காங்கிரஸ் தலைவர் பதவி பற்றி வலம் வருவது வம்பா, வதந்தியா?

இந்தியாவின் இணைப்பு சங்கிலியான காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் தற்போது கட்டாயம் தேவை. அவரால் தான் வீழ்ச்சிப் பாதையில் இருந்து கட்சியை மீட்க முடியும். அதை விடுத்து, பிரியங்கா அந்த இடத்தில் அமர்ந்தால், பாஜக தமிழகத்தை தவிர்த்து நாடு முழுவதும் அடுத்த தேர்தலில் ஆட்சி செய்யும் என்பது நிச்சயம்.
 | 

காங்கிரஸ் தலைவர் பதவி பற்றி வலம் வருவது வம்பா, வதந்தியா?

லோக்சபா தேர்தல் முடிவுகளால், அதிகபட்சமாக பாதிக்கப்பட்டவர் ராகுல் தான். பிரதமர் நரேந்திர மோடியை விட, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுலை பழிவாங்கியது தான் அதிகம். இந்த அரசியலில் வெறுத்துப் போன ராகுல், இது நமக்கு ஒத்துவராது என்று தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஒதுங்கிவிட்டார். 

அவரின் ராஜினாமா, தேர்தல் தோல்விக்கு மட்டும் காரணம் அல்ல. 1991–96 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்கள், கால்நடைத் தீவன ஊழல், 2 ஜி ஊழல் வழக்கில் பிரதமருக்கு தெரிந்துதான் நடந்தது என்று அறிக்கை விட்டது போன்ற பல நடவடிக்கையும், ராகுல் ராஜினாமாவிற்கு மறைமுக காரணம். 

சீட்டுக்கே இந்த வம்பு கட்டும் தலைவர்கள், ஏதாவது ஊழல் செய்து விட்டு அதை தன் தலையில் கட்டினால் எப்படி தப்பிப்பது என்ற அச்சம் கூட ராகுலை தலைவர் பதவியில் இருந்து நீக்கச் செய்தது. ராகுலை பொருத்தளவில் பேன்ட் போட்ட சசிகலா தான். ஜெயலிதாவிற்கு பின்னால் இருந்து இயக்கும் போது சசிகலா எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர்  அவர் முதல்வராக முயற்சி செய்து தோல்வியில் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தார். அதன் பின்னர் நடந்ததை அனைவரும் அறிவார்கள். 

ராகுலுக்கும் இதே நிலைதான். அவர் சிவகங்கையில் விரும்பிய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. இந்த விவகாரம் தமிழகத்தில் நன்கு தெரிந்தது என்பதால் குறிப்பிடப்படுகிறது. நாளை இது போல பெரிய தலைவர்கள் எதையாவது செய்து விட்டு ராகுலை மாட்டிவிடும் என்பதால் உஷாராக அவர் தப்பி விட்டார். 

நேரு குடும்பத்தில் சோனியாவிற்கு உடல் நிலை சரியில்லை, பிரியங்காவிற்கு அவர் கணவரால் தொல்லை. தற்போது அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கணவரை இறக்கிவிட்டுத் தான் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார். மேனகா, வருண் பாஜகவில் உள்ளனர். இதனால் தான் தியாகி போல, ராகுல் நேரு குடும்பத்தை சேராத யாராவது ஒருவர் என்று தலைவர் பதவிக்கு ஆலோசனை வழங்கிவிட்டார். 

ராகுல் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பிரியங்கா ஏற்கவில்லை என்பது சமீபத்தில் அவர் வெளியிட்ட டுவிட் மூலம் தெரியவந்தது. அவர் நெல்சன் மண்டேலா தன்னை அரசியலில் பிரகாசமான இடத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் யார் என்று யோசிக்கும் வேளையில், மற்றவர்கள் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று பிரியங்கா இது போல செய்து இருக்கலாம் என்று அரசியல் விமர்சர்கள் கூறலாம். 

ஆனால், நெல்சன் மண்டேலா பிறந்த நாளில் அவருடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டத்தான் அவர் டுவிட் செய்திருந்தார். அதை தலைவர் பதவியுடன் சிண்டு முடிவது பைத்தியகாரத்தனம் என்று காங்கிரஸ் பிரமுகர்கள் மறுக்கிறார்கள். அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் நல்லது. 

அதற்கு பதிலாக, அரசியல் பார்வையாளர்கள் கூறுவதைப் போல பிரியங்கா காங்கிரஸ் கட்சி தலைவராக உருவெடுத்தால் அது அந்த கட்சியை அழிவு பாதையில் தான் கொண்டு செல்லும். அதற்கு காரணம் அவர் அல்ல, ராபட் வதேரா தான். தற்போதே அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. எதிகாலத்தில் இது போல என்ன என்ன குற்றச்சாட்டு எழுமோ தெரியவில்லை. 

இந்திராவிற்கும், பெரோஸ் காந்திக்கும்  இடையே ஏற்பட்ட காதல் திருமணம், நேருவின் அரசியல் வாழக்கையை பாதித்ததுடன், இந்திராவிற்கும், பெரோஸ் காந்திக்கும் இடையே கூட சிக்கல்களை ஏற்படுத்தியது.  இந்திரா போல இப்போது இந்த விஷயத்தில் பிரியங்கா இருக்கிறார். 

இந்தியாவின் இணைப்பு சங்கிலியான காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் தற்போது கட்டாயம் தேவை. அவரால் தான் வீழ்ச்சிப் பாதையில் இருந்து கட்சியை மீட்க முடியும். அதை விடுத்து, பிரியங்கா அந்த இடத்தில் அமர்ந்தால், பாஜக தமிழகத்தை தவிர்த்து நாடு முழுவதும் அடுத்த தேர்தலில் ஆட்சி செய்யும் என்பது நிச்சயம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP