மதவாதிகள் விழிக்க வேண்டிய நேரம் இது!

இங்கு தலாக் முறையை மட்டும் ஏற்றுக்கொள்கிறோம். இஸ்லாத்தில் இல்லாத வரதட்சணை முறையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மகர் தொகையை மட்டும், சம்பரதாயமாக மாற்றிவிட்டனர். கூட்டங்களில் வரதட்சணை வாங்குபவர் இஸ்லாமியரே இல்லை என்று பேசும் மார்க்க அறிஞர்கள், தனிப்பட்ட முறையில் அவற்றை எதிர்ப்பதாக தெரியவில்லை.
 | 

மதவாதிகள் விழிக்க வேண்டிய நேரம் இது!

மக்களை நெறிப்படுத்தி, அமைதியான வாழ்க்கை உருவாக்க மதங்கள் தோன்றின. அவை தோன்றிய  இடங்களுக்கு ஏற்ப அவற்றின் விதிமுறைகள் இருந்தன. வேகமான மனோபாவம் கொண்ட மேற்கத்தியர்களை, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று அமைதிப்படுத்துகிறது பைபிள். சாந்தமான இந்தியர்களை, சோம்பி போய் கடமையை கைவிட்டு விடாதே, எழும்பி போரை நடத்து என்று பகவத்கீதை உபதேசம் செய்கிறது. இதே போல தான் ஜாதிக்கு ஒரு நீதியும்.

பிராணன் உடல் வலியை பெறுவதை தடுக்கும் அதே சாஸ்திரங்கள் தான், சத்திரியன் தன் உடல் நலன் குன்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதை எதிர்க்கிறது.

இப்படி ஒவ்வொரு மதங்களும், தனக்கு என்று பல விதிகளை வைத்துள்ளது. அந்த மதங்கள் வேறு இடங்களுக்கு பரவும் போது, அங்கு நடைமுறையில் உள்ள விஷயங்களை ஏற்றுக் கொண்டு, அந்த மண்ணின் மதமாக மாறிவிடுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வேளாங்கன்னி மாதாவிற்கு மாலை அணிந்து செல்வது, இஸ்லாம் பல தார மணங்களை ஆதரித்தால் கூட, பெரும்பாலனவர்கள் அவற்றை பின்பற்றாமல், ஒரு மனைவியுடன் வாழ்வது போன்றவற்றை கூறலாம். 

வெளிநாடுகளில், கிறிஸ்தவத்தில் இருந்து இந்துவாக மாறியவர்கள் புலால் மறுத்து, புணுால் அணிந்து கொண்டு குடுமி வைத்துக் கொண்டு, பகவத்கீதை உபதேசம் செய்வதையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

இது போன்ற மத விஷங்களை, கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்ப, மாற்றங்கள் செய்வதற்கு மதவாதிகள் தான் முன்வர வேண்டும். அவர்கள், இதைப் பற்றி சிந்திக்காமல், தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காக அவர்கள் முடங்கிவிடுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான், அரசு களம் இறங்க வேண்டி இருக்கிறது.

இந்துமதத்தில் பால்ய விவாகம், விதவை மறுமணம், பெண்களுக்கு சொத்து உரிமையில் தடை போன்றவை இருந்தன. இவற்றில் பால்ய விவாகம், உடன் கட்டை ஏறுதல் போன்றவற்றை தடுக்க சட்டம் இயற்றுவதற்கு, கடும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. அதை மீறித்தான் சட்டம் இயற்றப்பட்டது.

இது போல தான் ராஜீவ் ஆட்சியின் போது, ஷாபானு வழக்கு வெளியான போதே, மதவாதிகள் ஒன்று கூடி விவாகரத்து வழக்கு குறித்து விவாதித்து, அந்த விவகாரத்திற்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். அதற்கு பதிலாக, ராஜீவிற்கு நெருக்கடி கொடுத்து ஷாபானுவின் வாயை அடைக்கும் வகையில் சட்டம் இயற்றினார்கள்.

இஸ்லாமிய நாடுகளில் தலாக் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, சம்பந்தப்பட்ட கணவன் மனைவிக்கு, கொடுக்கும் மகர் தொகையில் பாதி, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சென்று விடும். அவர்கள் பிரிந்தால் சம்பந்தப்பட்ட குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அரசே ஏற்கும். அந்த குழந்தைக்கு உரிமை இருப்பதால் எவ்விதமான பிரச்னையும் இல்லாமல், அந்த குழந்தை வளரும். அந்த பெண் மற்றொருவரை திருமணம் செய்வதில் எவ்விதமான தடையும் இல்லை.

இங்கு தலாக் முறையை மட்டும் ஏற்றுக்கொள்கிறோம். இஸ்லாத்தில் இல்லாத வரதட்சணை முறையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மகர் தொகையை மட்டும், சம்பரதாயமாக மாற்றிவிட்டனர். கூட்டங்களில் வரதட்சணை வாங்குபவர் இஸ்லாமியரே இல்லை என்று பேசும் மார்க்க அறிஞர்கள், தனிப்பட்ட முறையில் அவற்றை எதிர்ப்பதாக தெரியவில்லை. 

ஜமாத் முடிவை ஏற்காவிட்டால் அவர்கள் குடும்பத்தை தள்ளி வைக்கும் அவர்கள், வரதட்சணை வாங்கினால் ஜமாத் திருமணத்தை ஏற்காது என்று கூறுவதற்கு தயாராக இல்லை. மேலும் தலாக் முறையை ஏற்கும் இந்திய இஸ்லாம், அந்த இணைக்கு பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பற்றி வெளிப்படையான ஏற்பாடுகள் எதையும் செய்வில்லை.

இப்படி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இது போன்ற மவுனம் காத்ததால் தான், இன்று மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை இயற்றி இருக்கிறது. மத்திய அரசு, மத அடிப்படையிலான விஷயத்தில் தலையிட காரணமாக இருந்தது அவர்களின் மதவெறியோ, இஸ்லாத்தின் எதிர்ப்போ இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இது வரையில் மவுனமாக இருந்தது தான் காரணம்.

அவர்கள் தான், இஸ்லாமிய சமுகத்திற்குள் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து அதற்கு ஏற்ப சட்டங்களை இயற்ற வேண்டும். அத்தோடு மட்டும் அல்லாமல், அதை மீறுபவர்களை கட்டுப்படுத்தவும் வழி கண்டறிய வேண்டும்.

ஒரு பெண்ணை, ஒரு முறை பார்க்கலாம், மறு முறை அவரை பார்க்க கூடாது, அப்படி பார்க்க துாண்டுவது தான் காமம் என்று குரான் கூறுகிறது. ஆனால், புர்கா அணியாத பெண்கள், ஜீன்ஸ் போடும் பெண்கள், டிவி, சினிமாக்களில் தோன்றும் பெண்கள் என்று அனைவரையும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏற்கிறார்கள். 

அதாவது இது தவறா இல்லையா என்று முடிவு செய்து, அதை நடைமுறைப்படுத்த அவர்கள் தயாராக இல்லை. கடந்த காலங்களில், வீட்டில் உள்ளேயே முடங்கி விட்ட பெண்கள், இன்று சுய காலில் நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் என்று யாரும் சிந்திப்பது இல்லை.

இங்கு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பது நமது மத ரீதியான சறுக்கல்களையும், அது எவ்விதமான கூச்சமும் இல்லாமல் ஏற்கும் வரைதான். இஸ்லாமியன், இஸ்லாமியனாக இருக்க வேண்டும் என்று சொல்லும் தாலிபான் அமைப்பினர், இங்கு வந்தால் அதை முதலில் எதிர்ப்பவர், இஸ்லாமியராக தான் இருப்பார்கள். 

இவர்களுக்கு  தாலிபான்களையும் பிடிக்காது, மோடியையும் பிடிக்காது. பரிகாரம் இருக்கிறது என்ற நம்பிக்கையிலேயே, பலர் ஜோதிடத்தை நம்புவதைப் போலதான், மக்கள் மதங்ளை நம்புவதும். இது வரையில் அசைக்க முடியாததாக இருந்த இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டத்திலேயே, மத்திய அரசு கை வைத்துவிட்டது. இனி ஒவ்வொரு மார்க்கத்திலும் உள்ள உளுத்துப் போன சட்டங்களுக்கு, மத்திய அரசு ஆப்பு வைக்க தொடங்கிவிடும். அதற்கு முன்பாக, மதவாதிகள் விழித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP