ஏமாளிகளாக மாறிய மகாராஷ்டிரா மக்கள்!!

யதார்த்தமாக பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய யாரும் ஆட்சி அமைக்க இயலாத நிலையில், அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் தான் இப்போது குடியரசு தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது
 | 

ஏமாளிகளாக மாறிய மகாராஷ்டிரா மக்கள்!!

கலியுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுவார்கள். அது உண்மை என்று அரசியல் உலகம் நிரூபித்து விட்டது. அரசியல் கட்சிகளின் அடிப்படை லட்சியம் ஆட்சியை பிடிப்பது. சிலருக்கோ நேரடியாக முதல்வராக வேண்டும் என்பது தான் ஒரே லட்சியம். இதற்காக .தேர்தலுக்கு முன்பாக  முடிந்த அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.  கடைசிவரையில் பேரம் படியாவிட்டால் கொள்கையை வெளிப்படுத்தி தனித் தனியே தேர்தலை சந்திப்பார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்து, மக்களும் ஆட்சி அமைக்க அங்கீகாரம் கொடுத்த பின்னர், யார் ஆட்சியை அமைப்பது என்கிற ஒரே காரணத்திற்காக ஆட்சியை இழந்த அரசியல்வாதிகள் மகாராஷ்டிராவில் மட்டும் தான் உண்டு.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே உயிருடன் இருந்த வரை நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றார். அவர் மரணத்திற்கு பிறகு சிவசேனா உடைந்தது. பால்தாக்கரேவின் மூத்த மகன் உத்தவ்தாக்கரே சிவசேனாவின் தலைவரானார், இளைய மகன் ராஜ்தாக்கரே நவநிர்மான் சேனா என்று தனி கட்சி தொடங்கினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பாஜக ஆகியவை தனித் தனியே தேர்தலை சந்தித்து, அதில் பாஜக முதலிடம் பெற்றது. அதன் பின்னர் பாஜகவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைத்தன. இதன் பரிசாக மத்தியில் அதீத மெஜாரட்டி இருந்தால் கூட சிவசேனாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதே நட்பு இந்த தேர்தலிலும் தொடர்ந்தது. பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் விதத்தில் 161 இடங்களைப் பிடித்தது. இதில் 105 இடங்களை பாஜகவும், 56 இடங்களை சிவசேனாவும் பிடித்திருந்தது.

இந்த கூட்டணியில் அதிக இடங்களில் சிவசேனா தான் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றி வெளிப்படையாக தெரிந்ததும், பாஜக, சிவசேனா இணைந்து ஆட்சி அமைத்திருக்கலாம். ஆட்சியும் அமைக்கப்பட்டிருக்கும், மக்கள் விருப்பமும் நிறைவேறி இருக்கும். ஆனால் சிவசேனா, முதல்வர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. சிவசேனா எம்எல்ஏகள் கட்சித் தலைவராக ஏக்னாத் ஷின்டே தேர்வு பெற்றார். ஆனாலும் முதல்வராக ஆதித்யா தாக்கரே தான் முன்னிருத்தப்பட்டார்.

அதித்யா தாக்கரேயை முதல்வராக பாஜக ஏற்றால் அக்கட்சியுடன் ஆட்சி, அல்லது அவரை ஏற்கும் கட்சியுடன் ஆட்சி என்ற முடிவுக்கு சிவசேனா வந்தது. இதற்கு உத்தவ் தாக்கரேயின் புத்திர பாசம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், சிவசேனாவின் இந்த முடிவுக்கு பாஜக கட்டுப்படவில்லை. சிவசேனா எம்.பி சஞ்சைராவுத், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் சத்தம் மட்டுமே ஓய்ந்திருந்த நிலையில், எதிரிகளிடம்   பேச்சுவார்த்தை நடத்தியவர் இவர். அவர்களும் சிக்கியது ஆடு என்ற கதையாக முந்தைய ஆட்சியின் பதவிக்காலம் முடியும் வரை சிவசேனா  ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டார்களே தவிர்த்து ஆதரவு கடிதங்கள் கொடுக்கவில்லை.

இதை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கவனித்துக் கொண்டிருந்தார். ஆட்சி முடியும் நாள் வரை காந்திருந்தவர், உடனடியாக பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். வாஜ்பாய் 13 நாள் ஆட்சி, கர்நாடகாவில் எடியூரப்பா அரசு கவிழுந்தது என்ற நிலையில், ஏற்கனவே ஆதரவு கிடைக்காது என்று நன்கு தெரிந்தும் ஆட்சியமைத்து கவிழ்ந்த அனுபவம் அவர்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தயக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் எருமை மாட்டை தண்ணீரில் போட்டு விலை பேசியவிதமாக ஆதரவு கடிதம் இல்லாமலேயே ஆட்சி அமைக்க விரும்பியதால் அதுவும் முடியாமல் போனது.

யதார்த்தமாக பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய யாரும் ஆட்சி அமைக்க இயலாத நிலையில், அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் தான் இப்போது குடியரசு தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாஜக மற்ற கட்சிகளில் இருந்து 10 அல்லது 15 எம்எல்ஏகளை தன் கட்சியில் சேர்த்து ஆட்சியை அமைக்கலாம். அந்த சூழ்நிலையில் மேலும் 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி தொடரும். அல்லாத பட்சத்தில் மகாராஷ்டிரா குமாரசாமி சிக்க வேண்டும். அப்போது கர்நாடகா போன்ற ஆட்சி அங்கு அமையும். ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் ஏமாற்றம் மக்களுக்கு தான் என்பதில் சந்தேசமில்லை.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP