பொறுப்பு அதிகம் வைகோ சார்!

வைகோ இவ்வளவு கத்தினாலும், பிரச்னை தீராதற்கு காரணம், அவர் எந்த பொறுப்பிலும் இல்லாதது என்றுதான் இவ்வளவு நாட்கள் மக்கள் நினைத்தார்கள். இப்போது அவர் ராஜ்யசபாவில் பேசி தீர்வு காண வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
 | 

பொறுப்பு அதிகம் வைகோ சார்!

அன்புள்ள தந்தை மகனுக்கு வேலை வாங்கித் தந்து விட்டு, வீட்டில் வந்து, தன் காலில் விழுந்தவன் காலில் எல்லாம் விழுந்து வேலை வாங்க வேண்டியதாயிற்று என புலம்புவார். 

எம்பியாக வைகோ தேர்வு பெற்றதற்கும், அவர் பதவி ஏற்றதற்கும் இடையே அஞ்சலி செலுத்திய தலைவர்கள் பட்டியல், பார்த்து வாழ்த்து பெற்ற தலைவர்கள் பட்டியலைப் பார்த்தால், அந்த அன்புள்ள தந்தையின் மனநிலையில் தான் வைகோ இருந்தது தெரியவந்தது.

யாராவது பணம் கொடுத்தால் வேண்டாம் என்று மறுக்க கூடாதாம். அப்படி கூறுபவருக்கு மீண்டும் பணம் கிடைக்காது என்பார்கள். அதே போல தான், பதவி தனக்கு வேண்டாம் என்று தொண்டர்களுக்கு விட்டுக் கொடுத்த காரணத்தால் தற்போது வரை பதவிக்கு அலையோ அலை என்று அலைந்து தான், பதவியை பிடிக்க வேண்டியிருந்தது. அதிலும் சுப்பிரமணியசாமி கடைசி நேரத்தில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார்.

அதைக் கேட்டதும், திருமண விருந்தில் சாப்பிட கை வைக்கும் போது, தம்பி அந்த இடத்துக்கு போங்க என்று மணமக்கள் பெற்றோர் கூறியது போல இருந்தது.

ஆனால், வைகோவின் நேரம் நன்றாக இருந்ததால் அத்தனை தடைகளையும் தாண்டி ராஜ்யசபாவில் நுழைந்துள்ளார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு பதவிக்கு வந்த வைகோவிற்கு மற்றவர்களை விட கூடுதல் பொறுப்பு உள்ளது.

காவிரி முல்லைப் பெரியாறு போன்றவை தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகள். இதற்கு தீர்வு காண மற்றவர்களை விட அதிகம் போராடியவர் வைகோ. இது போன்ற பிரச்னைகளில் அவர் மக்கள் கருத்தை தான் உருவாக்க முடிந்தது. நடைப் பயணங்கள் நடத்தி, பிரச்னை தீராவிட்டாலும் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கத்தான் முடிந்தது.

வைகோ இவ்வளவு கத்தினாலும், பிரச்னை தீராதற்கு காரணம், அவர் எந்த பொறுப்பிலும் இல்லாதது என்றுதான் இவ்வளவு நாட்கள் மக்கள் நினைத்தார்கள். இப்போது அவர் ராஜ்யசபாவில் பேசி தீர்வு காண வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

வைகோ ராஜ்யசபா எம்பியாக தேர்வு பெற்றதும் அளித்த முதல் பேட்டியில், நான் சுயேட்சை பட்டியலில் தான் வருவேன். அதனால் அவ்வளவாக பேச முடியாது என்று பாதுகாப்பு வளையத்தை சுற்றிக் கொண்டார்.

ஆனால் கட்சியோ, சுயேட்சையோ கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தினால் அனைத்தும் நடக்கும் என்பதற்கு திருச்சி சிவா சாட்சி. அவர் தனி நபர் மசோதா கொண்டு வந்து, ஒரு சில விஷயங்களில் தீர்வு ஏற்படுத்தினார்.

இதை வைகோவும் செய்ய வேண்டும். அதை விடுத்து, எந்தவிதமாக பலனும், யார்க்கும் பலன் கிடைக்காத விஷயங்களில் அடுக்கு மொழி பேசுவது, ராஜ்யசபாவின் குறிப்பேடுகளை வேண்டுமானால் நிரப்பலாம். தமிழக மக்கள், ராஜ்யசபாவிற்கு, போயும் போயும் இவரை தேர்வு செய்தார்களே என்று எண்ண தொடங்கிவிடுவார்கள்.

இந்த முறை மதிமுக அவரை தாங்கிப் பிடித்து, ராஜ்சபாவிற்கு அனுப்பவில்லை. அப்படி செய்திருந்தால் யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஆனால், மாப்பிள்ளை இவர்தான் சட்டை மட்டும் என்னுடையது என்பது போல, திமுக தயவில் பதவியை பெற்றுள்ளார். இதனால், தானே முயன்று அதனை கெடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்னும் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வீதியில் வந்து போராட வேண்டாத சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பு, வைகோவிற்கு உள்ளது. அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசிம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP