அரசு ஊழியர்களே காலம் மாறிவருவதை உணருங்கள் : மக்கள் உங்களுக்கு அடிமைகள் அல்ல!!!!

காலங்கள் மாறுவதற்கேற்ப, அரசு அதிகாரிகளும் தங்களின் செயல் முறைகளை மாற்றி கொள்ள வேண்டும்!!!
 | 

அரசு ஊழியர்களே காலம் மாறிவருவதை உணருங்கள் : மக்கள் உங்களுக்கு அடிமைகள் அல்ல!!!!

வெளிநாட்டு அதிபர் ஒருவர் இந்தியாவின் ஓர் தெரு வழியாக நடந்து சென்ற போது தொழிற்சாலை வெளியே சைக்கிள்கள் நிறைய நிற்பதை கண்டு, அது பற்றி தன் வழிகாட்டியிடம் கேட்கிறார். அதற்கு அவர் இந்நாட்டு மன்னர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்கிறார். இன்னும் சிறிது தூரம் சென்றவுடன், போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கார் ஒன்று கடந்து சென்றது. இதில் யார் செல்கிறார் என்று அவர் கேட்க மக்களின் சேவகர் செல்கிறார் என்கிறார் அவரின் வழிக்காட்டி. இப்படித்தான் இந்தியா என்னும் நம்நாடு இது வரையில் இருந்து வந்தது.

ஆனால் இன்றோ, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் அரசு வேலையில் அமர்த்தப்பட்டு இருக்கிறோம் என்கிற நினைவு துளி கூட இல்லாமல், மக்கள் அடிமைகள், நாம்தான் மன்னர்கள், என்ற நினைப்பில் தான் வாழ்ந்து வருகின்றனர் இன்றைய அதிகாரிகள். இத்தகைய மன்னர் உணர்வு கொண்டதால் தான், கரூரை சேர்ந்த ஒருவர், ஆழ்துளைக் கிணறு குறித்து போனில் புகார் அளிக்க முயற்சித்தபோது போனை வைடா ராஸ்கல் என்று சொல்ல முடிந்தது அந்த சம்பந்தப்பட்ட அதிகாரியால். ஆனால் துளி அளவும் வெட்கம் இல்லாமல், அதில் பேசியிருப்பது தன் குரல் அல்ல என்று கூசாமல் அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்திருந்தாலும், தாலுகா அலுவலகம் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை மஞ்சள் பையை துாக்கி கொண்டு வேட்டி, சட்டையில் சென்றால் என்ன மரியாதை கிடைக்கும் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே.

ஆனால் இந்நிலை தொடராமல், இனி அதிகாரிகள் மாற வேண்டும் என்ற நிலையை தெலுங்கானா சம்பவம் ஒன்று எடுத்துக் காட்டி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர்மேட் பகுதி தாலுகா அலுவலகத்தில், பணியில் இருந்த தாசில்தார் விஜயா ரெட்டியை காண வந்த அதே மாவட்டம் கோரெல்லி கிராமத்தை சேர்ந்த வாலிபர் சுரேஷ், தனக்கு சொந்தமான நிலத்தை வேறு ஒருவர் பெயரில் பட்டா வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். சிறிதாக தொடங்கிய இந்த வாக்குவாதம், ஓர் கட்டத்தில் வாய் தகராறாக மாறியது. இதனால், ஆத்திரம் அடைந்த சுரேஷ், தாசில்தார் விஜயா ரெட்டியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு, அருகில் இருந்த காவல்நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். இதில் தாசில்தார் விஜயாரெட்டி மற்றும் அவரின் டிரைவர் குருநாதம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதிலிருந்து, புகார் அளித்திருந்த சுரேஷ் மனு மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. அதற்கு லஞ்சம் ஓர் காரணமாகவோ, அல்லது சுரேஷ் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காரணமாகவோ இருக்கலாம்.

இதுவரையில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் தான் அரசு அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள். ஆனால், முதல் முறையாக ஓர் அதிகாரி, அலுவலகத்தினுள் தீவைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்களும் ஒரு நேரத்தில் கோபம் கொள்வார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைத்து அதிகாரிகளுக்குமான ஓர் எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது. எனவே, பொது மக்களின் கஷ்டங்களை உணர்ந்து, அரசு அதிகாரிகளும், அதற்கு ஏற்ப தங்களின் பணி முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

காவல்துறை, கட்டுப்பாடு என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். கடந்த காலங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் போலீசாகவும், டிகிரி படித்தவர் எஸ்பியாகவும் இருந்தார். தற்போது டிகிரி மட்டும் படித்தவர் போலீஸ், டிகிரியுடன் குருப் 1 அல்லது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் எஸ்பி. போலீசுக்கும், எஸ்பிக்கும் ஒரு தேர்வு தான் வித்தியாசம் என்ற நிலையில் கடந்த காலத்தை போலவே இந்த காலத்திலும் உயர் அதிகாரிகள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள்.

அதிலும் சிலர் தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை அடிமைகள் போலவே நடத்துகிறார்கள். இப்படி உயர் அதிகாரிகளே அவர்களை அவமானப்படுதுவதால் ஊரில் யாரும் அவர்களை மதிப்பதில்லை. அதிலும் வக்கீல்கள் என்றால் கேட்கவே வேண்டாம். வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு 15வயது சிறுவன் டூவீலரில் சென்றால் கூட போலீஸ் எதுவும் கேட்க கூடாது. அப்படி கேட்டால் கோர்ட் பணிகள் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் போராட்டம், போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்கள் என்று அந்த பகுதியே போர்க்களமாகும். இதன் முடிவு, சம்பந்தப்பட்ட போலீஸோ அல்லது போலீஸ் அதிகாரியோ இடம் மாற்றப்படுவார். இதற்கு, கோவையில் செல்வராஜ் கொலை, சென்னை ஐகோர்ட்டில் தடியடி ஆகிய 2 சம்பவங்கள் விதி விலக்கு.

இந்நிலையில், போலீசாரின் உரிமை பற்றி பேசி வேலை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இதற்கு ஓர் தீர்வு கிடைக்காத நிலையில், டெல்லி போலீஸ் இதற்கான தீர்வை பெறும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ், வக்கீல் இடையே ஓர் மோதல். இதன் எதிரொலியாக பெண் போலீஸ் அதிகாரி நடுத் தெருவில் மானபங்கப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவரது பாதுகாவலரும் தாக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், வக்கீல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, போலீஸ் அதிகாரிகளை தான் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் நீதிபதி .

இதனால் வெகுண்டு எழுந்த போலீசாரும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் 11 மணி நேரம் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள். இதன் விளைவு மத்திய உள்துறை தலையிட்டு கோர்ட் உத்தரவு குறித்து விளக்கம் கேட்டு இருக்கிறது.

இந்த சம்பவம் சுமுகமாக முடிவு பெற வேண்டுமெனில், நீதித்துறையும், பார் கவுன்சிலும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும், அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். அதை விடுத்து நம்ம ஊர் பஞ்சாயத்து போல இருவரையும் சமாதானம் மட்டும் செய்தால் அது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய புண்ணுக்கு புணுகு பூசும் கதையாக தான் முடியும்.

தெலுங்கானா, டில்லி சம்பவங்கள் காலம் மாறிவிட்டது என்பதை உணர்த்துகிறது. அதற்கு ஏற்ப அரசும், அதிகாரிகளும், மக்களும் மாற வேண்டும் என்பது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP