இதெல்லாம் கூட ஆண்மைக்குறைக்கு காரணம் ஆகுமா?

குழந்தையின்மை இன்றைக்கு அதிகரித்துவிட்டது. உடல் பருமன் முதல் மன அழுத்தம் வரை ஆண்கள் அன்றாடம் சந்திக்கும் சில பிரச்னைகளே குழந்தையின்மைக்கு காரணமாக இருக்கலாம் என்கிறது மருத்துவம். இவற்றைத் தவிர்த்தால் குழந்தை நிச்சயம்!
 | 

இதெல்லாம் கூட ஆண்மைக்குறைக்கு காரணம் ஆகுமா?

ஆண்மைக்குறை... இன்றைய சூழலில்  பெரும்பாலான ஆண்களுக்கு மிகச் சாதாரணமாக இருக்கும் ஒரு பிரச்னை. இவற்றுக்கெல்லாம் மன  அழுத்தம் மற்றும் உளவியல் தொடர்பான பிரச்னைகளே முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இன்றைய பணிச்சூழலில் மன அழுத்தமும் உளவியல் பிரச்னைகளும் இல்லாதவர்களை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. கொடுக்கிற சம்பளத்தைவிட அதிக வேலை வாங்கும் நிறுவனங்களே இன்றைக்குக் காணப்படுகின்றன. ஊழியர்களைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லாமல் அவர்களை பல்வேறு வழிகளில் மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர். விளைவு, தன்னைப் பற்றி தன்  உடலைப் பற்றி தன் குடும்பம் பற்றி சிந்திக்காமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றான். 

மகிழ்ச்சியான சூழல் இருந்தால்தானே ஒரு மனிதனால் தாம்பத்ய உறவில் முழுமையாக ஈடுபட முடியும். இரவு நெருங்கியதும் அவனால்  தாம்பத்யம் பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு வேலைப்பளுவால் மன அழுத்தம் பாதிக்கிறது. தன் கணவனின் நிலை அறிந்து ஒரு பெண் வெட்கத்தைவிட்டு அவனை படுக்கைக்கு அழைத்தாலும்கூட அந்த  ஆண்மகனால் முடியாமல் மனைவியை திருப்திப்படுத்த முடியாமல் போகிறது. அந்த அளவுக்கு அவனுக்கு  மனநிலையில் மாற்றங்கள்..!

இன்னும் சொல்லப்போனால் விரைப்புத்தன்மைக்காக மருந்துகள் சாப்பிட்டாலும் மனதளவில் பாதிப்பு இருக்கும்போது என்ன பயன்? தாம்பத்யத்தின்மீது ஒருவித வெறுப்பே அவனுக்குள்  காணப்படுகிறது. தூக்கமின்மையும்கூட ஒரு மனிதனின் செக்ஸ் வாழ்க்கையைப் பாதிக்கிறது. 

வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தூக்கமின்மையை ஏற்படுத்தி ஹார்மோன்  உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். கூடவே  தாம்பத்யத்தில் விருப்பமின்மை, சோர்வை ஏற்படுத்திவிடும். வேலையின் நிமித்தம் இரவில்  நீண்டநேரம் கண்விழித்திருப்பது, மூச்சுத்திணறல் போன்றவையும் தூக்கமின்மையை ஏற்படுத்தும். இப்படியாக பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் இரவு உணவை முடித்துவிட்டு சில மணி நேரங்கள் கழித்து, அதாவது உணவு செரிமானமாகியிருக்கும் நிலையில் உடலுறவில்  ஈடுபடுவது அற்புதமான தூக்கத்தைக் கொடுக்கும். ஆக, தூங்குவதற்கும் உடலுறவு வைத்துக்கொள்வது ஒரு மருந்தாக அமைகிறது.

நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும்கூட ஆண்மைக்குறைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மைக்காக சிலர்  எடுத்துக்கொள்ளும் மருந்துகள்கூட ஆண்மைக்குறைவை ஏற்படுத்தலாம். ஆம்... பல மருந்துகளில் சேர்க்கப்படும் ஸ்டீராய்டுகளும் ஆன்டிபயாடிக் தன்மைகளும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்; அது ஆண்மைக்குறைவை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

சாதாரண ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் புற்றுநோய் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டாலும்கூட ஆண்மைக்குறைவு மற்றும் விரைப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நோய் மற்றும் குறைபாடுகளுக்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை  பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

இன்றைக்கு மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆண்களில் பலர் பல்வேறு காரணங்களால் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். சில ஆண்கள் தாம்பத்ய உறவின்போது நீடித்த உறவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை எப்போதாவது மது அருந்தினால், செக்ஸ் மீதான ஆர்வத்தை அதிகரிக்கலாம். ஆனால், அது தொடர்கதையானால், அதன் வீரியம் எப்படி இருக்கும்  என்பது ஆராய்ச்சிக்குட்பட்டது.

மற்றபடி அதிக அளவில் மது அருந்துவது அல்லது தினமும் குடிக்கும் பழக்கம் நிச்சயம் இல்லற வாழ்க்கையைப் பாதிக்கும். மது அருந்துவது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன் சுரப்பை பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கலாம். எனவே, தாம்பத்யம் சிறக்க விரும்பினால், மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

அதிக உடல் எடைகூட தாம்பத்யத்துக்கு இடையூறாக இருக்கும். தொப்பை, உடல்பருமன் உள்ள ஆண்களால் விரும்பும்விதத்தில் உறவு வைக்க முடியாமல் போகும். ஆக, உடல் எடை செக்ஸ் உறவுக்கான ஆற்றலைக் குறைப்பதுடன் தன்னம்பிக்கையையும் குறைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அதிக உடல் கொழுப்பானது டெஸ்டோஸ்டிரோன் அளவைக்குறைத்து விரைப்புத்தன்மையில் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். அதிக எடை உள்ளவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது எடையைக் குறைக்க நினைப்பதுண்டு. ஆனால் அவர்கள் தாம்பத்யத்தில் முழுமையான இன்பம் பெற நிச்சயம் எடையைக் குறைத்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் முன்னேற தன்னம்பிக்கை மிக முக்கியம். தாம்பத்யத்தில் வெற்றி பெறவும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். என்னால் முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் ஏற்பட வேண்டும். தாம்பத்ய உறவின்போது தன்னால் தன் மனைவியை முழுமையாக திருப்திப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உறவில் ஈடுபட வேண்டும். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நினைத்தபடியே எல்லாம் தவறாகத்தான் நடக்கும். மாறாக, தன்னை தகுதிவாய்ந்த ஓர் ஆண்மகனாக நினைத்துக்கொண்டு செயல்பட்டால் எல்லாம் சுபமாகும். 

மேலும், உறவின்போது ஏற்படும் குறைபாடுகளைக் களைவது குறித்து உங்கள் மனைவியுடன் மனம் விட்டுப் பேசுங்கள். அதுமட்டுமல்ல கணவன் மனைவிக்கிடையே ஏதும் பிரச்னைகள் இருக்கும்போது முழுமையாக தாம்பத்யத்தில் ஈடுபட முடியாது. மனைவியும் ஏதோ கடமைக்காக, கணவனின் விருப்பத்துக்காக மரக்கட்டையைப்போல இருப்பார்; கணவனும் கடமைக்காக வெற்றுச்செயல்பாடாக அதை நிறைவேற்றிவிட்டுச் செல்வார். அதில் எந்தவித சுவாரஸ்யமும் இருக்காது. பிரச்னைகள பேசித் தீர்த்துக்கொண்டு முழுமனதுடன் செயல்படுங்கள்; நிச்சயம் ஆனந்தக் கடலில் முத்துக் குளிக்கலாம்.

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP