மீண்டும் கேசரி வந்தால் என்ன செய்வார் ராகுல்?

இப்போது ராகுல் தலைவராக உருவானது கூட, அவரின் தகுதி, திறமை ஆகியவற்றை விட, அவர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், சோனியாவின் உடல் நிலையும் தான் காரணம். இந்த சூழ்நிலையில் அவரை விட சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் வயது அனுபவத்தில் மிகவும் மூத்தவர்கள், அவர்கள் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. சிதம்பரம், அசோக்கெலாட், கமல்நாத் போன்றவர்கள் ராகுலின் கையை முறுக்கி தங்கள் வாரிசுகளுக்கு எம்பி சீட் பெற முடிந்தது.
 | 

 மீண்டும் கேசரி வந்தால் என்ன செய்வார் ராகுல்?

காங்கிரஸ் கட்சி இக்கட்டான நிலையில் இருக்கிறது. லோக்சபா தேர்தலில், அந்தக் கட்சி பெற்ற அடி, ராகுலை நிலைய குலையச் செய்துவிட்டது. இந்த நேரத்தில் கட்சியை தாங்கி பிடிக்க வேண்டிய ராகுல், தலைமைப் பதவியே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார். மாற்றுத் தலைவரை தேர்வு செய்ய ஒரு மாத காலம் நேரம் கொடுத்துள்ளார். 

தனக்கு தலைவர் பதவி தேவை இல்லை என்பதுடன், நேரு குடும்பத்தில் இருந்து யாருக்கும் தலைவர் பதவி வேண்டாம் என்று சொல்லியதன் மூலம், அவர் கட்சியை கைகழுவும் நிலைக்கு வந்து விட்டார் என்றே சொல்லலாம். ராகுலின் இந்த முடிவு, காங்கிரஸ் கட்சிக்கு எந்தளவுக்கு பலன் தரும் என்பது போகப் போகத்தான் தெரியும். ராகுல் தலைவராக இருக்கும் போதே கமல்நாத், சிதம்பரம், அசோக்கெலாட் போன்றவர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். 

பதவி இல்லாமல் இருக்கும் நிலையில், சீதாராம் கேசரி போன்றவர் மீண்டும் தலைவராக வந்து அமர்ந்தால், அவரை ராகுல் எப்படி சமாளிப்பார் என்பது பதில் தெரியாத கேள்வி தான்.

காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து ராகுல்வரை, 85 தலைவர்கள் மாறியிருக்கிறார்கள். இதில் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர் தான் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதில் நேரு, இந்திரா ஆகியோர் இருமுறை தலைவர் பதவியை வகித்துள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் பதவியில் வேறு வழியில்லாமல் தான் நேரு குடும்பத்தை சாராதவர்கள் பிரமராக இருந்து இருக்கிறார்கள். 

இவர்களில் சர்ச்சைக்குரிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சீதாராம்கேசரி. 1996ம் ஆண்டு பிவி நரசிம்மராவ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட போது, சீதாராம் கேசரி தலைவராக உருவானார். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து இருந்தது. அதே நேரத்தில் பாஜக அரசு ஆட்சி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டதும், காங்கிரஸ் கட்சி தேவகவுடாவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. 

அந்த சூழ்நிலையில் சீதாராம்கேசரி தானே பிரதமராக வேண்டும் என்று தேவகெளடா அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கினார். ஆனால் கடைசி நேர சமரசத்தால் ஐகேகுஜரால் பிரதமரானார். இந்நிலையில், ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானது. அதில் திமுகவிற்கு ராஜீவ் கொலையில் தொடர்பு இருப்பது போல தகவல் வெளிவந்தது. 

பத்திரிக்கைகளில் கசிந்த இந்த தகவல் அடிப்படையில், கேசரி திமுகவை கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திமுக அமைச்சர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். ஆனால் குஜரால் அதற்கு செவி சாய்க்காமல் போகவே, காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கேசரி அறிவித்தார். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. 

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றொரு தேர்தலை சந்திக்கும் நிலையில் இல்லை. இதனால் தலைமை பதவி வேண்டாம் என்று கூறிய சோனியா களம் இறங்கி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். அதை மக்கள் ரசித்தனர் ஆனாலும், 140 இடங்களில் தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் கேசரியின் பதவியை பறித்துவிட்டு சோனியா அந்த இடத்தில் அமர்ந்தார்.

இப்போது ராகுல் தலைவராக உருவானது கூட, அவரின் தகுதி, திறமை ஆகியவற்றை விட, அவர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், சோனியாவின் உடல் நிலையும் தான் காரணம். இந்த சூழ்நிலையில் அவரை விட சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் வயது அனுபவத்தில் மிகவும் மூத்தவர்கள், அவர்கள் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. சிதம்பரம், அசோக்கெலாட், கமல்நாத் போன்றவர்கள் ராகுலின் கையை முறுக்கி தங்கள் வாரிசுகளுக்கு எம்பி சீட் பெற முடிந்தது.

அவர்கள் தங்களின் வாரிசை வெற்றி பெற செய்தார்களே தவிர்த்து, கட்சியை வெற்றி பெற செய்யவில்லை. இதில்  மிகக் கேவலமாக நடந்தது சிதம்பரம் தான். முதல் நாள் சிவகங்கைக்கு அவர் மகன் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், மறுநாள் அறிவித்தற்கு காரணம் என்ன என்பது இது வரையில்  தெரியவில்லை. 

ராகுல் தலைவராக இருக்கும் போதே இந்த நிலை. சிறுவர்கள் விளையாட்டில் தோற்றாலோ, அல்லது தோல்வி வரும் என்று தெரிந்தாலோ ஆட்டத்தை கலைத்து விடுவார்கள். குறிப்பாக செஸ் விளையாட்டாக இருந்தால், அந்த பலகையை துாக்கி சாய்விட்டு காய்களை சிதற அடிப்பார்கள். ராகுல் நடவடிக்கையும் இந்த வகை சிறுவர்களுக்கு ஒப்பானதே. 

தலைவர் பதவிக்கு வருபர்கள், ஏற்கனவே இருந்தவர்களை ஓரம் கட்டி விட்டு தங்களின் ஆதரவாளர்களை நியமனம் செய்தவது நிர்வாகவியலின் பால பாடம். ராகுல் தலைவராக வந்த உடனேயே மூத்த தலைவர்களை ஏறக்கட்டிவிட்டு இளம் தலைமுறையினரிடம் கட்சியை கொடுத்து இருக்க வேண்டும். 

அப்போது செய்யாமல் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல் இப்போது செய்வது கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டு தலையை சொறிவது போல மாறும். அதுவும் புதிதாக பதவிக்கு வருபவர் சீதாராம் கேசரி போன்று இருந்தால், அப்புறம் நேருவின் குடும்பமே காங்கிரஸ் கட்சியில் தலையெடுக்க முடியாது. இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ ராகுல் உணர்வது அவருக்கு நல்லது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP