மோஜோ 23 | அகதிகள் வலியை உணர வைத்தவர்!

செல்பேசி இதழியல் தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள வழிகாட்டி புத்தகம், ரான்சைமரின் இந்தச் செய்தி சேகரிப்பு தொடர்பான அறிமுகத்துடனே துவங்குகிறது.
 | 

மோஜோ 23 | அகதிகள் வலியை உணர வைத்தவர்!

அகதிகள் பிரச்னையை வெறும் எண்ணிக்கையாக பார்ப்பதைவிட மோசமானது எதுவும் இருக்க முடியாது. எனினும் பெரும்பாலான நேரங்களில் அதுதான் நடக்கிறது. போர் அல்லது உள்நாட்டு பிரச்னை காரணமாக மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக பிற நாடுகளில் தஞ்சம் அடையும்போது, அவர்கள் பிரச்னை எண்ணிக்கையாக்கப்பட்டு விடுகிறது. 

சிரியாவில் வெடித்த உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் தேடியபோதும் பெரும்பாலும் இதுவே நிகழந்தது. நெரிசல் மிக்க படகுகளில் அகதிகள் நடுக்கடலில் தத்தளிப்பது போன்ற நெஞ்சை உலுக்கும் காட்சிகளும், நாடுகளில் எல்லையில் அகதிகள் அனுமதி கேட்டு பரிவதவிக்கும் வேதனை மிகுந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டாலும், கூட்டம் கூட்டமாக அகதிகள் வருகை என்பது போல செய்திகளை வெளியிடுவதும் வழக்கமானது.

இதற்கு மத்தியில் ஜெர்மனியை சேர்ந்த இளம் நிருபர் ஒருவர், கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை கொண்டு அகதிகளின் வலியையும், கண்ணீரையும் உலகிற்கு உணர வைத்தார். பால் ரான்சைமர் (Paul Ronzheimer) எனும் அந்தச் செய்தியாளர் அகதிகளோடு தானும் ஓர் அகதியாக பயணித்தபடி செய்தி சேகரித்து அவர்கள் நிலையை விளக்கினார். அதோடு வழிநெடுக அவர்களின் கண்ணீர்க் கதைகள் ஸ்மார்ட்போன் வாயிலாக நேரடியாக மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஜெர்மனியின் 'பில்ட்' நாளிதழ் செய்தியாளரான ரான்சைமர், கிரீஸ் நாட்டின் ஒரு தீவில் இருந்து பல ஐரோப்பிய நாடுகள் வழியே பயணித்து இறுதியாக ஜெர்மனி வந்தடைந்ததை அவர்களுடனே பயணித்து ரான்சைமர் பதிவு செய்தார். தான் செய்தியாளராக பணியாற்றிய 'பில்ட்' நாளிதழுக்காக அவர் அகதிகள் நிலை பற்றிய செய்தியை அளித்ததோடு நிற்காமல், இடைப்பட்ட காலத்தில் தனிப்பட்ட அகதிகளின் உணர்வுகளை அவர்கள் வாய்மொழி மூலமே பதிவு செய்து சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டார். அவரது கையில் இருந்த ஸ்மார்ட்போன் இதை சாத்தியமாக்கியது.

சிரியா அகதிகளின் நிலை மாபெரும் மனிதநேய நெருக்கடியாக அமைந்தாலும், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்தப் பிரச்னை வேறு விதமாகவும் பார்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் அகதிகள் வந்து குவியத் துவங்கிய நிலையில், அவர்கள் அனைவருக்கும் தஞ்சம் அளிக்க முடியுமா? எனும் விவாதம் எழுந்தது. அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் எல்லைகளில் திண்டாடும் பரிதாபமும் உண்டானது. இதனிடையே அகதிகள் பிரச்னை குறித்து செய்தி சேகரிகப்பட்ட விவாதமும் எழுந்தது.

இந்த நிலையில்தான், ரான்சைமர் தனது ஸ்மார்ட்போன் வாயிலாக அகதிகளை நேரடியாக பேச வைத்து மக்கள் கேட்க வைத்தார். அகதிகள் நிலை குறித்த கருத்துக்களை கேட்டறிந்து அவற்றை தொகுப்பாக்கி வெளியிட்ட செய்திகளுக்கு மாறாக, அகதிகள் தங்கள் பரிதவிப்பின் நிலையை உள்ளது உள்ளவாறு ரான்சைமரிடம் பகிர்ந்து கொண்டனர். அவர் அதை எந்தவித கத்திரிப்பும் இல்லாமல் அப்படியே நேரடி ஒளிபர்ப்பிற்கான பெரிஸ்கோப் சேவை மூலம் பகிர்ந்து கொண்டார். டிவிட்டர் மூலம் இந்தக் காட்சிகள் பார்த்தவை உள்ளம் உருகியது.

இந்தப் பகிர்வு துவங்கிய பிறகு ட்விட்டரில் ரான்ஸைமருக்கு இருந்த பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. "பெரிய டிவி கேமரா போன்றவை இல்லாமல் வெறும் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு பேசியதால் அகதிகள் எந்த ஊடுருவலையும் உணராமல் தங்கள் நிலையை கொட்டித் தீர்த்தனர்" என்கிறார் ரான்சைமர். 

"அது மட்டும் அல்ல, நாடுகளின் எல்லையை கடக்கும்போது டிவி கேமராவை கையில் வைத்துக்கொண்டு உள்ளே செல்ல அனுமதி கிடைத்திருக்காது, ஆனால் ஸ்மார்ட்போன் மட்டுமே வைத்திருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் கண்களை உறுத்தவில்லை" என்று சொல்கிறார். எந்தச் சூழலிலும் அதிக இடையூறு இல்லாமல் செய்தி சேகரிக்க உதவும் இந்தத் தன்மையை செல்பேசி இதழியலின் ஆதார பலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பெரிஸ்கோப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்த்த மக்கள், அவர்கள் நிலை குறித்த உணர்வுகளைக் கருத்துகளாகப் பகிர்ந்து கொண்டதோடு ஒரு சில கேள்விகளையும் எழுப்பினர். "உடமைகளை எல்லாம் விட்டு வெளியேறிவந்த அகதிகள் சிலர் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பது எப்படி? எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருப்பது எப்படி?" போன்ற கேள்விகளை மக்கள் கேட்டனர். 

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகதிகள் நேரடியாக பதில் அளித்தனர். "இந்த கண்ணாடிகள் வெறும் 2 யூரோ கண்ணாடிகள்" என பதில் அளித்தவர்கள், சக அகதிகளை தொடர்பு கொள்ளவும், உதவி கோரவும் ஸ்மார்ட்போன் அவசியம் என்றனர். அது மட்டும் அல்ல நடுக்கடலில் தவிக்கும்போது போனின் ஜிபிஎஸ்தான் வழிகாட்டி என்றும் கூறினர்.

இந்தக் கேள்விகள் தவிர பெரும்பாலான கேள்விகள், 'அகதிகளுக்கு எப்படி உதவ முடியும்?' என்பதாகவே அமைந்திருந்தன. அகதிகள் ஜெர்மனி எல்லையில் நுழைந்தபோது அந்தத் தருணத்தை ஒளிபரப்பியவர், அந்தக் காட்சியை படம் எடுக்கத்தவறிவிட்டார். அதனால் மறுநாள் அவரது நாளிதழில் இந்தச் செய்தி வெளியானபோது அதற்கான படம் இல்லை. அதற்கு பதிலாக நாளிதழ், பெரிஸ்கோப் ஒளிபரப்பு காட்சியின் ஸ்கிரின்ஷாட்டை முதல் பக்கத்தில் செய்தியுடன் வெளியிட்டது. அது மட்டும் அல்லாமல், பெரிஸ்கோப்பில் பகிரப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டு பின்னர் 16 நிமிட செய்திப்படமாக தொகுத்து வெளியிடப்பட்டது.

"வருங்காலத்தில் பொருத்தமான சூழல்களில் பெரிஸ்கோப் ஒளிபரப்பை பயன்படுத்த இந்த அனுபவம் கற்றுத்தந்த விஷயங்கள் உதவும்" என்கிறார் ரான்சைமர். "கேமராவில் படம் பிடித்து ஒளிபரப்பினால் மட்டும் போதாது, அதனுடன் நான் கண்ட காட்சிகள் தொடர்பான கருத்துக்களையும் விளக்கத்தையும் அளிப்பது முக்கியம்" என்கிறார். 

அகதிகள் பற்றிய செய்தி சேகரிப்பில், தனிப்பட்ட தன்மை முக்கியம் என்றும், பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி அவர்கள் எப்படி உணர்கின்றனர் என்பதை பதிவு செய்வதும் அவசியம் என்றும் அவர் விவரிக்கிறார். செய்திகளை சொல்வதில் நவீன தொழில்நுட்பம் புதிய வழியாக வந்திருக்கிறது என்கிறார் அவர்.

செல்பேசி இதழியல் தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள வழிகாட்டி புத்தகம், ரான்சைமரின் இந்தச் செய்தி சேகரிப்பு தொடர்பான அறிமுகத்துடனே துவங்குகிறது. செல்பேசி இதழியில் திறந்துவிட்டுள்ள எண்ணற்ற நுழைவு வாயில்களில் ஒன்றாக இந்த பெருங்கதை அமைகிறது.

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 22 | செல்பேசி இதழியல் இங்கே, இதழாளர்கள் எங்கே?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP