நிலவுக்கு செல்லும் போட்டி; இந்திய நிறுவனம் வெளியேற்றம்?

நிலவுக்கு செல்லும் போட்டி; இந்திய நிறுவனம் வெளியேற்றம்
 | 

நிலவுக்கு செல்லும் போட்டி; இந்திய நிறுவனம் வெளியேற்றம்?


உலக அளவில் கூகுள் நிறுவனம் நடத்தி வரும் 'லூனார் எக்ஸ்' என்ற நிலவுக்கு செல்லும் போட்டியில் இருந்து, இந்திய நிறுவனம் டீம்இண்டஸ் வெளியேறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த போட்டியில், உலகம் முழுவதும் இருந்து 33 அணிகள் பங்கேற்றன. கடந்த வருடத்தில் பெரும்பாலான அணிகள் நீக்கப்பட்டு, இந்திய நிறுவனம் டீம்இண்டஸ் உட்பட 5 நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும், டீம்இண்டஸ் உருவாக்கும் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்ப ராக்கெட் வழங்கி உதவுவதாக உறுதியளித்தது.

போட்டியில் பங்கேற்கும் அணிகள், நிலவில், தங்கள் செயற்கைக்கொளை தரையிறக்கி, 'ரோவர்' எனப்படும் ரிமோட் கொண்டு இயக்கக்கூடிய சிறிய ரக வாகனத்தை இயக்கி, 500 மீட்டர்கள் வரை செல்ல வேண்டும். அங்கிருந்து HD படங்கள் எடுத்து அதை பூமிக்கு அனுப்ப வேண்டும். இதில் வெற்றி பெரும் அணிகளுக்கு சுமார் 222 கோடி ரூபாய் (35 மில்லியன் டாலர்கள்) பரிசு வழங்கப்படும்.

அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சர்வதேச நாடுகளின் கூட்டணி அமைப்பு மற்றும் இந்தியாவின் டீம்இண்டஸ் என ஐந்து அணிகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. நிலவில் தரையிறக்கும் தொழில்நுட்பம் குறித்து வைக்கப்பட்ட போட்டியில், இந்தியாவின் டீம்இண்டஸ் கடந்த வருடம் வெற்றி பெற்றது. இதில், சுமார் 6 கோடி ரூபாய் (1 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையை அந்நிறுவனம் பெற்று இந்திய விஞ்ஞானிகளிடம் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில், போதிய நிதியுதவி இல்லாததால், இந்த போட்டியில் இருந்து டீம்இண்டஸ் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரோவின் ராக்கெட்டில் அந்நிறுவனம் தனது செயற்கைக்கோளை அனுப்ப இருந்த நிலையில், அதற்கான தொகையை சரியாக அவர்கள் கட்டவில்லை, என இஸ்ரோ தரப்பில் கூறப்படுகிறது. எனவே டீம்இண்டஸ் உடனான ஒப்பந்தத்தை இஸ்ரோ ரத்து செய்துள்ளது.  இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் உருவாக்கிய கோளை நிலவுக்கு அனுப்ப டீம்இண்டஸ் முடிவு செய்திருந்த நிலையில், இஸ்ரோ ஒப்பந்தம் ரத்தான செய்தி இந்திய விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த டீம்இண்டஸ் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP