மோஜோ 10 | செல்பேசி இதழியலும் ஐந்து காட்சி விதிகளும்!

செல்பேசி வீடியோவை நீளமாக எடுக்கக் கூடாது. அவை சின்னச் சின்ன காட்சிகளின் வரிசையாகவே அமைய வேண்டும்.
 | 

மோஜோ 10 | செல்பேசி இதழியலும் ஐந்து காட்சி விதிகளும்!

மோஜோ 10 | செல்பேசி இதழியலும் ஐந்து காட்சி விதிகளும்!செல்பேசி வீடியோ நுணுக்கங்களை இப்போது இன்னும் நெருக்கமாக பார்க்கலாம். இதுவரை கொஞ்சம் பரந்த காட்சியாகவும், மத்திய காட்சியாகவும் பார்த்தவற்றை இனி நெருக்கமாக பார்க்கலாம். ஒருவிதத்தில் இதுதான் வீடியோவின் மொழி. சின்னச் சின்ன காட்சிகளாக (ஷாட்ஸ்) எடுத்து அவற்றை வரிசையாக கோர்த்து ஒரு செய்தியை சொல்வது. சின்னச் சின்ன காட்சிகள் நெருக்கமானதாக இருக்கலாம், மத்திய காட்சியாக இருக்கலாம், வேறு கோணங்களில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். பலவித கோணங்களில், பல விதமாக எடுத்து அவற்றை வரிசைப்படுத்தி தொகுப்பதன் மூலம் காட்சிரீதியாக ஒரு விஷயத்தை மிக எளிதாக உணர்த்தலாம்.

சின்னச் சின்ன காட்சிகளாக எடுக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்தே ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளலாம். செல்பேசி வீடியோவை நீளமாக எடுக்கக் கூடாது. அவை சின்னச் சின்ன காட்சிகளின் வரிசையாகவே அமைய வேண்டும். 

முதல் முறையாக செல்பேசியில் படம் எடுக்க கூடிய எவரும் செய்யக்கூடிய தவறும் இதுதான். ஒரே விதமான கோணத்தில் நிற்காமல் படம் எடுத்து தள்ளுவது. இதனால் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியே உண்டாகும். சுவாரஸ்யமாக பார்க்கக் கூடிய எந்த வீடியோவை எடுத்துக்கொண்டாலும், அது பல கோணத்திலான காட்சிகளின் தொகுப்பாக இருப்பதை புரிந்துகொள்ளலாம். பல நேரங்களில் இந்த வித்தியாசத்தை உணராமல் கூட இருக்கலாம். ஆனால் நல்ல வீடியோக்களை நாம் பார்த்து ரசிப்பதற்கான காரணம் அடிப்படையில் அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி காட்சி மொழி இலக்கணப்படி, சின்னச் சின்ன காட்சிகளின் நேர்த்தியான தொகுப்பாக இருப்பதே. 

ஆக, செல்பேசியில் படம் எடுப்பது எளிதானது. ஆனால் நல்ல படம் எடுப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு பயிற்சி தேவை, காட்சி மொழி பற்றிய புரிதல் தேவை. கதை சொல்லும் ஆற்றலும் வேண்டும். இவை எல்லாம் இருந்தால்தான் சிறந்த முறையில் செல்பேசி இதழியலில் கதை சொல்ல முடியும். 

இதற்கான எளிய வழிகளில் ஒன்றாக ஐந்து காட்சி முறை முன் வைக்கப்படுகிறது. ஏற்கெனவே சுருக்கமாக பார்ததது போல, ஐந்து காட்சி முறை என்பது அடிப்படையில் ஐந்து வெவ்வெறு விதமான சிறு காட்சிகளைப் படம் பிடித்து, பின்னர் அவற்றை வரிசையாக அமைப்பதாகும்.

இந்த உத்தி தொலைக்காட்சி இதழாளர்களால் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறது. தொலைக்காட்சி இதழாளர்களில் சுயேட்சையாக செயல்படும் வீடியோ இதழாளர்களும் இதையே பின்பற்றுகின்றனர். செல்பேசி இதழியல் வீடியோவுக்கும் இதுவே அடிப்படையாகிறது. வீடியோ இதழியல் முன்னோடிகளில் ஒருவரான மைக்கேல் ரோசன்பிளம் (Michael Rosenblum) இந்த முறையை பிரபலமாக்கியவராக கருதப்படுகிறார். கள அனுபவத்தில் இந்த உத்தியை கையாண்டு தேர்ச்சி பெற்ற ரோசன்பிளம், பிபிசி உள்ளிட்ட தொலைக்காட்சி இதழாளர்களுக்கு இதில் பயிற்சி அளித்திருக்கிறார்.

பரந்த, மத்திய, நெருக்கமான வெவ்வேறு காட்சிகள் மூலம் காட்சி நோக்கில் ஒரு விஷயத்தை புரியவைக்க இந்த முறை கைகொடுக்கிறது. செல்பேசி மூலம் கதை சொல்ல முற்படும் எவருக்கும், இந்த முறை தங்கள் கதைக்கு தேவையான காட்சிகளை படம் பிடிப்பதில் உதவியாக இருக்கும்.

ஐந்து காட்சி முறை:

1. கைகளின் நெருக்கமான தோற்றம்: கைகளால் மேற்கொள்ளப்படும் செயலை நெருக்கமாக காட்டுவது. மிக நெருக்கமாகவும் படமாக்கலாம். இந்தக் காட்சி மூலம் பார்வையாளர்கள் மனதில் ஆர்வத்தைத் தூண்டி எதிர்பார்ப்பை உண்டாக்கலாம்.

2. முகத்தின் நெருக்கமான தோற்றம்: அடுத்ததாக முகத்தை நெருக்கமாக படம் பிடிக்க வேண்டும். தலையின் மேல் பகுதியை விட்டுவிட்டு கூட நெருக்கம் காட்டலாம். ஆனால் கண்கள் தெரிய வேண்டும். 

3. பரந்த காட்சி: என்ன செய்து கொண்டிருக்கிறார் அல்லது என்ன நடக்கிறது என்பதை காட்டும் பரந்த காட்சியை படமாக்க வேண்டும். கட்சியுடனான தொடர்பு, சூழல் மனநிலை, இருப்பிட தகவல் ஆகியவற்றை இதன் மூலம் உணர்த்த முடியும்.

4. தோள்பட்டை மீதான காட்சி: இதுவரை காண்பிக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து, எப்படிச் செய்யப்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில், கேமராவில் படம்பிடிக்கப்படுபவரின் தோள்பட்டை மேலிருந்து பார்ப்பது போல எடுக்கப்படும் காட்சி.

5. சிறப்புக் காட்சி: இவைத் தவிர கொஞ்சம் வித்தியாசமான முறையில் விஷேச காட்சி ஒன்றை படம் பிடிக்க வேண்டும். இதற்கான கோணத்தை படம் எடுப்பவர் தீர்மானித்துக் கொள்ளலாம். பார்வையாளர்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் அமையலாம். கதையின் சூழல் மற்றும் இருப்பிடமும் இதை தீர்மானிக்க உதவும்.

காட்சி வரிசை

ஆறாவதாக, நேர்காணல் செய்யும் காட்சியை கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம். இதை தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒரு வீடியோவைப் பார்ப்போம். அதன் முதல் காட்சியில் கையில் பேனா போன்ற சாதனத்தை வைத்து ஏதோ ஒன்று வரைப்படுவது போல தோன்றுகிறது. இரண்டாவது காட்சியில் குனிந்த வாக்கில் முகத்தில் தீவிர கவனம் தோன்றுகிறது. மூன்றாவது பரந்த காட்சியில் அவர் என்ன செய்கிறார் என காண்பிக்கப்பட்டு, அடுத்தக் காட்சியில் மேல்புற கோணத்தில் அவர் செய்வது உணர்த்தப்படுகிறது. ஐந்தாவது காட்சி அவர் எங்கே இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார் என காண்பிக்கிறது. 

இந்த விதியை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றில்லை. ஆனால் சிறந்த முறையில் வீடியோ படம் எடுக்க இது நல்ல வழிகாட்டல். ஏனெனில், ஒரு நல்ல வீடியோ கதைக்கு வலுவான தனிப்பட்ட காட்சிகள் தேவை. இத்தகைய தனிப்பட்ட காட்சிகள் வரிசையாக அமையும்போது தெளிவான முறையில் கதை சொல்லப்படுகிறது.

இந்த முறையில் காட்சிகள் படமாக்கப்படுவதை கூர்ந்து கவனித்தால், செய்திக்கான அடிப்படை கூறுகளை இவை உணர்த்துவதை புரிந்து கொள்ளலாம். பொதுவாக முதல் காட்சியில் ஒரு புதிர்தன்மை இருக்கிறது. இதன் மூலம் என்ன நடக்கிறது என காண்பிக்கப்படுகிறது. செய்தியின் என்ன அம்சம் இது (WHAT). அடுத்த நெருக்கமான காட்சி யார் (WHO) என்பதை உணர்த்துகிறது. மூன்றாவது காட்சி எங்கே (WHERE) எனும் கேள்விக்கு விடையாகிறது. ஏன் (Why) என்பதற்கும் பதில் அளிக்கிறது. அடுத்தக் காட்சி எப்படி (HOW) என்பதை புரிய வைக்கிறது. 

காட்சி வரிசைகளின் அவசியம்

இந்தக் காட்சி வரிசைகளுக்கு என்ன அவசியம் என்று பார்க்கலாம். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத காட்சிகளைக் காணும்போது பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு, சொல்லப்படும் கதையில் ஈர்ப்பு ஏற்படுதவற்கு பதிலாக அந்நியத்தன்மை உண்டாகும். ஆனால் வரிசையாக காட்சிகள அமையும் போது சீரான முன்னேற்றம் ஏற்பட்டு அது முடிவடையும்போது அடுத்தக் காட்சிக்கு தயாராகிறோம். இது பார்வையாளர்களுக்கு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் தொடர்ச்சியான ஒன்று நிகழ்வதையும் புரிய வைக்கிறது. காட்சி மொழியில் இது முக்கிய அங்கம் வகிக்கிறது. தொடர் வரிசையிலான காட்சி அமைப்பை திரைப்படங்கள் உள்ளிட்ட எல்லா காட்சி ஊடகங்களிலும் காணலாம்.

மேலும் தொடர் வரிசையில் காட்சிகளை அமைப்பதன் மூலம் நேரத்தையும் சுருக்கலாம். ஒரு நிகழ்வை முழுவதும் காண்பிக்காமலேயே அதன் தன்மையை சிறு காட்சிகள் வரிசையாக புரிய வைக்கலாம்.

உதாரணத்திற்கு ஒருவர் வீட்டை பூட்டிக்கொண்டு பைக்கில் வெளியே செல்லும் காட்சியை அப்படியே முழுவதும் காண்பிக்காமல், அவர் வீட்டை விட்டு வெளியேறுவதை பாதங்களை காண்பித்து, முகத்தை காண்பித்து, பைக்கை எடுப்பது, வெளியேறுவது என வரிசையாக காண்பிப்பதன் மூலம் உணர்த்திவிடலாம். முழுக் காட்சியை எடுக்க ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகலாம் என்றால், இந்த முறையில் 20 நொடிகளில் விஷயத்தை சொல்லிவிடலாம். பார்வையாளர்களும் இதை புரிந்துகொள்வார்கள்.

இப்படி படமாக்குவதன் மூலம் வீடியோ காட்சி தொழில்முறைத் தன்மையுடனும் காட்சி அளிக்கும். கதை சொல்லலின் திசை மற்றும் நோக்கத்தையும் இது உணர்த்தும்.

இந்த முறையில் காட்சிகளைப் படமாக்க முதலில் கதையில் குறிப்பிட்ட முக்கியமான செயலை அடையாளம் காணவேண்டும். இதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், அடுத்ததாக என்ன நிகழப்போகிறது என்பதை ஊகித்து, அதற்கேற்ப செயல்படும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அடுத்தக் காட்சியை ஊகித்து, அதைப் படமாக்க தயாராக இருக்க வேண்டும்.

இது மிகவும் சவாலானதுதான். ஆனால் சொல்ல இருக்கும் கதையை உள்வாங்கிக் கொண்டு அதற்கான கதைப்பலகையை உருவாக்கி வைத்துக்கொண்டு, காட்சிகள் மூலம் விஷயத்தை எப்படி சொல்லலாம் என திட்டமிடுவதன் மூலம் இது சாத்தியமாகும். எனினும் இதற்கு அனுபவமும், பயிற்சியும் அவசியம்.

மற்றொரு முக்கியமான விஷயம், சிறந்த முறையில் வீடியோ கதை சொல்ல விதவிதமான மாறுபட்ட காட்சிகள் தேவை. பலவிதமான கோணங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரிசையாக ஒன்றிணைகக்ப்படும்போது பார்வையாளர்களுக்கு இயல்பாக ஈர்ப்பு உண்டாகும்.

வெவ்வேறு கோணத்தில் காட்சிகளை எடுக்கும்போது கேமராவை அசையாமல் நிலையான முறையில் காட்சிகளை பதிவு செய்ய வேண்டும். கேமராவை பேன் செய்வதோ, ஜூம் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும். குறைந்தது 10 முதல் 15 விநாடிகள் காட்சியை பதிவு செய்ய வேண்டும்.

கேமரா மூலம் எண்ணற்ற கோணங்களில் காட்சிகளைப் படம் பிடிக்கலாம். எந்த இரண்டு காட்சி கோர்வைகளும் ஒன்றாக இருக்காது என்றாலும், எல்லாவற்றையும் அடிப்படையில் இரண்டு விதமான அமைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

 இரண்டு காட்சிகள்: இரண்டு வெவ்வேறு விதமான காட்சிகள் கூட ஒரு தொடர் வரிசையாக அமையலாம். ஒருவர் பூங்காவில் அமர்ந்திருக்கும் பரந்த காட்சி மற்றும் அவர் முக பாவனைகளை நெருக்கமான காட்சியாக அடுத்தடுத்து காண்பிப்பதன் மூலம் அவர் பத்திரிகை படித்துக்கொண்டிருப்பதை உணர்த்தலாம். இவை பெரும்பாலும் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு தொலைவில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த காட்சிகள்.

மூன்று காட்சிகள்: இந்த காட்சி அமைப்பில், பரந்த காட்சி, நெருக்கமான காட்சி மற்றும் மத்திய காட்சிகள் என வெவ்வேறு கோணம், தொலைவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மூலம் ஒரு தொடர்ச்சியை உண்டாக்கலாம். பெரும்பாலும் இதைப் பரந்த காட்சியில் இருந்து துவக்கலாம். இந்த அமைப்புகளை ஒரு முறை கற்றுக்கொண்டால் பின்னர் இயல்பாக பின்பற்றத் துவங்கிவிடலாம்.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 9 | செய்திக் கதைகளும் காட்சி ஆதாரமும்! 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP