ஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா??

ஸ்ரீராமன் மட்டுமல்ல, ஐயப்பனும் நம்பிக்கை தான் என்பதை உச்சநீதிமன்றம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
 | 

ஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா??

மன்னர்கள் ஆட்சி காலத்தில் சன்யாசிகள் தான் குருமார்களாக இருந்தனர். அவர்களின் அறிவுரைப்படிதான் ஆட்சி நடத்தப்பட்டது. மன்னர் எவ்வழியோ அவ்வழியே மக்களும் நடந்தனர். இதனால் குருமார்கள் மன்னரை தங்கள் மார்க்கத்திற்கு திருப்ப முயற்சி செய்து கொண்டே இருந்தனர். இதற்காக ஒவ்வொரு அரசவையிலும் சதஸ் நடக்கும். அதில் பல நாட்டு குருமார்கள் தங்கள் அறிவைக் கொண்டு தாங்களின் நியாயத்தை நிலை நிறுத்துவார்கள். அதை சதஸ் நடக்கும் நாட்டின் குருமார்கள் ஏற்றுக் கொண்டால் அந்த நாடு முழுவதும் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும்.

இதைத் தவிர ஆடி மாத பெளர்ணமி தொடங்கி கார்த்திகை மாதம் பெளர்ணமி வரையிலான காலகட்டம் சதுர்மாஸம் என்று அழைக்கப்படும். இந்த காலகட்டத்தில் சன்யாசிகள் ஒரே இடத்தில் தங்கி விரதம் அனுஷ்டிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பலவிதமான சம்பிரதாயங்கள் குறித்து விவாதங்கள் நடந்து அதில் ஒரு முடிவு எட்டப்படும். அனைவரும் ஏற்றுக் கொண்ட இந்த விஷயங்கள் இந்த காலகட்டங்கள் முடிந்த பின்னர் தங்கள் பகுதிகளுக்கு சென்று அவற்றை மன்னர், மக்களிடம் பரப்புவார்கள். இப்படித்தான் மத நம்பிக்கைகள் ஒவ்வொரு இடத்திற்கும் பரவியது.

சனாதன தர்மம் இப்படி பட்ட வழிமுறையை கொண்டது தான். கிறிஸ்தவம், இஸ்லாம் போன்றவை அதற்கு என்று தன்னகத்தே பலவிதமான ஏற்பாடுகளை கொண்டது. இவை அனைத்தும் காலத்திற்கு ஏற்ப மாறுபாடுகளை கொண்டது. அதனை அந்த மத குருமார்கள் தான் ஏற்பார்கள்.  இதனை உணர்ந்து கொள்ள ஒவ்வொரு மதம் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டால் தான் முடியும்.

ஆனால் இந்த காலத்தில் எல்லாவற்றிக்கும் தீர்வு காணும் சர்வரோக நிவாரணியாக நீதிமன்றம் விளங்குகிறது. இதனால் தான் மதம் தொடர்பான சர்ச்சைகள் கூட இங்கே கேள்வி எழுப்படுகிறது. அவற்றில் சமீபத்தில் எழுந்த கேள்வி அயோத்தி ராமர் கோயில் சர்ச்சையும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாமா என்ற சர்ச்சையும்.

அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் மசூதி இருந்தது. அது 1992 டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் தற்காலிக ராமர் கோயில் எழுப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இது இந்து, முஸ்லீம்கள் இடையே உரிமை போராட்டத்தை உருவாக்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த இடத்தை 3 பிரிவாக பிரித்து 3 பேருக்கு வழக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை அவர்கள் ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை சாதாரண சிவில் வழக்கு போலவே உச்ச நீதிமன்றம் கையாண்டு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் ராமர் அந்த இடத்தில் தான் பிறந்தார் என்பது கோடான கோடி இந்துக்களின் நம்பிக்கை அதில் தலையிட இந்த கோர்ட் விரும்பவில்லை என்று குறிப்பிட்டது. இந்த தீர்ப்பை, வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஏக மனதாக வெளியிட்டனர்.

ஆனால் அதே உச்ச நீதிமன்றம், ஓரிரு நாள் இடைவெளியில் இந்துக்களின் மற்றொரு நம்பிக்கை குறித்த வழக்கில் தலையிட்டு அதற்கு எதிரான தீர்ப்பை அளித்தது வியப்பை ஏற்படுத்துகிறது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாமா என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம்; செல்லக்கூடாது என்பது அவர்கள் நம்பிக்கை அதில் தலையிட விரும்ப வில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தன் முந்தைய தீர்ப்பை விலக்கி இருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதனை 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றம் செய்ததும், சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்ததும் வியப்பை ஏற்படுத்துகிறது.

ராமர் அதே இடத்தில் தான் பிறந்தார் என்பதற்கும், சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல கூடாது என்பதற்கும் இடையே உச்சநீதிமன்றம் என்ன வேறுபாட்டை உணர்ந்தது.

இந்து கோயில்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. பெருமாள் கோயில்கள் அனைத்தும் ஒன்று என்றாலும் அதன் வழிபாட்டு முறைகளில் வேற்றுமைகள் உள்ளன. திருப்பதி, ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில்கள் இடையே வழிபாட்டு முறையில் வேற்றுமை உண்டு. அதே போலதான் சிதம்பரம் நடராஜர் கோயிலும். இதில் சர்ச்சை எழுந்தால் ஆன்மீக பெரியவர்கள் தான் தீர்க்க வேண்டுமே தவிர்த்து நீதிமன்றம் தலையிடுவது நல்லது அல்ல. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சிறுமிகள், மற்றும் முதுமை அடைந்தவர்கள் செல்லலாம் என்பது அந்த கோயிலின் விதி. ஆனால் அந்த இறைவனின் நகல்களாக இருக்கும் மற்ற ஊர் ஐயப்பன் கோயில்களில் இது போன்ற விதி இல்லை. இதை சம்பந்தப்பட்ட கோயில் சிறப்பு விதியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, மற்ற கோயில்களை உதாரணம் காட்டி அந்த கோயிலிலும் இதையே கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும்.

மேலும் இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அவர்களுக்காக இத்தகைய தீர்ப்பை அளிப்பது வேலையற்ற வேலை.

ஆனாலும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கியகுழுவிற்கு மாற்றி இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பக்தர்களின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர்த்து, விஷமிகளின் செயலுக்கு துணை போய் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடாது. அரசுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பக்தர்களே எடுத்துக்காட்டு. அவர்கள் சபரிமலை விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் இடதுசாரி அரசை கடுமையாக எதிர்த்தார்கள். அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளையே பக்தர்கள் வெற்றி பெற வைத்தனர். இதைப் போலவே அரசும்  சபரிமலை பிரச்னையை கையாள வேண்டும். ராமனும், ஐயப்பனும் நம்பிக்கை தான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டதை வெளிப்படு்த்த வேண்டிய கால கட்டம் இது .

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP