முதல் சம்பளத்தை வீணடிப்பதோ...?

இந்த நாட்டை வாழ செய்வதும் வீழச் செய்வதும் ஒவ்வொருவரின் விரல் நுனியில்தான் இருக்கிறது. முதல் சம்பளத்தை புத்திசாலிகள் வீணடிக்க மாட்டார்கள். யார் புத்திசாலி என்பது மே 23ம் தேதி தெரிந்து விடும்.
 | 

முதல் சம்பளத்தை வீணடிப்பதோ...?

முதல் முத்தம், முதல் காதலி, முதல் சம்பளம், முதல் வாகனம் என வாழ்க்கையில் முதல் என்பதற்கு சிறப்பான இடம் உண்டு. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை போலவேதான் நாடும். பக்கீம் சந்திர சட்டர்ஜி ஆனந்த மடம் நாவலில் நீ நாட்டுக்காக என்ன கொடுப்பாய் என்ற கேள்வி எழும். அதற்கு பதிலாக நான் உயிரையே கொடுப்பான் என்று பதில் கூறுவான் கதாநாயகன். அப்போது எளிதான விஷயம் உயிரைக் கொடுப்பது, வாழ்ந்து சாதிப்பது தான் கஷ்டம் அதை செய்ய வேண்டும் என பதில் கிடைக்கும். 

அதைப் போலவேதான் இந்த நாட்டை திருத்தவே முடியாதா என்ற புலம்பலுக்கு தீர்வு தேர்தல் தான். சில இடதுசாரி அமைப்புகள் தேர்தல் பாதை திருடர் பாதை, புரட்சி செய் என்றெல்லாம் உணர்ச்சிகளை துாண்டிவிடும்.  இந்தியாவில் அதே போல எதுவும் நடக்காது. அந்த வீராவேசமான கோஷமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு பதிலாக அடுத்த 5 ஆண்டுகள் இந்த நாடு எதை நோக்கி போக வேண்டும் முடிவு செய்யும் வாய்ப்பு நம் கையில் தான் உள்ளது.

அதை பயன்படுத்தப் போகிறோமா? ஆம் என்றால் எப்படி என்பதில் தான் நம் புத்திசாலி தனமும், சாதுார்யமும் உள்ளது. 

திமுக பொருளாளர் துரை முருகன் கடந்த காலத்தில், பெண்கள் நாறும் கருவாட்டை கூட முகர்ந்து நல்லதா கெட்டதா என பார்ப்பார்கள். அதுவே நாம் ஓட்டு போடுபவர் நல்லவரா கெட்டவரா என பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். 

முதல்தலைமுறை வாக்காளர்கள் ஓட்டு அவர்களின் முதல் சம்பளத்துடன் ஒப்பிட்டு கோவையில் மோடி பேசியது முற்றிலும் உண்மை. முதல் சம்பளத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதில் இருந்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். திருப்பதி உண்டியலுக்கு போகும், கல்லுாரி நண்பர்களுக்கு பார்ட்டி என்று செலவாகும். பெற்றோர், மனைவி கைகளி்ல தஞ்சம் அடையும். வங்கி கணக்கு தொடங்குவார்கள், சிலர் அதில் தான் ஆபீஸ் போக நல்ல சட்டை, பேண்ட் வாங்குவார்கள். இன்னும் யோசிக்க முடியாதவிதங்களில் முதல் சம்பளம் செலவழியும். 

இதே போல தான் ஓட்டும், பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடலாம் அல்லது நேர்மையாக ஓட்டுப் போடலாம். நம் கண் முன்னே தெரிவது பாஜக ஆட்சி, பாஜக கூட்டணி ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, 3வது அணியின் ஆட்சி. 

தமிழகத்தை பொறுத்தளவில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, கமல், சீமான் கட்சிகள், நோட்டோ ஆகியவை தான். 

இதில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால், குறிப்பாக பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வாக்களித்தால், ஆட்சிக்கு வரும், தனிப்பட்ட முறையில் அதிக எண்ணிக்கை பிடிக்கும் கட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பாஜகவிற்கு அது உதவியாக இருக்கும். பொன். ராதாகிருஷ்ணனைப் போல மேலும் சிலர் அக்கட்சியின் தமிழக பிரதிநிதிகளாக மத்தியில் அமருவார்கள். இந்த கூட்டணியில் பாஜக போட்டியிடும் 5 இடங்களை தவிர்த்து எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றாலும். அது முதன் முதலில் நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு வலு சேர்க்கலாமே தவிர்த்து வேறு எந்த வகையிலும் பலன் கொடுக்கப் போவதில்லை. கடந்த தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி பெற்ற வெற்றியே இதற்கு நல்ல உதாரணம். 

அடுத்தது காங்கிரஸ் கூட்டணி. தனிப் பெரும்பான்மை பெரும் என்று அக்கட்சியினரே நம்பவில்லை. அப்படியே பெற்றாலும், பிரதமர் ராகுல் தான். அவருக்கு மன்மோகன் சிங் போல அடங்கி செல்லவும் முடியாது. இந்திராவை போல ஆளவும் தெரியாது. அதிகாரிகளும், மூத்த தலைவர்களும் ஒரு பக்கம் இழுத்தால், மற்றொரு பக்கம் ராகுல் இழுப்பார். அந்த ஆட்சி இப்படித்தான் இருக்கும். இந்த கயிறு இழுக்கும் போட்டியிலேயே 5 ஆண்டுகள் கடந்து விடும். 

ராகுல் பிரதமர் என்று அந்த கட்சியே கூறவில்லை என்ற போது மம்தாவில் தொடங்கி, நம்ம சந்திரபாபு நாயுடு பிரதமர் என்கிற முள் கிரீடத்தை சுமக்க பலர் தலையை மட்டும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். இவர்களில் யாராமும் சுமார் 50 தொகுதிக்கு மேல் வெற்றி பெற முடியாது. இந்த சூழ்நிலையில் சந்திரசேகர் ஆட்சியின் 2ம் பாகம் தான் மீண்டும் தொடரும். மக்கள் உணர்வின் அடிப்படையில் பிரதமர் பதவியல் அமர்ந்த விபி சிங் அரசு கஜானாவை காலி செய்து வைத்தால் அதன் பின்னர் பிரதமர் பதவிக்கு வந்த சந்திரசேகர் நாட்டின் தங்கத்தை அடகு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலை இல்லாவிட்டால் கூட  காங்கிரஸ், 3 வது அணி ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட பேரும் புகழும் தான் முக்கியமாக திகழும் என்பதால் ஒரு சில ஆண்டுகளிலேயே கஜானா காலியாகும். 

ஜெயலலிதா எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை சாதிப்பார். ஆனால் கருணாநிதியோ எல்லோருக்கும் பயந்து கொண்டு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை மயக்கத்திலேயே வைத்திருப்பார். பிரதமர் வாஜ்பாய் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததையும், திமுக ஆட்சியில் தமிழகம் இருளகமாக மாறிய பின்னரும் ஆற்காட்டார் மின்துறை அமைச்சராக இருந்ததையும், இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் இறந்த போதும் கூட காங்கிரஸ் கட்சியை சட்டை கோர்த்து பிடிக்காமல் இலக்கிய, இலக்கணங்கள் உரைநிகழ்த்தி கருணாநிதி ஆட்சியை தொடர்ந்ததையும் கூறலாம். 

இவர்களுக்கு இணையாவர்கள் தான் மோடியும் மற்றவர்களும். கடந்த 5 ஆட்சிக்கு வந்ததும் சலுகை மழை பொழிந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு இருக்கலாம். அதற்கு பதிலாக ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்று மக்கள் கடுமையாக எதிர்க்கும் திட்டங்களை மோடி அமல்படுத்தியிருக்க வேண்டிய அவசியமே இருக்காது.  ஆனால் அவர் நாட்டை பற்றி சிந்தித்ததால் தான் அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்று நிச்சயம் இல்லாத நிலையில் கூட இது போன்ற திட்டங்களை அமல்படுத்தினார். ராகுல், மம்தா, சந்திரபாபு நாயுடு, மாயாவதி போன்றவர்களை விட மோடிக்கு என்ன அரசியல் அறிவு குறைவா, அப்படி இருக்கையில் இந்த அரசு ஏன் இப்படி செய்தது என யோசிக்க வேண்டும். மேலும் இந்திராவிற்கு பிறகு அதித மெஜாரட்டி கிடைத்தும் கூட இந்த நாட்டிற்கு நல்லது செய்யாவிட்டால் வேறு எப்போது நல்லது செய்ய முடியும். 

சரி மோடியை தோற்கடித்துவிட்டால் யார் வருவார் என்று கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தெரியவில்லை. அதன் பிறகு தானே அவர்கள் பொருளாதார நிலை என்ன, வெளியுறவுக் கொள்கை என்ன, நம்ம பக்கத்து எதிரிகள் பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்றவற்றை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் விவாதிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் அவற்றை யெல்லாம் விமர்சனம் செய்வது காற்றில் கத்தி சுத்துவது போலதான். அதனால் யாருக்கும் பலன் இல்லை. 

மோடியை தோற்கடிக்க முடிவு செய்துவிட்டீர்களா ? அவரை விட சிறந்தவரை அந்த பதவியில் அமர்த்த உங்கள் ஓட்டு ஏற்பாடு செய்யும் என்றால் கட்டாயம் தோற்கடியுங்கள். அதைவிடுத்து கடந்த காலத்தில் மாநிலத்தில் மத்தியில் ஆட்சி செய்வதவர்களை மீண்டும் வெற்றி பெற செய்யப் போகிறீர்கள் என்றால் கடந்த 2014 பொதுத் தேர்தலில் நீங்கள் ஏன் அவர்களை தோல்வி அடைய செய்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள். மன்மோகன் சிங் ஊழல் வாதி இல்லை என்றாலும் அவரின் அமைச்சர்கள் ஊழல் புரிவதில் உலக சாதனை செய்தார்கள்.

அதே நேரத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு போன்ற எந்த மக்கள் விரோத திட்டங்ளும் அவரது ஆட்சியில் அரங்கேரவில்லை. இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த போதும் கூட பக்கத்து நாட்டின் நட்பு பாதிக்கப்படும் என்ற எண்ணதில் தட்டிக் கேட்க கூடவில்லை. இப்படிப்பட்ட மகான் ஆட்சியை தான் நாம் கடந்த தேர்தல் விரட்டிவிட்டி அடித்தோம். தமிழகத்தில் கூட 2 இடங்களில் பாஜவை வெற்றி பெற செய்தோம். தற்போது அவர்கள் எந்த விதத்தில் மாறிவிட்டார்கள். 

கடந்த 2014ம் ஆண்டில் அதிமுகவிற்கு தமிழகத்தில் 37 இடங்களை கொடுத்தோம். ஆனால் பலன் என்னவோ பூஜியம் தான். அதிமுக மீது கோபித்துக் கொண்டு இந்த முறை 39 இடங்களையும் திமுகவிற்கு கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், மத்தியில் காங்கிரஸ் மைனாரிட்டி அரசாக வந்தால் கூட திமுகவிற்கு 4 அமைச்சர்களாகவது கிடைப்பார்கள். அவர்கள் சொத்து சேர்க்க அது உதவி செய்யும். அதைவிட்டு மோடி ஆட்சியில் அமர்ந்து 39 இடங்களை திமுக பிடித்தால் கடந்த முறை அதிமுக தமிழகத்திற்கு என்ன செய்ததோ அதையே மீண்டும் திமுக செய்யும். 

இந்த நாட்டை வாழ செய்வதும் வீழச் செய்வதும் ஒவ்வொருவரின் விரல் நுனியில்தான் இருக்கிறது. இதை யோசித்து பார்த்து வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியது கட்டாயம். முதல் சம்பளத்தை புத்திசாலிகள் வீணடிக்க மாட்டார்கள். யார் புத்திசாலி என்பது மே 23ம் தேதி தெரிந்து விடும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP