நீதி தேவதை கண் விழிக்க வேண்டிய நேரம் இது!

எது எப்படியோ கடந்த சில ஆண்டுகளாக நீதித்துறையின் மீது களங்கம் படியத் தொடங்கி விட்டது. அதை துடைப்பதற்கு சரியான ஒரு அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கான காலம் தற்போது வந்து விட்டது. ஓட்டு பற்றி கவலைப்படாமல், அனைத்து விமர்சனங்களையும் மீறி பல விஷயங்களை அமல்படுத்தும் மோடி அரசு, நீதித்துறையின் களங்கத்தை துடைக்கவும், ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த நாட்டை விரும்பும் அனைவரின் விருப்பம்.
 | 

நீதி தேவதை கண் விழிக்க வேண்டிய நேரம் இது!

இந்தியாவில் கடவுளே என்று அழைக்கப்படுவர்கள் நீதிபதிகள் மட்டும் தான். நீதி தேவதை எந்த பக்கமும் சாயாமல் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக, அதன் கண்களை கட்டி வைத்து இருக்கிறார்கள். அதன் கண்கள் கட்டப்பட்ட காரணத்தால் நீதித்துறையை கருமேகங்கள் சூழ்வது கூட, நீதி தேவதையின் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அவர் இந்த அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எல்லாம் மேலானவர். அவரை கண்காணிக்க எவ்விதமான அமைப்புகளும் இல்லை. பாராளுமன்றம் அதை செய்ய முடியும் என்றாலும் நடைமுறையில் அவ்வாறு செய்வதில்லை. இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிதான் சுப்ரீம் என்ற நிலை.

இதற்கு காரணம், நீதிபதிகள் அவர்களை அவர்களே நியமனம் செய்து கொள்வது தான்.1950ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை மத்திய அரசுடன் கலந்து பேசிதான் உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக, இந்த முறைக்கு பதிலாக, 1990ம் ஆண்டு கொலெஜியம் எனப்படும் நீதிபதிகள் உயர்மட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. 

அன்றில் இருந்து இன்று வரை, இந்த முறை தான் தொடர்கிறது. ஆனாலும் இதில் சிக்கல் எழத்தான் செய்கிறது. இதற்கு மேலான அமைப்பை ஏற்படுத்த சுமார், 12 ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தது. 2004ம் ஆண்டில் சட்டத்துறை அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி, இது தொடர்பாக ஒரு மசோதா கொண்டு வந்தார்.அதற்கு நிதித்துறையில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. 

பின்னர் சட்ட அமைச்சராக இருந்த கபில் சிபில் நீதிபதி நியமன ஆணையம் அமல்படுத்த முயனறார். அதையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். அதனால் இன்றளவும் ஜொலேஜியம் முறையே தொடர்கிறது.

2014ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்குதல் கொடுத்து, சென்னை ஐகோர்ட் நீதிபதியாக  ஒருவரை நியமனம் செய்ததாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமுக வலைதளத்தில் குற்றம் சாட்டினார். அதற்கு கருணாநிதி பதில் கொடுத்ததுடன், விவகாரம் முடிந்தது. அதன் பின்னர் எவ்விதமான விவாதமோ, அதற்குரிய நடவடிக்கையோ இல்லை.

இதன் பின்னர் பதவியில் இருந்த போதே நீதிபதி கர்ணன் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினார்.அவர் பேசிய விதம் தவறாக இருந்தால் கூட, அவர் கூறிய விஷயங்களில் சில உண்மை இருந்தது. ஆனால் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற அளவிற்கு இழிவுபடுத்தி, 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதே தவிர்த்து, அவர் கூறிய எவ்விதமான பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லை.

கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தனக்கு வேண்டியவர்களுக்கு வழக்குகளை ஒதுக்குவதாக மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகாய், குரியன்ஜோசப், மதன்பி லோகூர் ஆகியோர் சட்டத்துறை வரலாற்றில் முதன் முறையாக நிருபர்களை சந்தித்து குற்றச்சாட்டு வைத்தனர். 

அது வரையில் இரும்புத்திரைக்குள் இருந்த நீதித்துறை பிரச்னைகள் வெளிப்படையாக தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதற்கு பதிலாக இவர்கள் அளித்த பேட்டியே விவாதமானது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைமைநீதிபதி மீதே பாலியல் குற்றச்சாட்டு கூட எழுந்தது.

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் முன்ஜாமின் மனு வெறும் அரை மணி நேரத்தில் விசாரித்து முடிவு சொல்லாம். ஆனால் அதற்கு நாள் கணக்கில் விசாரணை, அதுவரையில் அவரை கைது செய்ய உத்தரவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு போடுகிறது. இது போன்ற ஆச்சரியமான விஷயம் நீதிபதியின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குகிறது.

கடைசியாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல் ரமானி, தன்னை மேகலயா மாநிலத்திற்கு மாற்றியதை எதிர்த்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் தீர்ப்புகள் குறித்து சர்ச்சை எதுவும் எழவில்லை. அவரின் நேர்மை பற்றிய கேள்விகளும் இல்லாத போது, மிகச்சிறிய மாநிலத்திற்கு தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பிவிட்டு இருக்கிறது. 

கொலிஜியத்தின் முடிவுக்கு எதிராக ஒரு தலைமை நீதிபதி ராஜினாமா செய்து இருப்பது, அதன் நடவடிக்கையை யார் கேள்வி எழுப்புவது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் மீது யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்பதால்தான், ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்லாம் என்றும் பாரம்பரியத்திற்கு மாறாக தீர்ப்பு வழங்க இயலுகிறது.

எது எப்படியோ கடந்த சில ஆண்டுகளாக நீதித்துறையின் மீது களங்கம் படியத் தொடங்கி விட்டது. அதை துடைப்பதற்கு சரியான ஒரு அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கான காலம் தற்போது வந்து விட்டது. ஓட்டு பற்றி கவலைப்படாமல், அனைத்து விமர்சனங்களையும் மீறி பல விஷயங்களை அமல்படுத்தும் மோடி அரசு, நீதித்துறையின் களங்கத்தை துடைக்கவும், ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த நாட்டை விரும்பும் அனைவரின் விருப்பம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP