மோஜோ - 1 | 'செல்பேசி இதழியல்' ஆயுதத்தின் அறிமுகம்!

MOJO: What is mobile journalism?
 | 

மோஜோ - 1 | 'செல்பேசி இதழியல்' ஆயுதத்தின் அறிமுகம்!

மோஜோ - 1 | 'செல்பேசி இதழியல்' ஆயுதத்தின் அறிமுகம்!| இதழலாளர்களும் நெட்டிசன்களும் மோஜோ எனும் மொபைல் ஜர்னலிஸம் / செல்பேசி இதழியலில் முத்திரைப் பதிக்க உறுதுணைபுரியும் சிறப்புத் தொடர்.  |

இதழியல் துறையில் புதிதாக ஓர் அலை வீசிக்கொண்டிருக்கிறது. 'மோஜோ' (MOJO) என அதற்குப் பெயர். எங்கும் நிறையத் துவங்கியிருக்கும் செல்பேசிகள்தான் அதன் மையமாக இருக்கிறது.

இந்த அலை பத்தாண்டுகளுக்கு முன்னரே மையங்கொண்டு விட்டாலும் அதன் ஆர்பரிப்பை இப்போதுதான் வலுவாக கேட்க முடிகிறது. இனி வருங்காலத்தில் இது, இதழியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிகுறிகளும், சான்றுகளும் இப்போதே இதழியிலில் தோன்றத் துவங்கிவிட்டன.

ஆனால் மோஜோ அலை இதழியல் கப்பல்களையோ, படகுகளையோ, தோணிகளையோ கவிழக்கப்போவதில்லை. மாறாக அவற்றை வழி நடத்தி முன்னோக்கி அழைத்துச்செல்ல இருக்கிறது. புதிய எல்லைகளை ஏற்படுத்து, வாசகப் பரப்பை நவீன கதை சொல்லும் களமாக விரிவடைய செய்யக்கூடியதாக இருக்கிறது. இன்னும் நிறைய மாயங்களையும், மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம் எனும் நம்பிக்கையை மோஜோ உண்டாக்கி இருக்கிறது.

வாருங்கள் மோஜோ அலையில் நாமும் சங்கமிக்கலாம்.

மோஜோ என்றால் என்ன?

மொபைல் ஜர்னலிசம் என்பதன் சுருக்கமே மோஜோ எனப்படுகிறது. தமிழில் செல்பேசி இதழியல் அல்லது உலாபேசி இதழியல் என கொள்ளலாம். அதாவது செல்பேசி மூலம் செய்தி சேகரிப்பது மற்றும் வெளியிடுவது ஆகியவற்றை குறிக்கும். செய்தி எனும்போது இங்கே வெறும் வரி வடிவிலான செய்தியை மட்டும் குறிப்பிடவில்லை. ஆடியோ, வீடியோ, புகைப்படம், செய்தி விளக்கம் என எல்லாம் ஒருங்கிணைந்த பல் ஊடக தன்மையையே (மல்டிமீடியா) இங்கே குறிப்பிடப்படுகிறது. அதேபோல செய்தி வெளியீடு எனும்போது, செய்திகளை ஊடக நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பதை மட்டும் குறிக்கவில்லை, செய்தி சேகரித்த இடத்தில் இருந்தே அதை ஒளிப்பரப்புவதையும் குறிக்கிறது. இது நேரடி ஒளிபரப்பாகவும் இருக்கலாம் என்பதுதான் இன்னும் அற்புதம். அதனால்தான் மோஜோ முன்னோடிகள் இதன் சாத்தியங்களை கொண்டாடுகின்றனர். புதிதாக மோஜோ பக்கம் வந்தவர்கள் இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். 

மோஜோவில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. மோஜோ செய்திகளுடன் நின்றுவிடவில்லை. அன்றாட செய்திகள், உடனடி செய்திகள் ஆகியவற்றை கடந்து இது டிஜிட்டல் கதை சொல்லலாக பரிணமிக்கிறது. யுத்த பூமியின் சோக கீதங்களையும், அகதிகளின் அவலங்களையும் ஆவணப்படங்களாக்கவும், சாமானியர்களையும், அவர்களின் மனிதநேய கதைகளையும் டிஜிட்டல் பதிவுகளாக்கவும் இது வழி செய்கிறது. படைப்பூக்கம் கொண்ட இதழாளர்களை மோஜோவின் இந்த பரிமாணம் முழுவதுமாக ஆட்கொண்டிருக்கிறது. இந்த உற்சாகத்தோடு புதிய வடிவங்களில் கதை சொல்லலில் ஈடுபட்டிருக்கின்றனர். இவை இதழியலின் எல்லையை விரிவு படுத்திக்கொண்டிருக்கிறது.

லேப்டாப், டிஜிட்டல் கேமரா, ஒலிப்பெருக்கி, டிவி கேமரா, இன்னும் பல விலை உயர்ந்த சாதனங்கள் எதுவுமே வேண்டாம், செயல்திறன் மிக்க செல்பேசி கையில் இருந்தால் போதும்... எந்த இடத்தில் இருந்தும் செய்திகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து வெளியிடலாம் என்பதுதான் மோஜோவின் அடிப்படை. எப்போதும் பாக்கெட்டிலேயே இருப்பதும், எங்கு சென்றாலும் எடுத்துச்செல்லக் கூடியதும் செல்பேசியின் தனித்தன்மையாக இருக்கின்றன. இந்தத் தன்மையே செல்பேசி மூலமான செய்தி சேகரிக்கும் செல்பேசி இதழியலை ஆற்றல் மிக்கதாக மாற்றியிருக்கிறது. இந்தத் தன்மையை உணர்ந்தவர்கள் செல்பேசி இதழியலில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

சாதாரண செல்பேசிகள் படம் எடுப்பது, ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் ஆற்றல் கொண்ட ஸ்மார்ட்போன்களாக பரிணமித்தபோதே அவை எல்லாம் வல்ல இதழியல் சாதனங்களாக ஆகிவிட்டன. இணைய வசதி, அதிக செயல்திறன் மற்றும் விதவிதமான பணிகளை நிறைவேற்றக்கூடிய எண்ணற்ற செயலிகள் ஆகியவை சேர்ந்து நவீன செல்பேசிகளை இதழாளர்களுக்கான ஒற்றை சாதனமாக உருவாக்கி இருக்கின்றன. இது இதழியலுக்கு எத்தனை பெரிய வரப்பிரசாதம்! 

இதழியல் மட்டும் அல்ல, இதழலியலிலும், கதை சொல்லலிலும் ஆர்வம் கொண்ட எவருக்குமே வரப்பிரசாதம் தான். சாமானியர்கள் பலரும் இந்த ஆற்றலை உணர்ந்து செல்பேசி இதழியலில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். கையில் இருக்கும் கருவி செய்தி சேகரிப்பில் கைகொடுக்கிறது என்றால், ஊடக தயவு இல்லாமலேயே அந்தக் கதைகளை பகிர்ந்துகொள்ள சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அவற்றில் நேர்த்தியான கதைகள் இணைய உலகில் வைரலாகி பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. சரியான நேரத்தில், சரியான இடத்தில் எடுக்கப்பட்ட படங்களும் உடனடி செய்திகளாகி கவனத்தை ஈர்க்கின்றன.

செல்பேசி இதழியலின் எழுச்சி

எத்தனையோ துறைகளில் செல்போன் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது போலவே இதழியிலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதன் அடையாளம்தான் மோஜோ எனப்படும் செல்பேசி இதழியலின் எழுச்சி. செல்பேசி இதழியல் என்பது புதுமையான, முன்னோடியான முறையில் இதழியலில் ஈடுபடுவது என்கிறது செல்பேசி இதழியலுக்கான அல்ஜஸிரா கையேடு. செல்போனை ஆயுதமாகக் கொண்டு இதழாளர்கள் குறித்த நேரத்தில் பாதுகாப்பான முறையில் எந்த செய்தியையும் சேகரிக்க முடிகிறது என அந்த கையேடு மேலும் குறிப்பிடுகிறது. இதழாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய தடைகள் மற்றும் வரம்புகளை எதிர்கொள்ள வழி செய்வது செல்பேசி இதழியலின் குறிப்பிடத்தக்க சாதகம் என்றும் இந்த கையேடு குறிப்பிடுகிறது. இது கருத்துச் சுதந்திரத்திற்கும் வலு சேர்க்கிறது.

அல்ஜஸிரா தொலைக்காட்சி செய்தியாளர்கள் செல்பேசி மூலம் செய்தி சேகரிப்பின் பலனை நடைமுறையில் உணர்ந்ததன் அடிப்படையில் இந்தக் கையேடு உருவாக்கட்டுள்ளது என்பதை இங்கே மனதில் கொள்ள வேண்டும்.

செல்பேசியை மட்டுமே வைத்துக்கொண்டு செய்தி சேகரிப்பில் இதழாளர்கள் ஈடுபடும் விதத்தில் அரங்கேறி வரும் புரட்சி மேலும் வேகம் பெற்று வருவதாக, ஆசிய பிராந்தியத்திற்கான செல்பேசி கையேட்டின் அறிமுக வரிகளில் இத்துறை முன்னோடிகளில் ஒருவரான ஸ்டீபன் குவின் குறிப்பிடுகிறார். மோஜோ என பிரபலமாக அழைக்கப்படும் செல்பேசி இதழாளர் செல்பேசியை மட்டும் வைத்துக்கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் செய்தி சேகரித்து வெளியிடலாம் என்கிறார் அவர்.

தொழில்நுட்ப முன்னேற்றம் செல்பேசி இதழியல் எனும் புதுவகையான இதழியலுக்கு வித்திட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செல்பேசி இதழியல் தொடர்பான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. செல்பேசி இதழியலுக்கான வரையறை வேறுபட்டாலும், களத்தில் தனியே செல்பேசியை மட்டும் வைத்துக்கொண்டு செய்தி சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் செல்பேசி இதழாளர்களாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்தி அறைகளில் செல்பேசி இதழியலை இணைத்துக்கொண்டிருப்பதாகவும், செய்தி நிறுவனங்கள் புதிய பல் ஊடக இதழாளர்களை நியமிக்கின்றன அல்லது ஏற்கெனவே உள்ளவர்களுக்கு செல்பேசி இதழியல் பயிற்சி அளிப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தனிநபர் இதழாளர்களை நியமிப்பது செலவை மிச்சமாக்கும் செயலாக அமைவதால் இது பொருளாதார நோக்கிலான நடவடிக்கையாக அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

செல்பேசி இதழியலின் நடைமுறை சாத்தியங்களையும், அவசியத்தையும் எளிதாக புரிந்துகொள்ளலாம். அரசியல் மாநாட்டிலோ, விளையாட்டுப் போட்டியிலோ செய்தியாளர் ஒருவர் செல்பேசி மூலமே அரசியல் தலைவரையோ, விளையாட்டு நட்சத்திரத்தையோ பேட்டி கண்டு வெளியிட முடிவது முற்றிலும் புதிய சாத்தியம் தானே. அந்த நபர் செய்தியாளராக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, சாமானியர் ஒருவர் கூட செல்பேசியில் முக்கியமான கருத்தை பேட்டி எடுத்து வெளியிடலாம். போக்குவரத்து நெரிசலின் நடுவே விஐபியின் வாகனம் மட்டும் நிற்காமல் சென்றால் அந்தக் காட்சியை செல்போனில் படம் பிடித்து வெளியிடுவதும் செல்பேசி இதழியலுக்கான உதாரணம் தானே. 

இதழியல் நோக்கில் பார்க்கும்போது, நவீன ஆற்றல் கொண்ட செல்பேசிகள் மூலம் செய்தி வெளியீட்டில் ஈடுபடுவது எல்லையில்லா புதிய சாத்தியங்களுக்கான அடையாளம் என்றால், இன்னொரு பக்கத்தில் பார்க்கும்போது இது தவிர்க்க இயலாத மாற்றமாகவும் அமைவதை புரிந்து கொள்ளலாம். செல்பேசிகளின் எண்ணிக்கையும், பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. மக்கள் செல்பேசி வாயிலாக இசை கேட்கின்றனர். பொழுதுபோக்கு வசதிகளை அணுகுகின்றனர். செய்திகளையும் பெரும்பாலானோர் செல்பேசி மூலமே அணுகின்றனர். இந்த மாற்றத்திற்கு ஊடகங்கள் ஈடுகொடுக்க வேண்டும் எனில், செய்தி வெளியீட்டிற்கும் செல்பேசிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல், இளம் பயனாளிகள் காணொலி வடிவிலான செய்திகளையே அதிகம் நாடுகின்றனர். இக்கால தலைமுறை வாசகர்களை சென்றடைய வேண்டும் எனில் ஊடகங்கள் காணொலியை உள்ளடக்கிய பல் ஊடக வடிவில் செய்திகளை வழங்க வேண்டும். செல்பேசி சார்ந்த உள்ளடக்கம் இதற்கு கச்சிதமாக பொருந்துகின்றன. கால் மணி நேர செய்தி அறிக்கையை விட, சுவாரஸ்யமான 2 அல்லது 3 நிமிட காணொலி செய்திகள் அதிகம் விரும்பப்படுகின்றன. இதுவரை இல்லாத வகையில் செய்திகளை தேடிச்சென்று புதிய வகை கதைகளை சொல்வதற்கான வாய்ப்பாகவும் இது இதழாளர்களுக்கு அமைகிறது. 

மோஜோ எனும் ஆயுதம்

இன்னும் இரண்டு விஷயங்கள் செல்பேசி இதழிலுக்கான முக்கிய அம்சமாக அமைகின்றன. ஒன்று, செல்பேசி வைத்திருக்கும் சசாமானியர்கள் செய்தி நிகழும் இடங்களில் இருந்து உடனடியாக படம் பிடித்து அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கின்றனர். புதிய ஊடக யுகத்தில் எல்லோரும் செய்தியாளர்கள் எனும் கருத்தாக்கத்தை செல்பேசிகள் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன. எனவே இணைய பரப்பில் எப்போதும் செய்திகள் வெளியிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. செய்திகளை வெளியிடும் உரிமை தங்களுக்கே சொந்தம் எனும் கடந்த கால இதழாளர்களின் இருமாப்பு என்றோ தகர்துவிட்டது. இந்நிலையில் செய்தியாளர்கள் வழக்கமான செய்தி சேகரிப்பு முறைகளோடு முடங்கி நின்றுவிட முடியாது. அவர்கள் புதிய முயற்சிகளுக்கு தயாராக இருக்க வேண்டும். போராட்ட களமோ, பேரிடன் பகுதியோ இதழாளர்கள் செல்பேசியுடன் களத்தில் இறங்கி பல் ஊடக தன்மையுடன் தேவைக்கேற்ப செய்திகளை அளித்தாக வேண்டும். 

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் உணர வேண்டும். சமூக ஊடகங்கள் யார் வேண்டுமானாலும் செய்திகளையும், தகவல்களையும் வெளியிடலாம் எனும் சுதந்திரத்தை ஏற்படுத்திக்கொடுத்திருந்தாலும், அவற்றில் பெரும் இறைச்சல் நிலவுவதை மறுப்பதற்கில்லை. வெளியாகும் தகவல்களில் பொய்களும், திரிபுகளும் அதிகம் இருப்பதால் குழப்பமே மிஞ்சுகிறது. இந்தச் சூழலில், செய்திகளை சரிபார்த்து, உண்மை தன்மை மற்றும் துல்லியத்தை ஆராயந்து தெளிவுபடுத்துவது இதழாளர்களின் கடமையாகிறது. இந்த கடமையை நிறைவேற்ற அவர்களுக்கு செல்பேசி இதழியல் ஓர் ஆயுதம். பல நேரங்களில் பயனாளிகள் வெளியிடும் செய்திகளை முதல் கட்டம் தகவலாக வைத்துக்கொண்டு, முறையான ஆய்வு மற்றும் அலசலை மேற்கொண்டு அதை முழு அளவிலான செய்தி வடிவில் வெளியிடும் சேவையை தொழில்முறை இதழாளர்களிடம் இருந்து இந்த சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது.

இன்னொரு அம்சம், நவீன தொழில்நுட்பம் புதிய வெளியீட்டு மேடைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ட்விட்டர், பேஸ்புக் போன்றவை மூலம் தகவல்களை உடனுக்குடன் பகிர முடிகிறது. இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சேட் மூலம் புகைப்படங்களை பகிர முடிகிறது. பெரிஸ்கோப், பேஸ்புக் லைவ் போன்ற சேவைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு சாத்தியமாகிறது. ஆடியோபூம், ஆன்கர்.எப்.எம் போன்ற சேவைகள் மூலம் குரல் வழி செய்திகளை உடனே வெளியிட முடிகிறது. இவைத் தவிர படங்கள் ,காணொலிகளை திருத்தவும், மேம்படுத்தவும் எண்ணற்ற செயலிகள் அறிமுகமாகி இருக்கின்றன. இவை அனைத்தையும் செல்பேசியில் இருந்தே அணுகலாம் என்பதே இன்னும் சிறப்பு. இந்த சாத்தியங்களை பயன்படுத்திக்கொள்வது தான் இதழாளர்களின் கடமை. செல்பேசி இதழியலின் எழுச்சி அதை தான் வலியுறுத்துகிறது.

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP