மோஜோ 11 | செல்பேசி இதழியலில் காட்சி மொழியின் சொற்கள்

செல்பேசியை மையமாக கொண்டு ஓர் ஆக்கத்தை உருவாக்கும்போது அதற்கான நெறிமுறைகள் என்ன? வழிகாட்டுதல் என்ன? என்ற குழப்பம் ஏற்படலாம்.
 | 

மோஜோ 11 | செல்பேசி இதழியலில் காட்சி மொழியின் சொற்கள்

மோஜோ 11 | செல்பேசி இதழியலில் காட்சி மொழியின் சொற்கள்சொற்களைக் கையாள்வதில் இதழாளர்களும் எழுத்தாளர்களைப் போன்றவர்கள்தான். சொற்ச் சிக்கனத்தை முக்கியமாக கருதுவதோடு, சரியான வார்த்தைகளைத் தேர்வு செய்வதிலும் கவனமாக இருக்கின்றனர். மனதுக்குள்ளேயே அடித்துத் திருத்தி எழுதிப் பார்த்து, அதற்கேற்ற வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தேர்வு செய்து, சொல்ல வந்த விஷயத்தை சரியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முற்படுகின்றனர். அதனால்தான் நேர்த்தி கைகூடுகிறது. எளிய சொல் போதுமானதாக இருக்கும் இடத்தில் கடினமான சொல்லை போடுவதில் இதழாளர்களுக்கு உடன்பாடில்லை. கட்டுரை, பத்தி என எந்த வடிவத்தில் இருந்தாலும் சொல்ல வந்த செய்தி வாசகர்களுக்கு எளிதாகப் புரிவதோடு, அவர்களுக்கு ஈடுபாடு அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அச்சு ஊடகத்திலும் சரி, இன்று இணைய ஊடகத்திலும் சரி, இந்த அடிப்படை நுணுக்கங்களில் மாற்றம் இல்லை.

எழுத்து வடிவிலான கதையை உருவாக்கும்போது இதழாளர்களுக்கு, அதற்கு தேவையான அடிப்படை உத்திகளில் போதிய அனுபவமும், பயிற்சியும் இருக்கிறது. சரியான ஆக்கத்தை உருவாக்க அவர்கள் பாடுபட தயாராக இருக்கின்றனர். ஆனால், செல்பேசியை மையமாக கொண்டு ஓர் ஆக்கத்தை உருவாக்கும்போது அதற்கான நெறிமுறைகள் என்ன? வழிகாட்டுதல் என்ன? என்ற குழப்பம் ஏற்படலாம். 

செல்பேசியில் எடுக்கப்படும் வீடியோக்கள் பொதுவாக பயனர்கள் உருவாக்கம் என குறிப்பிடப்பட்டாலும், அவை தரம் குறைந்தவையாக இருக்க வேண்டும் என அர்த்தம் இல்லை. பயனர்கள் உருவாக்கம் தரம் குறைந்ததாக இருக்கும் என்பதும் தவறான அபிப்பராயமே. பயனர்கள் உருவாக்கம் என்பது செல்பேசியை கையாண்டு ஊடக ஆக்கங்களை உருவாக்கும் எளிமையையும், சாத்தியத்தையுமே குறிக்கிறதே தவிர அதன் தரத்தை அல்ல. செல்பேசி வைத்திருக்கும் எவரும் ஒரு நிகழ்வை படம் பிடித்து வெளியிடலாம் என்பதே புதிய ஊடகத்தின் தனித்தன்மை. இது 'குடிமக்கள் இதழியல்' என கொள்ளப்படுகிறது. செல்பேசி இதழியலில் இது முக்கிய அங்கமாகவும் இருக்கிறது. ஆனால், தற்செயலாக எடுக்கப்பட்ட உடனடி செய்தி பதிவுகளில் மட்டுமே தரம் ஒரு பிரச்சனையாக கருதப்படுவதில்லையே தவிர, மற்றபடி செல்பேசி கொண்டு கதைகளை உருவாக்கும்போது அதற்கான அடிப்படை அம்சங்களையும், இலக்கணத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.

அந்த வகையில் ஆர்வலர்களும் சரி, தொழில்முறை இதழாளர்களும் சரி காட்சி மொழியின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியமாகிறது.

ஒரு செய்தி அல்லது கட்டுரை எப்படி நேர்த்தியாக எழுதப்பட வேண்டுமோ அதுபோலவே ஒரு வீடியோவும் நேர்த்தியாக எடுக்கப்பட வேண்டும். இதற்கான விதிகளை செல்பேசி இதழியல், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வீடியோ இதழியலில் இருந்து கடன் வாங்கிக்கொள்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். திரைப்படம் மற்றும் விளம்பர படங்களிலும் பார்க்கக் கூடிய இந்த அடிப்படை உத்திகளை மனதில் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

காட்சிகளைத் தொடர்ச்சியாக படமாக்காமல், சிறு காட்சிகளாக தொடர் வரிசையாக படம் பிடிப்பதே இதற்கான அடிப்படை. இதை களத்தில் கதை சொல்லும்போது மேலும் சிறப்பாக பயன்படுத்த காட்சி மொழி தொடர்பான எளிய அடிப்படை உத்திகள் இவை:

செல்பேசி இதழயலுக்கான நேர்த்தியான வீடியோவை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களில் வடிகட்டிப் பார்த்தால் மூன்று விதமான காட்சிகள் முன்வைக்கப்படுவதை புரிந்து கொள்ளலாம். வைடு ஷாட் எனப்படும் பரந்த காட்சி, மிடில் ஷாட் எனப்படும் மத்திய காட்சி மற்றும் குளோஸ் அப் எனப்படும் நெருக்கமான காட்சிகள் தான் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. இந்தக் காட்சிகளை இன்னும் கூட பிரித்து வகைப்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், இவை தான் அடிப்படை.

ஆக, ஒரு நல்ல வீடியோவில் இந்த மூன்று வகையான காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த காட்சிகளின் தன்மை மற்றும் தேவையை உணரும்போது இயல்பாக காட்சி வழி கதை சொல்லல் சாத்தியமாகும்.

பரந்த காட்சி என்பது ஓர் அறிமுகம் போல, கதைக்களம் அல்லது சூழலை படம்பிடிக்க உதவுகிறது. ஒரு செய்திக்கட்டுரையின் அறிமுக பத்திக்கு நிகரானதாக இதைக் கருதலாம். பரந்த காட்சியில் கதையின் பாத்திரமும் இருத்தல் நல்லது. கதையின் பின்னணிக்கு மத்தியில், கதையின் பாத்திரம் முழு அளவில் இடம்பெற்றிருப்பதை இந்த வகை காட்சிக்கான வரையறையாக சொல்கின்றனர்.

மத்திய காட்சி என்பது பரந்த காட்சியில் இருந்து இன்னும் சற்று அருகே செல்வது. இந்தக் காட்சியில், கதையின் மைய பாத்திரம் இன்னும் நெருக்கமாக தெரிவார். அவரது முழு உடல் பகுதியும் காண்பிக்கப்படும் தேவை இல்லாமல், இடுப்பளவு தோற்றம் போதுமானதாக கொள்ளப்படுகிறது. பாத்திரத்தை படம் பிடிக்கும்போது, காட்சியை அவரது முழங்கால் பகுதியில் வெட்டாமல் சற்று மேல் அல்லது சற்று கீழ் வெட்ட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதேபோல பாத்திரத்தின் தலைப்பகுதிக்கு மேலும் போதிய வெளி இருக்க வேண்டும்.

நெருக்கமான காட்சி என்பது பாத்திரத்தின் தோற்றத்தை விட்டுவிட்டு, அவரது செயல் அல்லது உணர்வை நெருக்கமாகப் படம் பிடிப்பது. 

அடிப்படையில் இந்த மூன்று வகையான காட்சிகளை படம் பிடிப்பது, அவற்றை கொண்டு வெவ்வேறு வரிசைகளை அமைப்பதன் மூலம் காட்சிகளால் கதை சொல்ல முடியும். எந்த வகை காட்சிகள் எப்போது தேவை என்பது கள அனுபவத்தில் கற்று தேறக்கூடியது.

 வெரிபையி மீடியா உருவாக்கியுள்ள செல்பேசி இதழியலுக்கான அறிமுக வழிகாட்டியில் மூன்று அடிப்படை நுணுக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. அவை: டபிள்யூஎம்டி, டிரிபிள் ஷாட் மற்றும் மூவ் ஆர் ஸ்டான் ஸ்டில்.

டபிள்யூஎம்டி என்பது மூன்று வகையான அடிப்படைக் காட்சிகளை குறிக்கிறது. இந்த மூன்று காட்சிகள் ஒரு தொடர்ச்சியாக அமைந்து அந்தத் தொடர்ச்சி ஒரு கதை சொல்ல உதவுகிறது. 

டிரிபிள் ஷாட் என்பது இந்த மூன்று வகையான காட்சிகளிலும் மூன்று காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக்கொள்வதை குறிக்கிறது. இது எடிட்டிங்கில் தேவையான அனைத்து காட்சிகளையும் அளிக்கும்.

மூவ் ஆர் ஸ்டாண்ட் ஸ்டில் என்பது ஒரு காட்சியை அதன் பிரேமுக்குள் படம் பிடிப்பதா அல்லது காட்சி இயக்கத்தை பின் தொடர்ந்து படம் பிடிப்பதா என்பதை தீர்மானிப்பதாகும். இந்த வகை காட்சியே தொழில்முறை வீடியோவின் முக்கிய அம்சமாகிறது.

வீடியோ கதை சொல்லலில் மாறுபட்ட காட்சிகள் மற்றும் தொடர் வரிசை எனும் பதிவில் அமெரிக்காவின் நியூஜெர்சி டிஜிட்டல் இதழியல் வல்லுனரான மூ லின் கீழ்க்கண்ட வழிகளை விவரிக்கிறார்:

எப்போது வீடியோ காட்சிகளை படமாக்க முற்பட்டாலும், காட்சிகள் எப்படி இறுதி தொகுப்பில் பயன்படுத்தப்படும் என்பதை யோசிக்க வேண்டும். இதற்கான சிறந்த வழி தனிக்காட்சிகளாக எடுக்காமல், தொடர் வரிசையாக காட்சிகளை படம் பிடிப்பதாகும். ஒரு காட்சி எத்தனை அழகாக இருந்தாலும் சரி, அது மற்ற காட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடியதாக இல்லை எனில் பயனில்லை.

இதற்கு அடிப்படை கட்டுமானமாக விளங்கும் காட்சிகள்:

பரந்த காட்சி: ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது மனிதரை முழுவதும் காட்டும் காட்சி. களத்தை நிறுவ இவை உதவுகின்றன. கதை மாந்தர்களின் இயக்கத்தையும் நிறுவலாம். லாங் ஷாட் என்றும் சொல்லப்படுகிறது.

மத்திய காட்சி: கதை மாந்தரின் இடுப்பளவு தோற்றத்தை குறிக்கும் காட்சி. கைகளின் செயல்பாட்டையும் காண்பிக்கலாம். 

நெருக்கமான காட்சி: மனிதர்களின் குறிப்பிட்ட செயலை நெருக்கமாக சித்தரிக்கிறது. பெரும்பாலும் முகத்தை மட்டும் காண்பிக்கலாம்.

ஒரு நல்ல வீடியோவுக்கு பல வகையான மாறுபட்ட காட்சிகள் தேவை. ஒரே வகையான காட்சி அலுப்பூட்டும். மாறுபட்ட கோணத்திலான காட்சிகளை சரியான வரிசையில் தொகுக்கும்போது காட்சி வழி கதை சொல்லுதல் மேம்படும். எந்த நல்ல வீடியோவிலும் இதைக் காணலாம். ஒரே மாதிரியான காட்சிகள் தொடர்ந்து வருவதில்லை. சொல்லப்படும் கதைக்கு ஏற்ப பல வகையான காட்சிகளை பல கோணங்களில், வெவ்வேறு தொலைவில் இருந்து படம் பிடித்துக்கொள்ள வேண்டும். பார்க்கும் ஒவ்வொரு சூழலுக்கும், ஒரு பரந்த காட்சி, ஒரு மத்திய காட்சி, இரண்டு நெருக்கமான காட்சிகள் இருந்தால் சிறப்பு. இவை 25:25:50 எனும் விகிதத்தில் இருக்கலாம் என்பது பொதுவான வழிகாட்டுதல். பரவலாக வலியுறுத்தப்படும், ஐந்து ஷாட் முறை இதை ஒட்டியே அமைவதை உணரலாம்.

அமெரிக்காவின் மிசவ்ரி பல்கலைக்கழகத்தின் கன்வர்ஜன்ஸ் இதழியல் பேராசிரியர் ருபேன் ஸ்டெர்ன் (Reuben Stern) இதை இன்னும் அழகாக விவரிக்கிறார்:

வீடியோ தொகுப்பை உருவாக்கும் போது, அவை ஒன்றிணைந்து கதை சொல்லக் கூடிய பகுதிகளை உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களையும், வாக்கியங்களை கொண்டு பத்திகளையும் உருவாக்குவது போல தான் இதுவும். இங்கே எல்லாம் காட்சிகளாக இருக்கின்றன. வார்த்தை என்பது சிறு காட்சியாகவும், தொடர் காட்சிகளை வாக்கியமாகவும் கொள்ளலாம். இவை இணைந்து வலுவான கதையாக உருவாகின்றன.

காட்சிகள் அடிப்படை:

நிறுவும் காட்சி (Establishing shot): இந்தக் காட்சி பார்வையாளர்களுக்கு நாம் எங்கிருக்கிறோம் என உணர்த்துகிறது. இவை ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதியாக அல்லது பின்னணியாக, ஓர் இடமாக இருக்கலாம். இங்குதான் கதையின் ஒரு பகுதி நிகழ்கிறது.

பிரதான காட்சி (Master shot): நிறுவும் காட்சியை போன்றது. கதை மாந்தர்களை களத்தில் பொருத்துகிறது. அல்லது அவர்களுக்கு இடையிலான தொடர்பை உணர்த்துகிறது. ஒரே இடத்தில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களைப் படம் பிடிக்கும் போது, இந்தக் காட்சி ஒரே இடத்தில் பலர் இருப்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவும்.

தொலைவுக் காட்சி (Long shot): காட்சி முழுவதும் ஒரு மனிதர் இடம்பெற்றிருப்பார்.

மத்திய காட்சி (Medium shot): மனிதரின் ஒரு பகுதியை மட்டுமே காண முடியும். ஆனால் அவர் இருப்பை உணரலாம். இடுப்பளவு அல்லது மார்பளவுக் காட்சிகள்.

நெருக்கமான காட்சி (Close up): ஒரு மனிதரின் முகம் அல்லது கை அல்லது ஒரு செயலை உணர்த்துகிறது.

மிக நெருக்கமான காட்சி (Extreme close-up): இன்னும் கூடுதல் விவரங்களை நுட்பமாக அளிக்கும் காட்சி.

தொடர் வரிசை காட்சி விதங்கள்:

செயல் - எதிர் செயல் (Action-Reaction): ஒரு செயலுடன் துவங்கி, பின்னர் அதற்கு பதில் அளிப்பவரின் செயலை உணர்த்துகிறது.

செயல் - வெட்டு - செயல் (Action-Cutaway-Action): ஒரு செயலில் துவங்கி வேறு ஒன்றுக்கு சென்று மீண்டும் செயலுக்கு திரும்புதல்.

இயக்கத்தின் செயல் (Match on Action): தொடரும் ஒரு செயலை காண்பித்து, அது தொடர்பான வேறு ஒரு கோணத்தை காண்பிப்பது. முதலில் வெட்டிய இடத்தில் இருந்து இது தொடரும். உதாரணமாக ஒரு கூடைப்பந்து வீரர் பந்தை எரியும் காட்சியை மத்திய காட்சியாக காண்பித்து, பந்து வெளியேறுவதில் காட்சியை வெட்டி, பின்னர் பந்து அவர் கைக்கு வருவதை நெருக்கமான காட்சியாக காண்பிக்கலாம்.

தொகுப்பு (Montage): ஓரிடத்தில் ஒரு செயலை குறிக்கும் வகையில் தொடர் வரிசையிலான தொடர்புடைய காட்சிகள். செயல் தொடர்ச்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை விவரங்களின் தொகுப்பாக கொள்ளலாம்.

குறுக்கு வெட்டு (Cross cutting): இரண்டு வெவ்வேறு இடங்களில் நடக்கும் காட்சிகள், ஒரே நேரத்தில் நடப்பது போன்ற உணர்வை தரும் வகையில் வெட்டப்பட்டிருப்பது. திரைப்படங்களில் அதிகம் காணலாம்.

ஜம்ப் கட் (Cross cutting): ஒரு காட்சியில் இருந்து மனிதர் அல்லது பொருள் திடீரென தாவுவது போல காட்சி வெட்டப்படுவது.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 10 | செல்பேசி இதழியலும் ஐந்து காட்சி விதிகளும்! 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP