கஷ்டத்திலும் நண்பர்களை அறிய முடியாது அரசியலில்!!

இது வரையில் தேசிய பிரச்னைகளில் கவனம் செலுத்தி மத்தியில் அரசை அமைத்து விட்ட பாஜக, இனி உள்ளூர் பிரச்னைகளில் தங்கள் கவனத்தை திருப்ப வேண்டும்.
 | 

கஷ்டத்திலும் நண்பர்களை அறிய முடியாது அரசியலில்!!

அரசியல் கட்சிகளின் ஒரே லட்சியம் ஆட்சியை பிடிப்பது. அதின் மூலம் தான் அவர்களின் கொள்கைகளை அமல்படுத்த முடியும். ஆனால் மக்களது நம்பிக்கையை பெற்று ஆட்சியை பிடிப்பதுடன் சரி, மற்றவர்களுக்கு அதை பங்கு கொடுக்க முன்வருவதில்லை.  அவ்வாறு செய்வது காலை கட்டிக் கொண்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு சமம். அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கும் கட்சிகள் பெரிய கட்சியை தூக்கி சுமந்து ஆட்சியில் அமர்த்திவிட்டு வேடிக்கை பார்ப்பது அரசியல் கட்சிகள் அனுபவிக்கும் அதிக பட்ச கொடுமை.

இந்த கொடுமையை சரி செய்ய தங்களுக்கு சங்கடங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று, தேவையே இல்லாவிட்டாலும் கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் இடம் கொடுத்தது பாஜக. இந்த காரணத்தினாலேயே மாநிலக் கட்சிகள் பலவும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டன. இதில் சமீபத்தில் தேர்தல் நடக்க இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலம் முக்கியமானது.

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் களத்தில் இருக்கும் சிபுசோரன் தொடங்கி பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், கடந்த ஆட்சியில் ஆல் ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் அந்த மாநில ஆட்சியிலேயே பங்கு வகித்த கட்சி. அதே போல நிதிஷ்குமாரும் பாஜகவுடன் நெருக்கமாகத்தான் இருக்கிறார்.

இவற்றில் பல கட்சிகள் பாஜக கூட்டணி இருந்ததால் தான் ஆட்சி அதிகாரத்தை சுவைக்க முடிந்தது. இதில் நிதிஷ்குமார் மட்டும் விதி விலக்கு. இன்றைக்கும் கூட ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சராகத்தான் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தங்கள் வெற்றியில் பாஜகவின் பங்கை மறந்த கட்சிகள் தனித்தனியே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. எனினும், இந்த சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிகக் குறைவு.

தற்போது ஹரியானா, மஹாராஷ்டிராவிலும் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டசபைத் தேர்தல்களில் மோடி, அமித் ஷா தாக்கம் இல்லை; உள்ளூர் பிரச்னைகள் தான் முன் நிற்கின்றன என்ற தவறான கணக்கிற்கு கூட்டணி கட்சிகள் வந்து விட்டன.

மஹாராஷ்டிராவை பொருத்தளவில் இதர கட்சிகளை விட பாஜக பெற்ற வெற்றி சதவீதம் அதிகம். அங்கு சிவசேனா தேர்தலுக்கு பின்னர் முரண்டு பிடித்ததால் தான் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை நன்கு உணர்ந்ததால் தான் தற்போது பாஜக தனித்துப் போட்டியிட கூட தயாராக இருக்கிறது. இதனால் தான் முதல்வர் வேட்பாளர் ரகுபர் தாஸ் என்று அறிவித்து இருக்கிறது.

ஆட்சியை விட கட்சி முக்கியம், கட்சியை விட நாடு முக்கியம் என்ற நிலையில் தான் பாஜக தேர்தலை சந்திக்கிறது. இதே உணர்வு பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கும் வர வேண்டும். அதைத் தான் அந்த மாநில மக்களும் விரும்புகிறார்கள். அதை விடுத்து தேர்தலில் கூட்டணி அமைத்து தங்களுக்கு சாதகமாக பாஜகவை வளைத்தால் அது முறிவைத்தான் ஏற்படுத்தும். அவ்வாறு முறிவது நாட்டுக்கு நல்லது அல்ல.

அதே நேரத்தில் வாக்காளர்களும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணினால் எல்லா தொகுதிகளிலும் அந்த கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும். கட்டாயம் பெரும்பான்மை பெற்றால் மட்டும் தான் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆட்சி அமையும்.

நமது தொகுதியில் பாஜக வெற்றி பெறாது, ஆனால் ஆட்சியை அந்த கட்சிதான் பிடிக்கும் என்று தமிழக வாக்காளர்கள் நிலைப்பாட்டை ஜார்க்கண்ட் மாநில மக்களும் கடைபிடித்தால், அது மற்றொரு மஹாராஷ்டிராவாகத்தான் அமையும். இது யாருக்கு நல்லதோ இல்லையோ, மக்களுக்கு நிச்சயம் கெடுதலாகத்தான் இருக்கும்.

ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் சிவசேனா போல தங்களது குணத்தை காட்டாமல், அதற்கு முன்பாகவே தங்களது நிலைப்பாட்டை ஜார்க்கண்ட் மாநில கூட்டணிக் கட்சிகள் வெளிப்படுத்தியிருப்பது நல்லது. கஷ்டத்தில் தான் நண்பர்களை அறிய முடியும் என்பதைப் போல தங்கள் குணத்தை காட்டி விட்ட கூட்டணி கட்சிகளை பாஜக நன்கு அறிந்து அதற்கு ஏற்ப தங்களின் நிலைப்பாட்டை மாற்றி கொண்டு முன்வர வேண்டும்.

இது வரையில் தேசிய பிரச்னைகளில் கவனம் செலுத்தி மத்தியில் அரசை அமைத்து விட்ட பாஜக, இனி உள்ளூர் பிரச்னைகளில் தங்கள் கவனத்தை திருப்ப வேண்டும். அப்போதுதான் தேசம் வல்லரசாக உருவாவது வேகம் எடுக்கும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP