதும் வருங்காலத்தில் மேலும் பல இதழாளர்கள் செல்பேசியை தொழில்முறை பணிக்காக பயன்படுத்திக்கொள்வது அதிகரிக்கும் என்கிறார் குவின். செய்தியாளர்கள் எப்போதுமே தங்கள் வசம் செல்பேசி வைத்திருப்பதால் செல்பேசியில் படம் / வீடியோ எடுப்பதும், அவற்றை உடனே இணையத்தில் வெளியிடுவதும் எளிதாக இருக்கிறது.

இந்த ஆற்றலை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள செல்பேசி இதழியலுக்கு தேவையான அடிப்படை நுட்பங்கள், மென்பொருள்கள் மற்றும் சாதனங்களை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன், முதலில் நவீன செய்தி சேகரிப்பின் மூன்று அடுக்குகளை புரிந்து கொள்ள வேண்டும்.

செல்பேசி மூலம் செய்தி சேகரித்து வெளியிடுவது என்பது அடிப்படையில் மல்டிமீடியா எனச் சொல்லப்படும் பல் ஊடகத் தன்மை கொண்டிருக்கிறது. அதாவது வரிவடிவ செய்திகள், புகைப்படம், ஆடியோ, வீடியோ எல்லாம் இணைந்தது. செய்தியின் தன்மைக்கேற்ப இந்த அம்சங்களில் சில முதன்மை பெறலாம் அல்லது அனைத்துமே இடம்பெற்றிருக்கலாம்.

மூன்று அடுக்குகள்

செல்பேசி அறிமுகமான ஆரம்ப காலத்தில், களத்தில் இருந்து அலுவலகத்தை தொடர்புகொண்டு செய்தியை விவரிப்பது அல்லது குறுஞ்செய்தி வழியே தகவல் அனுப்புவது இயல்பாக இருந்தது. பின்னர் கேமரா போன்கள் அறிமுகமானபோது செய்தியுடன் படங்களையும் எடுத்து அனுப்புவது சாத்தியமானது. ஆரம்ப கால போனில் படங்களின் தரம் அத்தனை துல்லியம் இல்லை என்றாலும், செய்திப்படம் என்ற வகையில் இந்தக் குறை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது.

ஆனால், காலப்போக்கில் செல்பேசி தொழில்நுட்பத்தின் எல்லையில்லா மேம்பாடு காரணமாக நவீன செல்பேசி கேமராவில் தரமான படங்களை எடுக்க முடிகிறது. மேலும் செல்பேசிகள் அதிவேக இணைய வசதி பெற்றிருப்பதன் காரணமாக அவற்றை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவது சாத்தியமாகிறது. வெளியிடும் முன் நேர்த்தியாக எடிட் செய்வதற்கான மென்பொருள்களும் செயலி வடிவில் கைகொடுக்கின்றன. இந்த அம்சங்களின் கூட்டு பலனே செல்பேசி மூலமான பல் ஊடக செய்தி சேகரிப்பு சாத்தியமாகிறது.

பல் ஊடக செய்தி சேகரிப்பு அடிப்படையில் மூன்று அடுக்குகளை அல்லது மூன்று வகையானதாக இருக்கிறது என்கிறார் குவின். உடனடி செய்தி முதல் வகையாகும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஒரு செய்தியாளர் களத்தில் இருந்து அலுவலகத்திற்கு குரல்வழியாக அல்லது குறுஞ்செய்தியாக தகவல் அளிக்கலாம். அவற்றுடன் சில புகைப்படங்கள் அல்லது வீடியோவையும் இணைத்து அனுப்பலாம். செய்தி நடந்தவுடன் இணைய பதிப்பில் அது பற்றிய ஆரம்ப கட்ட தகவலை வெளியிட இது மிகவும் ஏற்றது. தேவை எனில் செய்தியாளர் நவீன செயலிகள் மூலம் களத்தில் இருந்தே இவற்றை இணையத்தில் வெளியிடலாம்.

இரண்டாவது வகை அல்லது அடுக்கு என்பது, உடனடி செய்தி அல்லது பொதுச் செய்தியின் அடுத்த கட்ட செய்தி சேகரிப்பாகும். செய்தியின் தன்மைக்கேற்ப அவை தொடர்பான கூடுதல் தகவல்கள், பின்னணி விவரங்கள், மக்களின் கருத்துக்கள், அடுத்த கட்ட வளர்ச்சி ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கலாம்.

உதாரணத்திற்கு சாலை விபத்து என்பது உடனடி செய்தியாக அமையும். விபத்தின் தன்மைக்கேற்ப அதன் விவரங்கள் அடுத்த கட்ட செய்தியாகும். மூன்றாவது வகை அல்லது அடுக்கு என்பது பத்திரிகை கட்டுரை செய்தி அல்லது வானொலி, தொலைக்காட்சி செய்திப்படம் பாணியிலானது. மிகவும் விரிவாகவும், ஆழமாகவும் இது அமைந்திருக்கும். இந்த வகை செய்திகளுக்கு பல நாட்கள் உழைத்து தகவல் சேகரிக்க வேண்டும். இதைக் கதை சொல்லலாகவும் புரிந்து கொள்ளலாம். வறட்சி சூழலிலும் புதுமையான விவசாய முறைகளை பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டும் சாதனை விவசாயி பற்றிய செய்தியை இதற்கான உதாரணமாக சொல்லலாம். அல்லது, காதலனின் அமில வீச்சுக்கு இலக்கான பிறகு, அழகின் வரையறையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தன்னம்பிக்கையுடன் வாழும் இளம் பெண்ணின் கதையை உதாரணமாக சொல்லலாம். இதழியல் என்பதே மக்களுக்கான கதை சொல்லல் தானே.

ஊடக அறம்

எந்த வகையான செய்தி என்றாலும், அனைத்துக்குமே பல் ஊடக தன்மை பொருந்தும். ஆனால் செய்தியின் தன்மை மற்றும் தீவிரத்திற்கு ஏற்ப ஊடக அம்சங்கள் தீர்மானிக்கப்படும். ஒரு சில செய்திகள் குறிப்பிட்ட ஊடகத்திற்கு ஏற்றதாக இருக்கும். உதாரணத்திற்கு பட்ஜெட் பற்றிய அலசல், அல்லது தேர்தல் முடிவுகளில் வாக்குகளின் அலசல் பற்றிய கட்டுரை எனில் அச்சு ஊடகம் அல்லது இணையத்தில் வெளியிடுவது ஏற்றதாக இருக்கும். மாறாக, தீ விபத்து எனில், செய்தியாளர் பக்கம் பக்கமாக எழுதுவதைவிட, வீடியோ காட்சி அதை கச்சிதமாக வெளிப்படுத்தும். ஒரு சில செய்திகளுக்கு ஆடியோ பதிவு பொருத்தமாக இருக்கும். பொதுவாக உணர்வுகளை வெளிப்படுத்த வீடியோ ஏற்றதாக கருதப்படுகிறது.

ஆனால், இங்கே எத்தகைய படம் அல்லது வீடியோவை வெளிடலாம் என்பதற்கான ஊடக அறத்தை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக ஊடகங்கள் கோரமான படங்கள், பார்ப்பவரின் மனநிலையை பாதிக்க கூடிய படங்களை வெளியிடுவதில்லை. தனிநபர்களை அடையாளப்படுத்தும் படங்களையும் பல நேரங்களில் வெளியிடுவதில்லை. கண்டதும் படமெடுப்பது, படமெடுத்ததும் பதிவேற்றும் வசதி சாத்தியமாகியுள்ள காலக்கட்டத்தில் இந்த நெறிமுறைகள் சவாலாகுக்கு இலக்காகி இருக்கிறது என்றாலும், இவை மீறப்பட வேண்டியவை என்பது அர்த்தம் அல்ல.

பொதுவாக செய்தி அறையில் உள்ள ஆசிரியர் குழு இதுபோன்ற விஷயங்களை தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட செய்தி வெளியாகும்போது, அதை எப்படி வெளியிடுவது என விவாதிக்கப்படும்போது ஊடக அறம் சார்ந்த நெறிமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செல்பேசி இதழியலுக்கும் இது பொருந்தும். இதழாளர் தவிர ஒருவர் சுயேட்சையாக செய்தி வெளியீட்டில் ஈடுபட்டாலும் இந்த அடிப்படை அறத்தை மீறாமல் இருக்க வேண்டும்.

பல்வேறு ஊடங்களின் தன்மையை அறிந்திருப்பதோடு, அவற்றின் பலம் மற்றும் பலவீங்களை இதழாளர்கள் நன்கு உள்வாங்கி கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சியும் அவசியம். இதில் முதல் அடுக்கு செய்திக்கு செல்பேசி இதழாளர்கள் மிகவும் பொருத்தமானவர்கள். செய்தி நிகழும் இடத்தில் இருந்து தாமதம் இல்லாமல் முதல் கட்ட பதிவுகளை செல்பேசியிலேயே அளித்துவிடலாம். இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு செய்திகளுக்கும் செல்பேசி இதழியல் பொருத்தமாக இருக்கும். ஆனால் அதற்கு கூடுதல் பயிற்சி தேவை.

இந்த இடத்தில் குவின் சொல்லும் செல்பேசி இதழியல் வேறுபாடுகளை அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். செல்பேசி இதழியலுக்கு பலவிதமான வரையறைகள் சொல்லப்படுகின்றன. செல்பேசி மூலம் செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீடு என புரிந்து கொள்ளப்பட்டாலும், முழுக்க முழுக்க செல்பேசியை மட்டும் பயன்படுத்துவது செல்பேசி இதழியலா அல்லது கையில் எடுத்துச் செல்லக்கூடிய எந்த வகையான தொழில்நுட்பத்தையும் உடன் பயன்படுத்துவது செல்பேசி இதழியலா எனும் கேள்வி இருக்கிறது. செல்பேசி கேமரா போதுமானது அல்ல எனும் சூழலில் டி.எஸ்.எல்.ஆர் கேமரா பயன்படுத்தலாம். உதாரணமாக வன விலங்குகளை படம் பிடிப்பது எனில், கூடுதல் துல்லியம் கொண்ட கேமரா நல்லது. அதேபோல செல்பேசியில் படம் பிடித்துவிட்டு லேப்டாப்பில் எடிட் செய்தி கொள்ளலாம். இவையும் செல்பேசி இதழியலின் அம்சங்களாகவே கொள்ளப்படுகின்றன. சூழலுக்கு ஏற்ப சாதங்களை தேர்வு செய்வதே முக்கியம் என கருதப்படுகிறது.

வடிவங்கள் பலவிதம்

பிரதானமாக செல்பேசியை செய்தி சேகரிப்பிற்கு பயன்படுத்துவதுதான் செல்பேசி இதழியலின் ஆதார அம்சம். அது தரக்கூடிய எளிதான அணுகுதல் முக்கியமாக அமைகிறது. அதே நேரத்தில் செல்பேசியில் படம் எடுத்து, தேவையான செயலிகளை பயன்படுத்தி எடிட் செய்து பகிர்வது அடிப்படை செல்பேசி இதழியல் என குவின் சொல்கிறார். மாறாக, செல்பேசி இதழியலுக்காக என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வெரிகோடர் டெக்னாலஜிஸ் நிறுவன மென்பொருள் தொகுப்பை பயன்படுத்தி செய்தி சேகரிப்பது முழு வீச்சிலான செல்பேசி இதழியல் என்கிறார். செல்பேசி செய்தி சேகரிப்பிற்கான பிரத்யேக மென்பொருள்கள் போலவே, பிரத்யேக உபகரணங்கள் தொகுப்பும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

செல்பேசி இதழியல் எனும் போது அதில் வானொலி வசதியும் முக்கிய அங்கம் வகிப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். செல்பேசியில் குரல்களை பதிவு செய்து வெளியிட பிரத்யேக செயலிகள் இருக்கின்றன. குரல் வழி பதிவுகள் மூலம் பாட்காஸ்டிங் ஒலிபரப்பிலும் ஈடுபடலாம். உலகின் பெரும் பகுதி இன்னமும் அச்சு ஊடகம் மற்றும் இணைய ஊடகம் சென்றடைய முடியாதவையாக இருப்பதை மறந்துவிடக்கூடாது. இத்தகைய பின் தங்கிய பகுதிக்கு செய்திகளை கொண்டு செல்லக்கூடிய சிறந்த வழியாக செல்பேசிகள் இருக்கின்றன. அதிலும் செல்பேசி வானொலி வழியாக இத்தகைய பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான செய்திகளை அளிக்கலாம். இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகளுக்கான செல்பேசி வானொலி செய்தி சேவையை வழங்கும் ஜிநெட்ஸ்வாராவை இதற்கான உதாரணமாக குறிப்பிடலாம்.

இவைத் தவிர புகைப்படங்களை தனியேவும் வெளியிடலாம். இன்ஸ்டாகிராம் அல்லது ஸ்னேப்சேட் புகைப்பட பகிர்வு சேவைகள் மூலம் புகைப்படங்களை வெளியிடலாம். மேலும் புகைப்படங்களுடன் குரல் பதிவை இணைத்து ஆடியோ ஸ்லைடு காட்சிகளையும் உருவாக்கலாம். சவுண்ட்ஸ்லைட்ஸ் போன்ற மென்பொருள்கள் இதற்காக இருக்கின்றன. இதே போலவே வீடியோ பதிவு செய்தி வீடியோ அல்லது தொலைக்காட்சி பதிவாக பகிர்ந்து கொள்ளலாம். ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை செல்பேசியிலேயே எடிட் செய்யலாம்.

செய்தியை பதிவு செய்தவுடன், அவற்றை செய்தி அறைக்கு அனுப்பி வைப்பதற்கான முறைகளை அறிந்துகொள்ள வேண்டும். கோப்புகளை அனுப்ப இணைய இணைப்பு போதுமானதா என பார்க்க வேண்டும். வை-பை வசதியை பயன்படுத்தலாம். கோப்புகளை இமெயில் இணைப்பாகவும் அனுப்பலாம். சில நிறுவனங்கள் இதற்கான பிரத்யேக எப்டிபி பகிர்வு வசதியும் அளிக்கின்றன. பகிர்வு வசதியில் பிரச்சனை எனில், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருக்கு கோப்புகளை மாற்றி வேகமாக இணைப்பு மூலம் அனுப்பி வைக்கலாம். 

செய்தியை அனுப்புவதற்கான தொழில்நுட்ப வழிகளை அறிந்து கொள்வதோடு, அவை தொடர்பான பாதுகாப்பு அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, முக்கிய செய்தி எனில் அதை பொது இட வைபையில் பகிர்வது சரியாக இருக்காது. அதி ரகசிய செய்திகளை என்கிரிப்ட் செய்வதும் அவசியமாகலாம். ஒரு சில செயல்கள் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை திரட்டிக் கொள்ளலாம். இந்த அம்சங்களை எல்லாம் அறிந்து பாதுகாப்பான பகிர்வு முறையை தேர்வு செய்ய வேண்டும்.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 4 | மோஜோவுக்கு முன் விஜே! 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP