டியூட் உனக்கொரு இமெயில் 2 - வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன?

இமெயிலில் இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் அதிகம் இருக்கின்றன. உதாரணத்திற்கு 'கோல்டு மெயில்' பற்றி உங்களுக்குத் தெரியுமா?
 | 

டியூட் உனக்கொரு இமெயில் 2 - வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன?

இந்த வார மெயிலில் மேட் முல்லன்வெக் (Matt Mullenweg) பற்றி பார்க்கலாம். கடந்த வார மெயிலில் அறிமுகம் செய்து கொண்ட ஜெப் டீன் போலவே முல்லன்வெக்கும், யார் இவர் என குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பெயர்தான். ஒரு பில்கேட்ஸ் போலவோ, ஸ்டீவ் ஜாப்ஸ் போலவோ, எலன் மஸ்க் போலவே நன்கறிந்த பெயர் இல்லை என்றாலும், நாம் அறிமுகம் செய்துகொள்ள வேண்டிய ஆளுமைதான் முல்லன்வெக். ஆனால் ஒன்று, மெல்லன்வெக்கை நீங்கள் அறியாமல் இருந்தால்கூட அவர் உருவாக்கிய சேவை நிச்சயம் உங்களுக்கு அறிமுகமானதுதான். 

ஆம், முன்னணி வலைப்பதிவு சேவையான வேர்டுபிரசை உருவாக்கியவர்தான் முல்லன்வெக். அவரை ஓபன் சோர்ஸ் நாயகன் என்றும் வர்ணிக்கலாம். வேர்டுபிரஸ் சேவையை ஓபன் சோர்ஸ் அடிப்படையிலான சேவையாக தழைக்கச் செய்ய, அதன் பின்னே ஆட்டமேட்டிக் எனும் நிறுவனத்தை வர்த்தக நோக்கில் நடத்தி வரும் தொழில்நுட்ப கில்லாடி அவர்.
 
முல்லன்வெக் பற்றி மேலும் பல விஷயங்களை விவரிக்கலாம் என்றாலும், இப்போதைக்கு இமெயில் பற்றிய அவரது கருத்தை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானது. 

இமெயில் காலாவதியாகிவிட்ட சங்கதி என்பது அவரது கருத்து. முல்லன்வெக் இமெயிலை பயன்படுத்துவதில்லை. அவரது நிறுவனத்திலும் இமெயிலுக்கு அனுமதி இல்லை. அலுவலகமும், இல்லாமல் இமெயிலும் இல்லாமல் வெற்றிகரமாக ஒரு வர்த்தகத்தை நடத்தி வருபவர் என ஒரு கட்டுரை முல்லன்வெக்கை பாராட்டுகிறது. 

இமெயில் பழைய சேவை மட்டும் அல்ல; சிக்கலானதும் கூட என்கிறார் முல்லன்வெக். இமெயில் வாயிலாக தொடர்பு கொள்வதைவிட அலுவலக தகவல் தொடர்பை ஸ்லேக் செயலி அல்லது வலைப்பதிவு வாயிலாக மேற்கொள்ளலாம் என்கிறார். 

இதை இங்கு குறிப்பிட காரணம், உங்களில் பலருக்கே கூட இந்தக் காலத்தில் இமெயில் எல்லாம் தேவையா எனும் கேள்வி இருக்கலாம். உங்களில் ஒரு சிலர் ட்விட்டர், வாட்ஸ் அப் என தகவல் தொடர்பு அதிவேகமாக இருக்கும் காலத்தில், இமெயில் வாயிலாக எங்களுடன் தொடர்பு கொள்வது அவுட் ஆப் பேஷன் இல்லையா, இணையத்தில் அப்டேட்டாக இருக்க வேண்டாமா என கேட்டிருந்தீர்கள். இயல்பாக எழக்கூடிய கேள்விகள் தான். ஆனால், இந்தத் தொடருக்கான அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தது போலவே, இமெயில் என்பது தொடர்புக்கான ஒரு வடிவமே. கடித இலக்கியம் பாணியில் இமெயில் வடிவில் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கே இந்த பத்தி. 

அதைவிட முக்கிய காரணம், நான் இமெயில் ரசிகன் என்பது. இமெயிலை நான் விரும்புவதற்கான காரணங்களை விட்டு விடலாம் டியூட், அவை அத்தனை முக்கியம் இல்லை. ஆனால், இமெயில் வழக்கொழிந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பமாக நான் நினைக்கவில்லை. ஹாட்மெயில் காலத்தில் இருந்து இமெயில் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதால் இதை என்னால் கெத்தாகவே சொல்ல முடியும். அதோடு இமெயிலின் வரலாறு என்பது ஹாட்மெயிலுக்கும் முந்தையது.
 
ஹாட்மெயிலை குறிப்பிட்டுவிட்டு, சபீர் பாட்டியா (Sabeer Bhatia) பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. பாட்டியா தான் ஹாட்மெயில் சேவையை உருவாக்கியர். அவரிடம் இருந்து அந்த சேவையை மைக்ரோசாப்ட் பெருந்தொகை கொடுத்து வாங்கியது. அண்மையில் பிளிப்கார்ட்டை அமெரிக்க வால்மார்ட் வாங்கியது போல, 1998-ல் இந்த நிகழ்வு இணைய உலகில் பெரிதாக பேசப்பட்டது. 
ஹாட்மெயில் முதல் இமெயில் சேவை அல்ல, ஆனால் இமெயிலை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாக்கிய முதல் சேவை. அதுவே அதன் வெற்றிக்கு காரணம். அதோடு ஹாட்மெயில் சேவையை முதல்முறையாக பயன்படுத்தியவர்கள் எல்லாம், அட அட்டகாசமாக இருக்கிறதே என வியந்து போய் தங்கள் நண்பர்களுக்கு அந்த சேவையை அறிமுகம் செய்து வைத்தனர். அவர்களும் அசந்து போய் தங்கள் பங்கிற்கு நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இப்படித்தான் ஹாட்மெயில் வைரலாகி புகழ் பெற்றது. அறிமுகமான சில நாட்களில் எல்லாம் அது லட்சக்கணக்கில் பயனாளிகளை பெற்றதன் விளைவாகவே பில்கேட்ஸ் அந்த சேவையை வாங்க முன்வந்தார். 

மைக்ரோசாப்ட் கேட்டதும் தன் நிறுவனத்தை தூக்கி கொடுத்துவிடாமல், பாட்டியா விடாப்பிடியாக இருந்தார். பின்னர் அவரை நேராக பில் கேட்சிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டதும், அப்போதும் பாட்டியா அவர்கள் சொன்ன விலையை நிராகரித்துவிட்டு அதை விட பல மடங்கு தொகையை கேட்டதும் அதற்கு மைக்ரோசாப்ட் ஒப்புக்கொண்டதும் தான், பாட்டியாவை இணைய நாயகர்களில் ஒருவராக்கியது. பாட்டியா பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்தால் பழைய வயர்டு இதழ் கட்டுரையை படியுங்கள்.

டியூட் உனக்கொரு இமெயில் 2 - வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன?

ஜிமெயிலுக்கு பழகிய உங்களுக்கு, பாட்டியாவும் சரி, அவரது ஹாட்மெயிலும் கேள்விப்படாத பெயராக இருக்கலாம். ஆனால் இணைய வரலாற்றில் அவருக்கு தனி இடம் இருக்கிறது. ஹாட்மெயில் பழைய சங்கதியாகிவிட்டது என்றாலும், இமெயில் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது என்பதே விஷயம். அண்மையில் ஜிமெயில் கூட பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். இமெயில் பெறுபவரை பதில் அளிக்க வைப்பதற்கான மென் தூண்டலாக அமையும் நட்ஜ் வசதி, இமெயிலை ரகசிய வடிவில் அனுப்பும் வசதி (வாசிக்கப்பட்ட பின் மெயிலை டெலிட் செய்யும் வசதி அல்லது திரும்ப அழைக்கும் வசதி), ஸ்மார்ட் ரிப்ளை (வாசகத்தை நாம் துவக்கினால் ஜிமெயில் முடித்து வைக்கும்) உள்ளிட்டவை இவற்றில் ஸ்பெஷல்.

இமெயில் பற்றி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால், இமெயிலில் இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் அதிகம் இருக்கின்றன. உதாரணத்திற்கு 'கோல்டு மெயில்' பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

அறிமுகம் இல்லாத ஒருவருக்கு அனுப்பி வைக்கப்படும் இமெயிலை தான் இப்படிச் சொல்கின்றனர். வேலை வாய்ப்பு அல்லது பெரும் புள்ளிகளின் தயவு தேவை எனும் போது எப்படியாவது அவர்கள் மெயில் முகவரியை தெரிந்துகொண்டு, அவருக்கு ஒரு மெயிலை தட்டி விடுவதைத்தான், கோல்டு மெயில் என்று சொல்கின்றனர்.
 
எல்லாம் சரி, அறிமுகம் இல்லாதவர் அனுப்பும் இந்த மெயிலுக்கு பலன் இருக்குமா? சந்தேகம் தான். பார்க்காமலே டெலிட் செய்யப்படலாம் தான். அதனால் தான், மிகச்சிறந்த முறையில் 'கோல்ட் மெயில்' அனுப்புவது எப்படி என அனுபவசாலிகள் பலர் குறிப்பெழுதி வைத்திருக்கின்றனர்.

இதே போலவே, எப்படியும் படிக்கப்பட்டு பதில் அளிக்க கூடிய மெயில்களை எழுதுவது எப்படி எனும் வழிகாட்டி கட்டுரைகளும் இருக்கின்றன.
 
இமெயில் என்றால் சும்மா இல்லை. அதன் தலைப்பு எப்படி இருக்க வேண்டும், வாசகங்களை எப்படி அமைக்க வேண்டும், மெயிலை எவ்வாறு துவக்க வேண்டும் என்றெல்லாம் விளக்கிச் சொல்லும் குறிப்புகள் இருக்கின்றன. குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என்று சொல்வது போல, கோபத்தில் இருக்கும்போது யாருக்கும் மெயில் அனுப்ப கூடாது என்பது போன்ற அறிவுரைகளும் இருக்கின்றன. 
இவற்றை எல்லாம் அறிந்துகொண்டால், இமெயிலை இன்னும் சிறப்பாக பயன்படுத்தலாம். 

இவ்வளவு ஏன்? இமெயிலை வைத்துக்கொண்டு செய்தி மடல் சேவை நடத்தலாம். இப்படி செய்தி மடல் மூலமே ஒரு மினி செய்தி சாம்பிராஜ்யத்தை ஸ்கிம் குழு உருவாக்கியிருக்கிறது தெரியுமா?

கூகுள் அலெர்ட் போன்ற சேவைகளின் தகவலை மெயில் வாயிலாக பெறலாம். புக்மார்கிங் சேவையான பாக்கெட்டில் சேமிக்கும் கட்டுரைகளை இமெயில் பெறலாம். நினைவூட்டலுக்காக நமக்கு நாமே மெயில் அனுப்பிக்கொள்ளலாம். இமெயிலை இன்னும் அலட்சியமாக நினைத்தால் டெய்லிலிட் சேவை பக்கம் எட்டிபாருங்கள். 

அடுத்த மெயிலில் சந்திப்போம் டியூட்!

அன்புடன்,
சைபர்சிம்மன்

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: டியூட் உனக்கொரு இமெயில் 1 - இணைய உலகின் ரஜினி!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP