மோஜோ 18 | மோஜோ மகாராஜாவும் 10 கட்டளைகளும்!

ஒளிபரப்பு தரத்திலான வீடியோவை ஐபோனில் உருவாக்க முடியும் என்பது அவரது நிறுவனத்தில் வியப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கியது.
 | 

மோஜோ 18 | மோஜோ மகாராஜாவும் 10 கட்டளைகளும்!

மோஜோ முன்னோடிகளில் தனி இடம் கொடுக்கப்பட வேண்டியவர் கிலென் முல்கஹி (Glen Mulcahy). ஏனெனில், மோஜோவின் ஆற்றலை முழு அளவில் உணர்ந்தவர் என்பதோடு, அதை மற்றவர்களும் உணர வேண்டும் எனும் ஆர்வத்தோடு பாடுபடுபவர் முல்கஹி. இதற்காக என்றே மோஜோகான் மாநாட்டை துவக்கி நடத்தியவர். மோஜோ இதழாளர், மோஜோ பயிற்சியாளர், மோஜோ தூதர் என பன்முகம் கொண்டவர். முக்கியமாக மோஜோவின் ஆற்றலை உணர்ந்த தொலைநோக்காளர். மோஜா இதழாளர்களால் மோஜோ மகாராஜா என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படுபவர்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான முல்கஹி அந்நாட்டின் தேசிய ஊடகமான ஆர்.டி.இ டெக்னாலஜியில் வீடியோ இதழாளராக இருந்து பின்னர் புதுமைப் பிரிவின் தலைவராக உயர்ந்தவர். 2010-களில் அவர் தனது நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இதழாளர்களுக்கு வீடியோ இதழியலில் பயிற்சி அளித்து வந்தார். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர் என்ற முறையில் அவருக்கு ஸ்மார்ட்போன் மீதும் தனி ஈடுபாடு இருந்தது. இதன் பயனாக செய்தி சேகரிப்பு பணியில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த சோதனையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 2007-ம் ஆண்டில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செல்பேசி இதழியல் சார்ந்த சோதனையில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே முல்கஹியும், அதேபோன்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் நவீன செல்பேசியாக விளங்கிய நோக்கியா என் 95 செல்பேசியை கொண்டு அவர் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

எனினும், ஐபோன் அறிமுகமான பிறகு தனது பரிசோதனைகளையும் ஐபோனுக்கு மாற்றிக்கொண்டார். ஐபோனின் அடுத்த மாதிரிகள் மேம்பட்டதாக அமைந்த நிலையில் 2010-ல் ஐபோன் 4 அறிமுகமான போது அவரது முயற்சி தீவிரமானது. அப்போது வீடியோ இதழியல் பயிற்சி அளிப்பதற்காக ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரம் சென்றிருந்தபோது, தான் உருவாக்கியிருந்த ஐபோன் சாதனத் தொகுப்பை கொண்டு, வீடியோ செய்தி ஒன்றை பதிவு செய்து, அதை தனது நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். போனில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை சொல்லாமல், அதன் தரம் பற்றி மட்டும் கருத்து கூறுமாறு ஒளிபரப்பு பொறியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்களும் நன்றாக இருப்பதாக பச்சைக்கொடி காட்டவே மெல்கஹிக்கு ஏதோ புதிதாக உணர்ந்து கொண்டது போல இருந்தது. 

ஆக, கேமராவில் படம் பிடிப்பது போலவே ஐபோனில் செய்திகளை படம் பிடிக்கலாம் என்ற அவரது நம்பிக்கை இதன் மூலம் உறுதியானது. நாடு திரும்பியதும் அலுவலகத்தில் வீடியோ இதழாளர் ஒருவரிடம் ஐபோன் தொகுப்பை கொடுத்து வீடியோ செய்தி ஒன்றை உருவாக்க வைத்தார். இந்த வீடியோவும் தரக்கட்டுப்பாட்டு சோதனையை கடந்து டிவியில் ஒளிபரப்பானது. அதன் பிறகே முல்கஹி அந்த வீடியோ ஐபோனில் எடுக்கப்பட்ட விவரத்தை கூறினார். 

ஒளிபரப்பு தரத்திலான வீடியோவை ஐபோனில் உருவாக்க முடியும் என்பது அவரது நிறுவனத்தில் வியப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கியது. நிறுவன தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த நடவடிக்கையை அச்சத்துடன் பார்த்தனர். நிறுவன தலைவர் முல்கஹியுடம் இது பற்றி தனியே விசாரித்து அறிக்கை கோரினார். முல்கஹி அளித்த அறிக்கை அடிப்படையில், ஆர்.டி.இ இதழாளர்களுக்கு ஐபோனை பயன்படுத்தி வீடியோ உருவாக்க பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. இப்படித்தான் ஆர்.டி.இ அலுவலகத்தில் செல்பேசி இதழியல் பயிற்சி துவங்கியது. முதல் கட்ட சோதனைக்குப் பிறகு இந்த பயிற்சி முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

செல்பேசியிலேயே படம் பிடித்து அதிலேயே எடிட் செய்து, ஒளிபரப்பு தரத்திலான செய்திகளை உருவாக்கும் வசதி அளித்த சாத்தியங்களை புரிந்துகொண்ட ஆர்.டி.இ தொலைக்காட்சி இந்தப் பயிற்சியை மேலும் முறைப்படுத்தியது. அதன் இதழாளர்கள் பலரும் செல்பேசி சார்ந்த கதைகளை உருவாக்கத் துவங்கினர்.

இதனிடையே முல்கஹி மற்ற ஊடக நிறுவனங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த செல்பேசி இதழியல் முயற்சிகள் குறித்து அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது அங்குள்ள செல்பேசி இதழியல் முயற்சிகளை அறிந்துகொள்ள முற்பட்டார். 

வீடியோ இதழலியலின் நீட்சியாகவே செல்பேசி இதழியலை கருதியவர் என்பதால், ஊடகத்துறை வேகமாக செல்பேசி இதழியலை தழுவிக்கொள்ள வேண்டும் என விரும்பினார். ஆனால் அவர் நினைத்த அளவுக்கு வேகமான மாற்றம் நிகழாததால் அதிருப்தி அடைந்தார். பல ஊடகங்களில் செல்பேசி இதழியல் சார்ந்த முயற்சிகள் வரவேற்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் சோதனை முயற்சியாகவே இருந்தது. அது மட்டும் அல்ல, செல்பேசியில் வீடியோ செய்திகளை உருவாக்க முடியும் என்று சொல்லப்படுவதை பலரும் சந்தேகத்துடனே பார்த்தனர். 

இதனிடையே, முல்கஹியிடம் செல்பேசி இதழியல் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் ஊடகங்களுக்கு திரும்பியபோது அங்கு பாராமுகத்தை எதிர்கொண்டது பற்றி அவரிடம் குறைபட்டுக் கொண்டனர். இதனால் மேலும் ஆவேசம் அடைந்தவர் செல்பேசி இதழியலை பிரபலமாக்கும் வகையிலும், இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை ஒருங்கிணைப்பதற்காகவும், டப்ளின் நகரில் மோஜோகான் மாநாட்டை ஏற்பாடு செய்தார். அவரது முன்முயற்சியில் ஆர்.டி.இ தொலைக்காட்சி ஆதரவுடன் இந்த மாநாடு நடைபெற்றது. 
2015-ம் முதல் மோஜோகான் மாநாடு நடைபெற்றது. பின்னர் 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் அடுத்த மாநாடுகள் நடைபெற்றன. இந்த மாநாட்டில் செல்பேசி இதழியல் முன்னோடிகள் தங்கள் அனுபங்களை பகிர்ந்து கொண்டதும், தொழில்நுட்ப நிறுவனங்கள் மோஜோவுக்கான புதிய சாதனங்கள் மற்றும் செயலிகளை அறிமுகம் செய்ததும் செல்பேசி இதழியலுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. வல்லுனர்கள் செல்பேசி இதழியலுக்கான அடிப்படை நுணுக்கங்களையும் பகிர்ந்துகொண்டு ஊடகவியாளர்களிடம் ஆர்வத்தை வளர்த்தனர். மோஜோகான் மூலம் செல்பேசி இதழியல் மீதான கவனத்தையும் ஈர்ப்பையும் முல்கஹி அதிகரித்தார். இது அவரது முக்கிய பங்களிப்பாக அமைகிறது.

இதுதவிர செல்பேசி இதழியல் பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி வருபவர், வலைப்பதிவு மூலம் தனது அனுபவக் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். செல்பேசி இதழியல் அடிப்படைகள் தொடர்பான வீடியோக்களையும் உருவாக்கி பகிர்ந்துகொண்டு வருகிறார்.
செல்பேசி இதழியலுக்கான நடமாடும் களஞ்சியமாக திகழும் முல்கஹி, தான் பணிபுரிந்த ஆர்.டி.இ நிறுவனத்தில் இருந்து விலகி தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செல்பேசி இதழியல் பயிற்சி திட்டத்திற்கு பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார்.
 
செல்பேசி இதழியலை பொறுத்தவரை அவரது பார்வையும் பரந்து விரிந்ததாக இருக்கிறது. தூய மோஜோவாதிகள் போல, செல்பேசி இதழியல் என்பது செல்பேசியை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்படுவது என்பது போன்ற கராறான பார்வை அவரிடம் இல்லை. செல்பேசியை அடிப்படையாக கொண்டு செயல்படும் அதே நேரத்தில், சொல்லப்படும் கதைகளுக்கு ஏற்ப டி.எஸ்.எல்.ஆர் கேமரா அல்லது எடிட்டிங்கிற்கு லாப்டாப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது.

இதழாளர்களுக்கு செல்பேசி அளிக்கும் வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு டிஜிட்டல் கதை சொல்லலில் புதிய எல்லைகளை தொட வேண்டும் என்பதே அவரை இயக்கி கொண்டிருக்கிறது. அதே உத்வேகத்தை மற்றவர்களிடமும் உருவாக்க முயன்று வரும் மோஜோ ஆசானாக அவர் செயல்பட்டு வருகிறார்.

மோஜோ தொடர்பாக முல்கஹி பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியமானவை. அவற்றில் இருந்து:

• அனைத்து இதழாளர்களும், அவர்கள் பணியாற்றும் ஊடக வகையை மீறி ஸ்மார்ட்போன் மூலம் வீடியோவை பதிவு செய்யும் ஆற்றலை பெற வேண்டும். இதழாளர்கள் அடிப்படையில் கதைசொல்லிகள் என்பதால் அழகான காணொலி கதைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை கற்றுக்கொள்ளாமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை. காட்சிரீதியாக கதை சொல்லுதல் என்பது இப்போது இணையத்தில் நியதியாகி இருக்கிறது. செல்பேசியில் இது இன்னமும் அவசியமாகிறது.

• இதழாளர்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் (ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்) நல்ல படங்களை எடுக்க, வீடியோ படம் எடுக்க, அதை எடிட் செய்ய, ஒலிப்பதிவு செய்ய, ஒரு செய்தியை எடுத்து முடித்து பதிவேற்றக்கூடிய வாய்ப்பு கொண்டதாக இருக்கும். ஆனால் இவை எல்லாம் ஒரு துளி தான்., புகைப்பட மான்டேஜ்கள், வீடியோ அல்லது ஆடியோ ஸ்டீரிமிங் ஆகிய வாய்ப்புகள் உள்ளன. இவற்றை வெகுசில இதழாளர்களே பயன்படுத்துகின்றனர். இவைத் தவிர தகவல் தொடர்பு மற்றும் ஆய்வுக்கான சாதனமாகவும் அவை தொடர்கின்றன.

• எந்த இணைய செய்தி தளத்திலும் வீடியோ முக்கிய அங்கம் வகிக்கிறது. வரி வடிவ செய்தி மற்றும் புகைப்படத்தை மட்டுமே சார்ந்திருக்கும் இணையதளம் தாக்குப்பிடிக்க தடுமாறும். இணையம் மற்றும் செல்பேசியில் பார்வையாளர்கள் நுகரும் வீடியோ அளவை பார்க்கும்போது வீடியோ தான் அவர்கள் தேவை என்பதை புரிந்து கொள்ளலாம்.
 
• பெரிய டிவி நிறுவனங்கள் செல்பேசியை பயன்படுத்த துவங்கியிருக்கின்றன. ஆனால் அவற்றின் வழிகள் மாறுபடுகின்றன. நார்வேயின் என்.ஆர்.கே தொலைக்காட்சி, இதழாளர்கள் ஒரு செய்தியை சமர்பித்ததுமே இணையத்தில் அதன் 30 நொடி வீடியோவை பதிவேற்றுகிறது. பிபிசி போன்ற நிறுவனங்கள் செய்தி சேகரிப்பதற்கான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் அல்ஜஸிரா ஆபத்தான இடங்களில் தங்கள் இதழாளர்கள் மீதான கவனத்தை தவிர்ப்பதற்காக செல்பேசியை பயன்படுத்துகிறது. ஆர்.டி.இ செல்பேசியை முழுமையான உள்ளடக்க உருவாக்க சாதனமாக பயன்படுத்தி வருகிறது.

• ஆர்.டி.இ தொலைக்காட்சியில் எங்களின் இதழாளர்கள் ஒளிபரப்பிற்கான செய்திகளை முழுவதும் ஐபோனிலேயே உருவாக்கியுள்ளனர் என்றாலும் இது விதிவிலக்காகவே இருக்கிறது. பரந்த நோக்கில் பார்த்தால் 150 இதழாளர்களுக்கு செல்பேசியில் செய்தி சேகரிக்க பயிற்சி அளித்திருக்கிறோம். பலவகையான கதை சொல்லல் செயலிகளையும் சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறோம். 

• தொலைக்காட்சி கேமராமேன் ஸ்மார்ட்போன் மூலம் படம் பிடிப்பாரா எனும் கேள்விக்கு புத்திசாலி கேமராமேன் அவ்வாறு செய்வார் என பதில் சொல்வேன். அவர்களைப் பொருத்தவரை இது வேறுவிதமான பலன்களை அளிக்கும், வரம்புகளை கொண்ட வேறு கேமராவாக நினைப்பார்கள் என்றே கருதுகிறேன். முக்கியமான விஷயம் என்னவெனில், கேமராமேன் அல்லது இதழாளர்கள் எப்போதுமே தங்கள் வசம் கேமரா வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள். உங்கள் கையில் வைத்திருக்கும் கேமராவே சிறந்தது எனும் வாசகம் அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டாலும் அதுவே உண்மை. ஒரு செய்தி நிகழும்போது நல்ல வீடியோவை எடுக்கும் நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் வீடியோவை எடிட் செய்து, தொகுத்து அனுப்பி வைக்கும் ஆற்றல் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

• பகிர்ந்து கொள்ளுதலே புதிய நியதி எனும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களில் நிகழும் அனைத்தும் இந்த பகிர்தலை தான் உறுதிப்படுத்துகிறது. சமூக ஊடகம் என்ன செய்திருக்கிறது என்பதை நாமும் கவனிக்க வேண்டும். ஒரு காலத்தில் டிவி நிலையங்கள் தங்கள் சிறிய இடத்தில் இருந்து கொண்டு கடவுளின் குரல் போல நினைத்துக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது பார்வையாளர்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அதை வெளிப்படுத்துகின்றனர். சமூக ஊடகம் எல்லோரையும் பொறுப்பேற்க வைத்திருக்கிறது. இப்போது பதில் கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. இது மிகவும் மதிப்பு வாய்ந்தது.

• செல்பேசியில் பகிரக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்க ஒளிபரப்பிலான கேமரா வேண்டும் என்ற அவசியம் இல்லை. செல்பேசியில் உருவாக்கி, செல்பேசியில் எடிட் செய்து செல்பேசியில் வழங்கும் ஒரு செல்பேசி சார்ந்த சூழல் உருவாகி கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

• இன்னமும் டிவி பார்க்கும்போது மக்கள் குறிப்பிட்ட தரத்தை எதிர்பார்க்கின்றனர். நீங்கள் செல்பேசியில் விளையாட்டு போட்டிகளை வழங்க முடியாது. ஜூம் செய்யும் திறன் கொண்ட ஒளிபரப்பு தரத்திலான கேமரா தேவை. ஆனால் லக்சம்பர்க் நாட்டில் லெமன் புளு தனது டிவி நிகழ்ச்சிகாக செல்பேசியை பயன்படுத்துவது சுவாரஸ்யமான ஆய்வு உதாரணமாக திகழ்கிறது.

• செல்பேசி இதழியலுக்கு நல்ல ஸ்மார்ட்போன், சேமிப்புத்திறன், செயலிகள் போதுமானவை. துணை உபகரணங்கள் இருந்தால் நல்லது.

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 17 | மக்கள் கதைகளை தேடி சைக்கிளில் செல்பவர்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP