மோஜோ 16 | செய்தி அறையே என் பாக்கெட்டில்!

பேக்பேக் இதழியல் என்பதுதான் ஒருவிததில் செல்பேசி இதழியலுக்கான முன்னோடி. பேக்பேக் என்பது பொதுவாக சுற்றுலா பயணம் தொடர்பான சொல்.
 | 

மோஜோ 16 | செய்தி அறையே என் பாக்கெட்டில்!

இன்று 'மோஜோ' எனும் பெயர் நிலைத்துவிட்டாலும், செல்பேசி இதழியல் துவக்கத்தில் பாக்கெட் இதழியல் என குறிப்பிபடப்பட்டதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என கேட்கலாம் என்றாலும், இந்த தகவல் செல்பேசி இதழியல் வரலாறு தொடர்பான சில முக்கிய தகவல்களை புரிய வைக்கிறது.

முதல் விஷயம், செல்பேசி இதழியலின் வரலாற்றில் நோக்கியாவின் இடத்தை இது உணர்த்துகிறது. மற்றொரு விஷயம் செல்போன் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதக்கூடிய அமெரிக்க பேராசிரியர் கிளைடு பெண்ட்லியையும் (Clyde Bentley) அறிமுகம் செய்துகொள்ள உதவுகிறது.
 
பேராசிரியர் பெண்ட்லி இதழியலில் கள அனுபவமும் உள்ளவர். மாணவர்களுக்கு இதழியலில் பயிற்சி அளித்து வருபவர். தொழில்நுட்பத்திலும் அதிக பரிட்சயம் கொண்ட பெண்ட்லி, இதழியலும் தொழில்நுட்பமும் இணையும் புள்ளியில் எதிர்கால போக்குகள் குறித்து கணிப்புகளை கூறும் தன்மை கொண்டிருக்கிறார். 

அவரது இந்த தொலைநோக்கு தன்மையை 2006-ம் ஆண்டு ஆன்லைன் ஜர்னலிசம் ரீவ்யூ இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரையில் பார்க்க முடிகிறது. "பாக்கெட் இதழியல் வருகிறது" என்பது இந்தக் கட்டுரை தலைப்பின் ஒரு பகுதி. ''பேக்பேக் இதழியலா? அது எத்தனை பழையது. என் செய்தி அரை என் பாக்கெட்டில் இருக்கிறது' என துவங்குகிறது இந்த கட்டுரை. 

பேக்பேக் இதழியல் என்பதுதான் ஒருவிததில் செல்பேசி இதழியலுக்கான முன்னோடி. பேக்பேக் என்பது பொதுவாக சுற்றுலா பயணம் தொடர்பான சொல். ஒரு நெடும் பயணத்திற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை மட்டும் ஒரு பெரிய சூட்கேஸ் பையில் அடைத்து வைத்துக்கொண்டு முதுகில் மாட்டிச்செல்வதுண்டு. இதைத்தான் பேக்பேக் என குறிப்பிடுகின்றனர். இதேபோல, செய்தி சேகரிப்புக்கு தேவையான வீடியோ கேமரா உள்ளிட்ட அத்தியாவசியமான உபகரணங்களை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இதழாளர்கள் களத்தில் இறங்கும் வழக்கம் பேக்பேக் இதழியல் என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் வீடியோ வடிவிலான செய்தி சேகரிப்பு தொடர்பாக இது பயன்படுத்தப்படுகிறது. கேமரா குழு, வாகனம், இதர வசதிகள் போன்றவை இல்லாமல் இதழாளர் மட்டும் தேவையான அடிப்படை உபகரணங்களுடன் செயல்படுவதை இது குறிக்கிறது. ஒரு கால கட்டத்தில் இதழியலில் இதுவே புதுமையாக தான் கருதப்பட்டது.

இந்த பேக்பேக் இதழியலையே பேராசிரியர் பெண்ட்லி பழைய சங்கதி என 2006-ம் ஆண்டிலேயே துணிந்து சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம், முதுகுக்கு பின்னே உள்ள பையில் அடங்கக் கூடிய செய்தி சேகரிப்பு வசதிகள் அனைத்தும் செல்பேசி வடிவில் உள்ளங்கையில் அடங்கிவிடும் ஆற்றலை அவர் அப்போதே உணர்ந்திருந்தது தான். அப்போது லண்டன் நகருக்கு சென்றிருந்தவர், இதழியலின் எதிர்காலம் பற்றிய குறிப்புகளை உணர்ந்ததாக குறிப்பிடுகிறார். லண்டன் வந்து சேர்ந்த முதல் இரண்டு மாதங்களில் பயன்படுத்திய செல்பேசி தந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். செல்பேசி என குறிப்பிடுவதே தவறு என நினைக்க வைக்கும் அளவுக்கு நுட்பமான வசதிகளை கொண்ட இந்த சாதனம், நாம் பணியாற்றும் விதத்தை மாற்றி அமைக்க கூடிய புது யுக சாதனங்களின் முன்னோடியாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் இப்படி பாராட்டும் அந்த சாதனம், நோக்கியா நிறுவனத்தின் என் 93 செல்பேசியாகும். ஸ்மார்ட்போன் வரிசையில் முதலில் அறிமுகமான செல்பேசிகளில் ஒன்று என கூறக்கூடிய இந்த செல்பேசியின் அருமைகள் பற்றி பேராசிரியர் இப்படி வர்ணித்துக்கொண்டே செல்கிறார்: "பெயரளவில் இது 3ஜி போன். ஆனால், அதிக தரம் வாய்ந்த புகைப்படம் மற்றும் வீடியோ படங்களை எடுக்கிறது, அவற்றை 2.5 இன்ச் திரையில் காண்பிக்கிறது, அல்லது சாதாரண தொலைக்காட்சியுடன் இணைக்கிறது, உங்களுக்கு தேவையான இணைய பக்கத்தை தருவிக்கிறது, மைக்ரோசாப்ட் வேர்டு கோப்பு நகலை அளிக்கிறது, பவர்பாயின் காட்சி விளக்கம் காண்பிக்கிறது, எக்செல் கோப்பில் கணக்கு வைக்க உதவுகிறது, அடோப் ரீடரில் மின் புத்தகம் படிக்க வழி செய்கிறது, மேயரின் உரையை ஆடியோவாக பதிவு செய்ய உதவுகிறது…".

இன்னும் என்னவெல்லாமோ செய்ய உதவும் இந்த செல்பேசி தன்னை ஆட்கொண்டுவிட்டது என்கிறார். இந்த செல்பேசிகளை அற்புத பெட்டிகள் என வர்ணித்தாலும் போதாது என்பவர், இவை தொலைபேசி வசதி கொண்ட மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் என்கிறார். தொலைபேசி வசதி கொண்ட கையடக்க லேப்டாப்கள் என்றும் சொல்கிறார்.

இன்று கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்ட என் 93 செல்பேசி பற்றிய இந்த புகழ்பாடலால் அலுப்படைய வேண்டாம். இதை பேராசிரியர் 2006-ல் சொல்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, இந்த சாதனம், இதழாளர்கள் வேறு பல சாதனங்களை வைத்துக்கொண்டு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் செய்ய வழி செய்கிறது என்கிறார். இதில் இரண்டு கேமராக்கள் இருக்கின்றன. ஒன்றில் உங்களை படம் எடுத்துக்கொள்ளலாம். இன்னொறு கேமரா தான் முக்கியமானது. இந்த கேமரா மூலம் லண்டன் நகரை வளைத்து வளைத்து படம் எடுக்க முடிந்தது என்கிறார். கேனான் கையடக்க கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களுக்கு நிகரானதாக அவை இருந்தன என்றும், இணையத்திலும், அச்சு பதிப்பிலும் வெளியிட்ட ஏற்றதாக இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். 

வீடியோ இதைவிட அற்புதம் என்பவர், நோக்கியா என் 93 வைத்திருக்கும் இதழாளர் ஒருவர் இதன் மூலம் படங்களை எடிட் செய்து காபி ஷாப்பில் இருந்து செய்தி அறைக்கு அனுப்பி வைக்கலாம் என்கிறார். இணைய வசதி இல்லை என்றாலும் வைபை வசதி கைகொடுக்கும் என்கிறார்.

செல்பேசி இதழியலின் வாய்ப்பை முதன்முதலாக உணர்ந்து கொண்ட ஒருவரின் தீர்கதரிசனத்தை இந்த விவரிப்பில் காண முடிகிறது அல்லவா? லேப்டாப், கேமரா, கேபிள்கள் எல்லாம் வேண்டாம், நோக்கியா செல்பேசியை மட்டும் வைத்துக்கொண்டு படம் எடுத்து செய்தி சேகரித்து அனுப்பிவிடலாமே என்று உற்சாகம் கொள்ளும் பேராசிரியர் பெண்ட்லி, இந்த கட்டுரையின் மூலம் பாக்கெட் இதழியல் வந்தாச்சு என்று உணர்த்திவிட்டு, அனைத்து இதழாளர்களும் களப்பணியில் செல்பேசி பயன்பாட்டிற்கு தயாராக இருங்கள் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.

சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டில் அடங்கிவிடக் கூடிய சாதனத்தை வைத்துக்கொண்டு செய்தி சேகரிக்கலாம் என்பதையே அவர் பாக்கெட் இதழியல் என குறிப்பிடுகிறார்.

வருங்காலத்தில் இன்னும் என்ன எல்லாம் மாற்றம் வருமோ என வியந்திருந்தவர், ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து, ஒரு கையில் நோக்கியா செல்பேசி மறுகையில் கீபோர்டு வைத்துக்கொண்டு, லேப்டாப் உள்ளிட்ட வேறு எந்த சாதனங்களும் எடுத்துச்செல்லாமல் செய்தி சேகரித்து, படம், வீடியோ எடுத்து அருகே உள்ள கபேவில் இருந்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடிய வேண்டும் என்பது என கனவு என தெரிவித்து கட்டுரையை நிறைவு செய்கிறார்.

இந்த கனவு நினைவாகி இருப்பது மட்டும் அல்ல, நவீன செல்பேசியில் இருந்தே முழுவீச்சிலான செய்தி சேகரிப்பு மற்றும் ஒளிபரப்பை மேற்கொள்ளும் அளவுக்கு விரிவாகி இருக்கிறது. இதன் மையமாக, நோக்கி போனுக்கு பதில் ஐபோன் விளங்குவதை வரலாற்று முரண் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், படம் எடுக்கும் ஆற்றல், இணைய வசதி, அதிக செயல்திறன் கொண்ட போன்கள் அறிமுகமான உடனேயே இதழியல் முன்னோடிகள் பலர் இதனால் இதழியலில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் பலன்களை புரிந்து கொண்டிருந்தனர் என்பதும், பேராசிரியர் பெண்ட்லே அவர்களில் ஒருவர் என்பதும் தான். மற்றொரு விஷயம் பேராசிரியர் செல்பேசி மூலம் உடனுடக்குடன் அலுவலகத்திற்கு செய்தி அனுப்பும் ஆற்றலை முக்கியமாக கருதுகிறார். ஆனால் அவர் பழைய பாணியில் வரி வடிவ செய்தி அனுப்புவதை தான் முதன்மையாக கருதியிருக்கிறார். படம் மற்றும் வீடியோவை உப சேவையாகவே கருதியிருக்கிறார். அதனால் தான் செல்பேசியுடன் இணைக்க கூடிய கீபோர்டு பற்றி பேசுகிறார்.

நோக்கியா செல்பேசி உதவியுடன், முதல் முறையாக மொபைல் மாநாடு செய்தி சேகரித்து அனுப்பியது தொடர்பான கட்டுரையிலும், அவர் இந்த தன்மையை சுட்டிக்காட்டியிருக்கிறார். (இந்த முறை ஐபோனை பயன்படுத்தியிருந்தார்). வரி வடிவ செய்திக்கு நடுவே படங்களை இணைப்பது தான் சிக்கலாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்த குறைகள் ஒரு பொருட்டல்ல, செல்பேசியை மட்டுமே நம்பி செய்தி சேகரித்து வெளியிட முடியும் அந்த திசையிலேயே இதழியலின் எதிர்காலம் அமைந்துள்ளது என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதையே அவரது கட்டுரைகள் உணர்த்துகின்றன. 

செல்பேசி இதழியலின் ஆற்றலில் கேள்விகளும், சந்தேகங்களும் கொண்டவர்கள் பேராசிரியர் பெண்ட்லி போன்றவர்களின் தீர்கதரிசனத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP