மோஜோ 25 | செல்பேசி இதழியலில் அறம்!

ஆபாசமான படம் அல்லது கோரமான காட்சி இணையத்தில் பரவுவது செய்தி தான் என்றாலும், அந்தச் செய்தியை வெளியிடும்போது, மூல படத்தை மறு வெளியீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
 | 

மோஜோ 25 | செல்பேசி இதழியலில் அறம்!

இதழியலில் அறம் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தச் செய்தியையும் சேகரித்து வெளியிடும்போது, மற்ற எந்த விஷயத்தையும் விட அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வதை இதழாளர்கள் இன்றியமையாததாக கருதுகின்றனர். ஆசிரியர் குழுவின் வழிகாட்டுதலும், செய்தி சேகரிப்பு தொடர்பான பொதுவான நெறிமுறைகளும் இதற்கு உதவுகின்றன.
 
எந்தச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்பதற்கு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒரு செய்தியை வெளியிட தீர்மானிக்கும்போது, பொதுநலனே அதற்கான ஆதார அம்சமாக அமைகிறது. அதேபோல ஒரு செய்தியை வெளியிடாமல் இருக்க தீர்மானிக்க நேர்ந்தாலும், பொதுநலனே அதற்கான காரணமாக அமைகிறது. எந்த ஒரு செய்தியாலும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் மிகுந்த கவனத்துடனே செய்திகள் வெளியிடப்படுகின்றன. 

செய்தியின் தலைப்பு துவங்கி, அதில் இடம்பெறும் தகவல்கள், அதன் நடை என்று அனைத்து விஷயங்களும் நெறிமுறைக்கு உட்பட்டு அமைந்திருக்க வேண்டும். 

குறிப்பிட்ட மதம் அல்லது இனம், சமூகம் சார்ந்த செய்தி எனில் மிகுந்த கவனத்தோடு கையாளப்படுகிறது. அதேபோல, தனிமனிதர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செய்திகளும் தகவல்களும் கவனமாக பரிசீலிக்கப்படுகின்றன. இதழியிலின் அறம் பற்றி தனியே விவரிக்கலாம் என்றாலும், இதழிலுக்கான அடிப்படை அறம் செல்பேசி இதழியலுக்கும் பொருந்தும் என்பதை மட்டும் இங்கு நினைவில் கொண்டால் போதும்.

அதே நேரத்தில் செல்பேசி இதழியலின் தன்மை அதற்கே உரிய அறம் சார்ந்த கேள்விகளையும், சிக்கல்களையும் உண்டாக்குவதை மனதில் கொள்ள வேண்டும்.
 
செல்பேசி வாயிலாக செய்தி சேகரித்து வெளியிடும்போது சாத்தியமாகும் உடனடித் தன்மை மற்றும் மற்றவர்கள் அறியாமல் அவர்களை படம்பிடிக்கும் வாய்ப்பு ஆகிய இரண்டு அம்சங்களும் அறம் சார்ந்த சிக்கல்களை உண்டாக்கலாம்.

செல்பேசி இதழியலில் வேகம் முக்கிய அம்சமாக இருக்கிறது. சம்பவ இடத்தில் இருந்து செய்தியை பதிவு செய்தவுடன் அதை உடனே உலகுடன் பகிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பலரும் இந்த உடனடித்தன்மையை விரும்புகின்றனர். ஆனால், ஒரு செய்தி ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு அல்லது விளைவுகளை சீர் தூக்கு பார்ப்பதற்கான நேரம் இல்லாமல் போகிறது. இதனால் தவறுகள் நிகழலாம். அதிலும் குறிப்பாக 'ஸ்டிரீமிங்' என சொல்லப்படும் இணைய நேரலை வசதியை பயன்படுத்த முற்படும்போது எதிர்பாராத தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. இவற்றை உணர்ந்திருப்பதும், எப்போதும் அறம் சார்ந்த செயல்களை மனதில் கொண்டிருப்பதும் இதழாளர்களுக்கு வழிகாட்டும். 

குறிப்பிட்ட செய்தி அல்லது படம் கையில் கிடைத்தவுடன் அதை வெளியிடுவதற்கு முன், அந்தச் செய்தியை வெளியிடுவது அறம் சார்ந்த சட்டகத்திற்குள் வரவில்லை எனும் சந்தேகம் எழுந்தால், அது பற்றி யோசிப்பது நல்லது. இதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட அந்தச் செய்தி வேறு யாராலேனும் பகிரப்படலாம் என்ற எண்ணம் இதழாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. எப்படியும் இணையத்தில் வெளியாகும் வாய்ப்பிருப்பது என்பது அறம் மீறிய செய்திகளை வெளியிடுவதற்கான நியாயமாகாது. 

அதேபோல, ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி பரவலாக பரவிவிட்டது எனும் காரணத்தினாலேயே இதழாளர்கள் தவறான ஒரு செய்தியை தாங்களும் வெளியிடக் கூடாது.  உதாரணத்திற்கு ஆபாசமான படம் அல்லது கோரமான காட்சி இணையத்தில் பரவுவது செய்தி தான் என்றாலும், அந்தச் செய்தியை வெளியிடும்போது, மூல படத்தை மறு வெளியீடு செய்வதை தவிர்க்க வேண்டும். 

செல்பேசி இதழியலில் ஈடுபடும்போது கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், மற்றவர்கள் அறியாமல் அவர்களை படம் பிடிப்பதற்கான வாய்ப்பு. இப்போது பெரும்பாலானோர் கையில் கேமரா வசதி கொண்ட போன் இருப்பதால், எந்த ஒரு நிகழ்வையும் உடனே படம் பிடிக்க முடிகிறது. சில நேரங்களில் இந்தக் காட்சிகள் கேலியாகவும், கிண்டலாகவும் அமையலாம். சில நேரங்களில் இவை முக்கியமானவையாக அமையலாம். சில நேரங்களில் இவை பரபரப்பானவையாக அமையலாம். ஆனால் எந்தச் சூழலிலும் படம் பிடிக்கும் காட்சிகள் மற்றவர்களின் தனி உரிமையை மீறாத வகையில் இருக்க வேண்டும். இன்னொருவர் தனி உரிமையை பாதிக்கும் எந்த ஒரு காட்சியையும் பகிராமல் இருப்பதே சரியானது. 

தற்செயலாக படம் பிடிக்கும் காட்சிகளை பகிர்ந்துகொள்ளும்போது, அதனால் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பாதிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். உண்மைக்கு வலு சேர்க்கக் கூடிய மற்றும் உண்மையை தெளிவுபடுத்த உதவும் காட்சிகளை மட்டுமே பகிர்வது சரியாக இருக்கும். இணையத்தில் குவிந்து கொண்டிருக்கும் குப்பைத் தகவல்களில் இருந்து மக்களை காப்பாற்ற இந்த அறக்கட்டுப்பாடு அவசியம்.

செல்பேசி பயன்பாடு சகஜமாகி இருப்பதால், செல்பேசியால் படம் பிடிக்கப்படுவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் செல்பேசியால் படம் பிடிக்கப்படும்போது அதை பெரும்பாலானோர் ஊடுருவலாகவும் நினைப்பதில்லை. பல முன்னோடி செல்பேசி இதழாளர்கள் நேர்காணலில் ஈடுபடும்போது முன்பின் அறியாத சாமானியர்களும் சரி, பிரபலங்களும் சரி செல்பேசியை ஊடுருவலாக கருதாமல் இயல்பாக கருதுவதை சாதகமான அம்சமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், செல்பேசி ஏற்படுத்தி தரும் இணக்கத்தை தவறாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. திட்டமிட்டு படப்பிடிப்பை மேற்கொள்ளும் போது, சம்பந்தபட்டவர்களிடம் அது பற்றி தெரிவிப்பதே முறை. செல்பேசி கதைகளை உருவாக்கும்போது, அதுபற்றி தெரிவித்து அனுமதி பெற்றே படம்பிடிக்க வேண்டும்.

மேலும், பொது இடங்களில் படம் பிடிப்பது தொடர்பான சட்ட விதிகளையும் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் படம்பிடிக்க அனுமதி தேவை எனில், முறையான அனுமதி பெற வேண்டும். தனி உரிமை மற்றும் சட்ட விதிகள் இரண்டையும் மீறாமல் இருப்பது முக்கியம். சட்ட விதிகள் போலபே காப்புரிமை பொருந்தக்கூடிய இடங்களில் அதற்கான விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். 
செல்பேசி இதழியல் கையில் உள்ள செல்பேசியை ஓர் ஆயுதமாக மாற்றியிருக்கிறது. அதைப் பொறுப்புடன் கையாள வேண்டும்.

இணைய யுகத்தில் யார் வேண்டுமானாலும் செய்தியாளர் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. செல்பேசி இதை மேலும் உறுதியாக்கி உள்ளது. ஆனால், வெளியீட்டு வசதி மட்டுமே ஒருவரை செய்தியாளராக ஆக்கிவிடுவதில்லை. அது ஒரு வாய்ப்பு மட்டுமே. செய்தி சேகரிப்பை தொழில்முறையாக மேற்கொள்வதும், அதை அறம் சார்ந்து செய்வதுமே ஒருவரை இதழாளராக உருவாக்குகிறது. இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 24 | இதழியலில் கதை சொல்லும் கலை!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP