மோஜோ 17 | மக்கள் கதைகளை தேடி சைக்கிளில் செல்பவர்!

சியான் மெக்கோமார்க் சைக்கிளில் செல்லும் காட்சி உற்சாகம் அளிக்கக் கூடியது. சியானின் சைக்கிள் பயணம் பற்றி தெரிந்துகொண்டால் இதற்கான காரணம் உங்களுக்கே புரியும்.
 | 

மோஜோ 17 | மக்கள் கதைகளை தேடி சைக்கிளில் செல்பவர்!

சியான் மெக்கோமார்க் (Cian McCormack) சைக்கிளில் செல்லும் காட்சி உற்சாகம் அளிக்கக் கூடியது. சியானின் சைக்கிள் பயணம் பற்றி தெரிந்துகொண்டால் இதற்கான காரணம் உங்களுக்கே புரியும்.

சியான் கதைகளை தேடி சைக்கிளில் செல்கிறார். இந்தப் பயணத்தில் சந்திக்கும் சுவாரஸ்யமான மனிதர்களையும், அவர்களின் கதைகளையும், சைக்கிளில் இருந்தபடியே ஒளிபரப்புகிறார். இந்த உடனடித்தன்மையும், அவர் தேடிச்செல்லும் கதைகளின் உயிரோட்டமும் நேயர்களை கவர்ந்திழுக்கிறது. அவரது சைக்கிள் பயணம் ஆண்டு நிகழ்வாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்பேசி இதழியலில் ஈடுபட்டு வரும் இதழாளர்களில் சியானும் முக்கியமானவர். செல்பேசி இதழியலின் சாத்தியங்களையும், வீச்சையும் உணர்த்தும் வகையில் அவரது சைக்கிள் பயணம் அமைகிறது. 

அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்த சியான், தான் பணியாற்றும் ஆர்.டி.இ ரேடியோ-1 வானொலிக்காக ஆண்டுதோறும் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு, மக்களின் கதைகளை கேட்க வைத்து வருகிறார்.

இந்த வானொலியின் மார்னிங் அயர்லாந்து நிகழ்ச்சி செய்தியாளரான சியான், வழக்கமான செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதோடு, ஆண்டுதோறும் எட்டு நாட்கள் சைக்கிளில் அயர்லாந்து நாட்டின் பகுதிகளை சுற்றி வருகிறார். 'சைக்கிளில் அயர்லாந்து' (அயர்லாந்து பை பைக்) எனும் பெயரிலான இந்த நிகழ்ச்சியின்போது அவர் வழிநெடுகே அமைந்திருக்கும் கிராமங்கள் மற்றும் சிற்றூர்களில் உள்ள மனிதர்களை சந்தித்துப் பேசி அவர்கள் கதையை ஒளிபரப்புகிறார்.

அவரும் ஆர்வத்துடன் மக்களின் கதைகளை தேடிச் செல்கிறார் என்றால், மக்களும் அவரை சந்தித்து தங்கள் கதைகளை சொல்ல ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். செல்பேசி இதழியல்தான் இதை சாத்தியமாக்கியிருக்கிறது.

 
சியான் சைக்கிளில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள காரணம் இருக்கிறது. காரிலோ, வேறு வாகனத்திலோ செல்லும்போது வழி நெடுகே உள்ள சாமானிய மக்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. காட்சிகளைக் கடப்பது போலவே மனிதர்களையும் கடந்து செல்ல வேண்டும். ஆனால், சியானோ வழக்கமான செய்தி சேகரிப்பு வளையத்திற்குள் வராமல் இருக்கும் சாமானிய மனிதர்களை தேடிச் செல்கிறார். இதற்கு சைக்கிளே ஏற்ற வாகனம். 

சைக்கிளில் செல்லும்போது, கண்ணில்படும் விவசாயிகளையும், தொழிலாளிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். அவர்களிடம் உள்ள சுவையான கதைகளை கண்டறிந்து பதிவு செய்கிறார். மக்களின் பிரச்னைகளை, அவர்களின் உணர்வுகளை அவர் கேட்டறிகிறார். முக்கியமாக அவர்கள் பகுதியில் உள்ள வளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை கண்டறிந்து பதிவு செய்கிறார்.

இந்தச் செய்தி பயணத்தின் போது தினமும் காலை 5.30 மணிக்கு பயணத்தை துவக்குபவர் தனது உபகரணங்களை தயார் செய்துகொண்டு இணைய நேயர்களுக்கான தகவல்களை திரட்டத் துவங்குகிறார். பின்னர், அதிகாலை நிகழ்ச்சிகாக ஒலி வடிவில் நேரடி செய்தியை வழங்கிவிட்டு, பின்னர் இணைய நிகழ்ச்சியாக செய்திகளை எடிட் செய்து தயாரித்து அளித்துவிட்டு, மீண்டும் காலை 8.45 மணி அளவில் 8 நிமிட நிகழ்ச்சியை வழங்குகிறார். நேரடி நிகழ்ச்சி முடிந்தவுடன் வானொலியின் வலைப்பதிவிற்காக வீடியோ பதிவுகளை அளிப்பவர், பயண காட்சிகள் தனது ஐபோனில் இருந்து நேரடியாக ஒளிபரப்பவும் செய்கிறார்.

அதன் பிறகு அவர் பயணத்தின் அடுத்த ஊரை நோக்கிச் செல்கிறார். எந்த எந்த ஊருக்கு செல்ல இருக்கிறார் என ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், தேவைக்கேற்ப அதில் மாற்றங்களும் செய்து கொள்கிறார். மறுநாள் செல்ல இருக்கும் ஊர் மக்களுக்கு உள்ளூர் நாளிதழ்கள் மூலம் முன்கூட்டியே தகவல் அளித்து விடுகிறார். 

இந்த வானொலி நிகழ்ச்சி அயர்லாந்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்பதால், உள்ளூர் மக்களும் அவர் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே, சமூக ஊடகங்களிலும் பலர் ஆர்வமாக தொடர்பு கொண்டு தங்களைப்பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களையும் சியான் சந்திக்கிறார்.

உள்ளூர் மக்கள் பாரம்பரிய முறையில் விழாக்களை கொண்டாடுவதில் துவங்கி 16 மொழி பேசும் குதிரையை வளர்ப்பதாக சொல்பவர் வரை பலவிதமான மனிதர்கள் கதை அவர் கேட்டுச் சொல்கிறார். பெரிய நகரங்களுக்கு வெளியே கிராமங்களிலும், சிற்றூர்களிலும் சொல்வதற்கு நிறைய கதைகள் இருப்பதை உணர முடிவதாக சியான் சொல்கிறார். அவர் சேகரிக்கும் கதைகள் கிராமங்கள் தோறும் கேட்க கூடியது என்பதால் மக்கள் இவற்றோடு ஒன்றிப்போகின்றனர்.


இதுபோன்ற செய்தி சைக்கிள் பயணத்தை சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டிருக்க முடியாது என்கிறார். அதற்கு கேமரா போன்ற உபகரணங்கள் தேவை என்பதோடு, ஆசிரியர் குழுவும் தேவைப்பட்டிருக்கும் என்கிறார். ஆனால், நவீன செல்பேசி கையில் இருப்பதால் கிராமங்களை நோக்கி சைக்கிளை சென்று சாமனியர்கள் வாழ்க்கையை கண்டறிய முடிவதாக உற்சாகமாக சொல்கிறார்.

தனியே மேற்கொள்ளும் இந்தப் பயணத்தின் போது செய்தி சேகரிப்பு, செல்போனிலேயே நிகழ்ச்சி தயாரிப்பு என கடுமையாக உழைக்க வேண்டியிருந்தாலும், மக்கள் கதைகளை ஒளிபரப்புவது திருப்தி அளிப்பதாகவும் கூறுகிறார். 

2017-ம் ஆண்டில் அவர் மூன்றாம் ஆண்டாக இந்த சைக்கிள் செல்பேசி இதழியல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணம் தொடர்பான தகவல்களையும், கதைகளையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துகொண்டு வருகிறார். சுவாரஸ்யமான மனிதர்களை சந்தித்த கதைகளை ஒளிபரப்புவதற்கு முன், நேயர்களுக்கு அது பற்றி ட்விட்டரில் முன்னோட்டமாக தகவல் அளிக்கிறார். பின்னர் நிகழ்ச்சிக்கான இணைப்புடன் அந்தத் தகவலை பகிர்ந்து கொள்கிறார். ஆடியோ மட்டும் அல்லாமல் வீடியோ கதைகளையும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
 
மலைப்பகுதி மீது வாஷிங் மிஷினை சுமந்து செல்பவர், உள்ளுர் நிகழ்ச்சிக்காக நிதி திரட்டும் இரட்டையர்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பதின் பருவ நினைவுகள் என அவர் பகிர்ந்து கொள்ளும் கதைகள் துடிப்புடன் இருக்கின்றன.

இளம் செய்தியாளரான சியான், அமெரிக்க அதிபர் தேர்தல், சிரியா அகதிகள் பிரச்சனை உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரித்தவர் மற்றும் பல்வேறு ஊடக விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 16 | செய்தி அறையே என் பாக்கெட்டில்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP