மோஜோ - 2 | செல்பேசி இதழியலின் தேவை என்ன?

சிலர் முதன்முதலாக செல்பேசி இதழியலின் தேவையை களத்தில் உணர்ந்த தருணங்களைப் பார்ப்போம்.
 | 

மோஜோ - 2 | செல்பேசி இதழியலின் தேவை என்ன?

மோஜோ - 2 | செல்பேசி இதழியலின் தேவை என்ன?இதழியலும் தொழில்நுட்பமும் எப்போதுமே நெருக்கமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன தொழில்நுட்பத்தின் அறிமுகம் இதழியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குடென்பர்கின் அச்சு இயந்திரம்தான் அச்சு ஊடகத்திற்கு வித்திட்டது. வானொலி, தொலைக்காட்சி நுட்பங்கள் காட்சி ஊடகத்திற்கு வழி வகுத்தன என்றால், புகைப்படக் கலை, டைப்ரைட்டர் உள்ளிட்ட நுட்பங்களை இதழியல் வேறு எந்தத் துறைகளையும் விட சிறப்பாக உள்வாங்கி கொண்டது.

அதுமட்டும் அல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சியே இதழியலை நவீனமயமாக்கி கொண்டிருக்கிறது. இணையம் மற்றும் டிஜிட்டல் நுட்பங்கள் இதற்கான அண்மைக்கால உதாரணம் என்றால், தந்தி சேவை இப்போது மறக்கப்பட்டுவிட்ட மகத்தான உதாரணமாக அமைகிறது.

உண்மையில், விக்டோரியா காலத்து இணையம் என தொழில்நுட்ப எழுத்தாளர் டாம் ஸ்டாண்டேஜால் (Tom Standage) வர்ணிக்கப்பட்ட தந்தி சேவை 1880களில் பரவலான பிறகுதான் இதழியலில் புதிய வேகம் பிறந்தது. அதுவரை இதழியல் என்பது, பிரதானமாக உள்ளுர் செய்திகள் சார்ந்ததாகவே இருந்தது. சர்வதேச அல்லது வெளிநாட்டு செய்திகள் என்பது கப்பல்கள் வருகையை சார்ந்தே இருந்தன. துறைமுகத்திற்கு கப்பல் வருகை தரும்போது செய்தியாளர்கள் அதில் வரும் வர்த்தர்களை சந்தித்துப் பேசி வெளிநாட்டு செய்திகளை சேகரித்து வெளியிடுவார்கள். அவை நிகழ்ந்து பல மாதங்கள் ஆகியிருக்கலாம். ஆனால் தொலைதூர பிராந்தியங்களில் நடப்பவற்றை தெரிந்துகொள்வது அவசியமாக இருந்ததால், இந்தத் தாமதம் பொருட்படுத்தப்படவில்லை.

தந்தியின் வல்லமை

இவ்வளவு ஏன், 1776-ல் நிகழ்ந்த அமெரிக்க சுதந்திர பிரகடனம், பிரட்டனில் உள்ள மக்களுக்கு தெரிய 48 நாட்கள் ஆனது. இதற்கு மாறாக, இங்கிலாந்தில் 1845-ல், ஜாட் டாவல் என்பவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு லண்டன் ரயிலில் ஏறி தப்பிச்செல்ல முயன்றபோது, அவர் லண்டன் பேடிங்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொலையாளி பற்றிய விவரம் தந்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டதே இதற்கு காரணம். இந்தச் சம்பவமே தந்தியின் ஆற்றலை பற்றிய பொதுமக்கள் மத்தியில் ஆழ பதிய வைத்தது. 

இதனிடையே, போர் பொதுமக்கள் மத்தியில் செய்திப் பசியை உண்டாக்கியது. போர் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் சேகரித்து அனுப்பி வைக்கும் தேவை செய்தியாளர்கள், வேகம் மற்றும் செயல்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களை நாட வைத்தது. சுடச்சுட வெளியாகும் புதிய செய்திகளுக்கான தேவை, மின்சாரம், நீராவி இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து வளர்ந்தது. 

தந்தி சேவைக்குப் பிறகு, செய்தியாளர்கள் தங்களின் இரு முக்கிய தேவைகளான வேகம் மற்றும் செயல்திறனுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை இருக பற்றிக்கொண்டனர். தொலைக்காட்சி நுட்பம் நேரடி ஒளிபரப்பை சாத்தியமாக்கியது என்றால் இணையத்தின் எழுச்சி, ரியல் டைம் நியூஸ் எனும் அற்புதத்தை தினசரி நிகழ்வாக்கியது. சமூக ஊடகங்கள் இதை மேலும் பரவலாக்கியுள்ளன.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த பெரும் பாய்ச்சலாகவே 2007-க்கு பிறகு செல்பேசி சார்ந்த இதழியல் முயற்சிகள் அமைந்தன. 

செல்பேசியின் உள்ளார்ந்த ஆற்றலை பயன்படுத்தி செய்தியாளர்கள் ஒலி வடிவ செய்திகளையும், காணொலி செய்திகளையும் நேரடியாக ஒளிபரப்ப முடிந்தது இதழியலின் புதிய பாதையாக அமைந்துள்ளது. உடனடி செய்திகளை சில வரிகளில் பதிவு செய்வதும், அவற்றுடன் புகைப்படங்களை செய்தி அறைக்கு அனுப்பி வைக்க முடிவதும் இதழியலின் இரண்டாம் தன்மையாக மாறியிருக்கிறது. செல்பேசி ஆற்றலை சரியாக உள்வாங்கிக் கொண்டு அதை செய்தி சேகரிப்புக்கு புதுமையான முறையில் பயன்படுத்த துவங்கிய முன்னோடி இதழாளர்கள் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இவர்களே செல்பேசி இதழாளர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் சிலர் முதன்முறையாக செல்பேசி இதழியலின் தேவையை களத்தில் உணர்ந்த தருணங்கள் மூலம் இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

வியத்தகு முன்முயற்சிகள்

அமெரிக்க தொலைக்காட்சி செய்தியாளரான ஜெரேமே ஜோஜோலா (Jeremy Jojola) 2009-ல் நியூமெக்சிகோ பகுதியில் இருந்து நேரடியாக செய்தி வழங்கினார். அப்போது அவரது கையில் ஐபோன் மட்டும் இருந்தது. ஐபோனில் நிறுவப்பட்ட குய்க் (http://qik.com/) எனும் மென்பொருள் மூலம் அவர் நேரடி ஒளிபரப்பு செய்தார். பொதுவாக தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பிற்கு அதற்கான பிரத்யேக வாகனம், பணியாளர்கள் குழு அவசியம். இதற்கு லட்சக்கணக்கில் செலவாகலாம். ஆனால் ஜோஜோலா தனது நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் ஐபோனில் நேரடி ஒளிபரப்பு வழங்கினார். ஒளிப்பதிவு கலைஞர் அல்லது நேரடி ஒளிபரப்பு வாகனம் இல்லாமல் தனியே செய்தி ஒளிபரப்பும் இந்த நாளுக்காகத் தான் காத்திருந்ததாக இந்த அனுபவம் பற்றி அவர் கூறியிருந்தார். இந்தத் தொழில்நுட்பம் மேலும் விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் ஆகும் என்றும் அவர் கணித்திருந்தார். வரும் ஆண்டுகளில் இத்தகைய தொழில்நுட்பத்தை தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது இதழாளர்களுக்கு சகஜமாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

2010-ம் ஆண்டில், இதழியல் மாணவர்களான எரிகா ஜுக்கோ மற்றும் பிரையன் பெல்லட் ஆகியோர் அமெரிக்காவின் தேசிய ஒளிபரப்பு நிறுவனங்கள் சங்கத்தின் மாநாட்டின்போது தொலைக்காட்சி செய்தியாளர்களாக செயல்பட்டனர். இருவரும் ஐபோனை மட்டும் வைத்துக்கொண்டு செய்தி வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் வீடியோ எனும் மென்பொருள் உதவியுடன் அவர்கள் அங்கேயே வீடியோ எடுத்து அதை எடிட் செய்து ஒளிபரப்பினர்.

2008-ம் ஆண்டில் அல்ஜஸிரா ஒளிப்பதிவாளரான லைத் முஷ்டாக் (Laith Mushtaq) ஆப்பிரிக்க நாடான சாட் சென்றிருந்தார். அப்போது அவர் ஓட்டல் அறையில் தனது உடமைகளை வைத்துவிட்டு புதிய சிம்கார்டு வாங்குவதற்காக வெளியே சென்றார். அந்த நேரம் பார்த்து அருகே இருந்த மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்தது. முஷ்டாக் தனது கேமராவை ஓட்டல் அறையிலேயே வைத்துவிட்டு வந்திருந்தார். எனவே கையில் இருந்த போனில் குண்டுவெடிப்பு காட்சிகளை படம்பிடித்து செய்தி சேகரித்தார். இந்த காணொலி செய்தி அல்ஜஸிரா தொலைக்காட்சியில் 20 நிமிடங்கள் ஒளிபரப்பானது.

2008-ல் அமெரிக்க புகைப்பட இதழாளரான ஜிம் லாங் என்பிசி நியூஸ் நிறுவனத்திற்காக ஆப்பிரிக்காவில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சுற்றுப்பயணம் செய்தபோது ஜிம் லாங் தனது நோக்கியா போனில் குவிக் மென்பொருள் மூலம் ராக் நட்சத்திரம் பாப் ஜெல்டாப்பை பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்பினார்.

நெதர்லாந்தை சேர்ந்த இளம் செய்தியாளரான டிவான் பெய்ரட்ஸ் (TwanSpierts) 2015-ம் ஆண்டில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் குறித்து செல்போனிலேயே செய்தி சேகரித்து ஒளிபரப்பினார். டிவான் அப்போது சுயேட்சை செய்தியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் பணியாற்றிய செய்தி நிறுவனம் ஒன்று, வீடியோ கேமரா குழு கிடைக்காததால் வாடகைக்கு ஒரு குழுவை அனுப்பி வைக்க திட்டமிட்டது. ஆனால் இது வீண் செலவு என நினைத்த டிவான் கால்பந்து போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்பை தனது செல்போனிலேயே படம் பிடித்து அனுப்பினார். ஒரு டிரைபாடு சாதனம் மற்றும் மைக்கை கொண்டு அவர் இந்த ஒளிபரப்பை செய்தார். சேனலில் உள்ளவர்கள் யாருக்கும் தரத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன்பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com 

முந்தைய அத்தியாயம்: மோஜோ - 1 | 'செல்பேசி இதழியல்' ஆயுதத்தின் அறிமுகம்!

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP