கோ பேக் மோடி... கோ பேக்..!

கோ பேக், கோ பேக் என்று கூச்சல் இடுவதும், அவ்வாறு கூச்சல் இடுபவர்களை எதிர்க்காமல் மவுனம் காப்பதும் தமிழகத்திற்கு நல்லது அல்ல. தமிழகம் மாறாவிட்டால் மத்திய அரசு திட்டங்களையும் எடுத்துக் கொண்டு கோ பேக் மோடி கே பேக்.
 | 

கோ பேக் மோடி... கோ பேக்..!

காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி செய்த வரை வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் இருக்கிறதா என்ற நிலையில் இருந்தது. அந்த காலகட்டங்களில் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அந்த மாநில மாணவர்களை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அழைத்து வந்து இங்கு உள்ளவர்களின் கலாச்சாரத்தை புரிய செய்யும் நிகழ்ச்சியை ஆண்டு தோறும் நடத்தும். 

அப்படி பட்ட மாநிலங்களுக்கு தற்போதுள்ள மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தியது. அதன் காரணமாக கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் ஆளும் கட்சியாக, எதிர்கட்சியாக, பிரதிநிதிகள் உள்ள கட்சியாக உருவெடுத்துள்ளது.

கோ பேக் மோடி... கோ பேக்..!

அதை விட கூடுதலாக தமிழகத்திற்கு மத்திய அரசின் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகம் முத்ரா லோன் வழங்கப்பட்ட மாநிலம் தமிழகம். கடந்த 3 ஆண்டுகளில் 70 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ன. 12 ஆயிரம் கிராமங்கள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதவைகளாக மாற்றபட்டுள்ளன. 72 லட்சம் குடும்பங்கள் இலவச காஸ் இணைப்பு பெற்றனர். 4.3 லட்சம் குடும்பங்கள் சொந்த வீடு கட்டி உள்ளனர். கடந்த 3 மாதங்களில் 5 லட்சம் பேர் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு பலன் அடைந்துள்ளனர். 

இவற்றில் உள்ளூர் அரசியல்வாதிகளை தவிர்த்து யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலன திட்டத் தொகை நேரடியாக பயனாளிகள் வங்கி கணக்கிற்கே வந்து சேர்ந்துள்ளது. இவ்வளவும் நம்ம மாநிலத்தில் தான் நடந்துள்ளது. நம்ம வீட்டில், உறவினர்கள் வீட்டில், தெருவில் ஊரில் என்று பயனாளிகள் நேரில் சென்று விசாரிக்கும் நிலையில் தான் உள்ளனர். 

சாதாரண குடிமக்களுக்கு தெரியும் இந்த விஷயங்கள் தமிழகத்தில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் சமூக வலைதளங்களில் வாழும் அரசியல்வாதிகள் கண்ணுக்கு தெரியாது. தமிழன் நன்றாக தூங்க வேண்டும், அவன் தொடையில் தேர்வடமே திரித்தால் கூட தெரியக் கூடாது என்பது தான் நம்ம ஊர் அரசியல் வாதிகள் வேலை. 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜ ஆட்சிக்கு வந்ததும் எந்த எந்த திட்டங்கள் தமிழகத்திற்கு எதிராக தொடங்கப்பட்டது என்று அறிந்து அதற்கு எதிராக போராட்டம் நடத்தினால் நல்லது. அதை விடுத்து பத்து பேர் கூட்டமாக நின்றால், அங்கு சென்று கோ பேக் மோடி என்று கத்தினால் அவர் அரசியல் நிலைப்பாடு எந்த அளவிற்கு கேவலமாக மாறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. ஸ்டாலினுக்கு எதிராக வளர்ந்து விடுவார் என்று கொலைப் பழி சுமத்தி வெளியேற்றப்பட்ட வைகோ இன்று ஸ்டாலினை முதல்வராக மாற்றாமல் விட மாட்டேன், மதவாதத்தை தடுக்க அவரால் மட்டுமே முடியும் என்கிறார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறிய ரத்த ஆற்றில் நின்று கொண்டு காங்கிரஸ் கட்சியையும், திமுகவையும் திட்டி தீர்த்த வைகோ, இன்று சோனியாவிற்கு கோ பேக் சோனியா என்று கூறுவதில்லை. அவ்வாறு கூறினால் மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் 5 சீட்டு ( அவ்வளவு கொடுப்பாங்க என்று நம்புவோம்) கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம். பத்திரிக்கையாளர் முத்துக்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கண்ணீர் கடிதத்தில் குறிப்பிட்ட வரிகளை எப்படி மறந்தார் வைகோ. 

சில காலம் முன்பு காவிரி நீர் பிரச்னைக்காக குடிநீர் அருந்தாத போராட்டம் நடந்தது. அதில் பங்கு பெற்ற வைகோ ஒரு டம்பளர் குடிநீர் அருந்திவிட்டார். அதன் பின்னர் தான் அவருக்கு என்ன போராட்டம் என்றே தெரியவந்தது. மனிதன் பதறிவிட்டார், பதறி. இப்படிப்பட்ட அறிவுடன் தான் அவர் போராட்டங்களில் கலந்து கொள்கிறார். இப்படிப்பட்ட தலைவர் தான் மோடிக்கு எதிராக கோ பேக் மோடி என்று கூச்சல் இடுகிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு தந்த திட்டங்கள் அனைத்தையும் மறந்து விட்டு இவ்வாறு கூச்சல் இடுகிறார். அவர் தமிழகத்திற்கு தீமை தரும் திட்டங்கள் என்று கருதுவது எல்லாமே இவர் கூட்டணிவைத்துள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் தொடங்கப்பட்டவை. அவர்களிடம் இது குறித்து வற்புறுத்தலாமே. சோனியாவை கோபப் பார்வை யாவது பார்க்கலாமே. அதை விடுத்து மோடிக்கு கோபேக் சொல்வது அவரின் நிலைப்பாட்டின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இதே போலதான் புதிதாக தமிழ் தேசியம் பேசும் புரட்சி வீரர்களும் (காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசியம் தான் தீர்வு என்று நம்பிக் கொண்டு அதற்காக தன்னால் முடியும் வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற நெடுமாறனை இந்த கும்பலில் இருந்து விலக்க வேண்டும் என்பதால் தான் இப்படி கூற வேண்டிய நிலை) அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது இவ்வளவு நாள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இப்போது தமிழ் தேசியத்திற்காக காட்டு கத்து கத்துகிறார்கள். அண்ணன் சீமான் ஒருபடி மேலே சென்று தேர்தலில் தனித்து போட்டி என்றார் (யாரு பாஸ் சேர்த்துக் கொள்வார்கள் என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது). இவர்களால் தமிழகத்திற்கு இம்மி அளவிற்காவது நன்மை கிடைத்துள்ளதா என்றால் அது பெரும் கேள்விக் குறி. 

ஆனால் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி தமிழகத்தை மேம்படுத்த நினைக்கும் மத்திய அரசு ஒழிய வேண்டும். இவர்கள் பாஜகவிற்கு எதிராக மட்டும் அல்ல காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும்  தான் கோஷம் எழுப்புவார்கள். அப்போது தமிழனை யார் மதிக்காவிட்டாலும் எதிர்ப்போம் என்பார்கள். இவர்களை நம்பிய தமிழன் தான் நடுத்தெருவில் நிற்பான். தேர்தல் முறைகள் மார்க்கம் என்பவர்கள் புரட்சி புரட்சி என்று கூச்சல் இடுவார்களே தவிர்த்து அதை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டார்கள். அவர்கள் நோக்கம் எல்லாம் குறிப்பிட்ட தலைவருக்கு ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ சீட் அவ்வளவு தான். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் குழப்பம் ஏற்படுத்த யாரோ கொடுத்த பணத்திற்கு புரோக்கர் வேலை செய்கிறார்கள். இல்லை இல்லை அவர்கள் தமிழர்களுக்காக போராடுகிறார்கள் நீங்கள் பாஜ கைக்கூலி அதனால் இப்படி சொல்கிறீர்கள் என்கிறீர்களா, உண்மையில் தமிழர்களுக்காக காமராஜர், முத்துராமலிங்க தேவர், கக்கன், இரட்டை மலை சீனிவாசன், இம்மானுவேல் சேகரன் பாடுபட்டிருந்தாலும் மிகப் பிரபலமாக இருந்த பெரியாரையே பார்ப்போம். 

அவர் இயக்கத்திற்கு நிதி சேர்க்க வேண்டும் என்று அசைந்தால் கூட காசு வாங்கி விடுவார். புகைப்படம் எடுக்க, திருமணத்தில் கலந்து கொள்ள என்று மளிகை கடைபோல ஒவ்வொன்றிக்கும் ஒரு தொகை நிர்ணயம் செய்து வசூல் பார்ப்பார். திக பொதுக் கூட்டங்களில் தொண்டர்கள் துண்டு ஏந்தி வசூல் செய்து பெரியாரிடம் கொடுப்பார்கள். அதே நேரத்தில் பொதுப்பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றால் போர்வையில் வட்டிய கஞ்சத்தனம் இருக்கும். பெரியாருடன் இருந்த காரணத்தால் தொடக்க கால திமுகவில் கூட கலைஞரும் இதே போல வசூல் பார்த்துதான் திமுகவிற்கு அஸ்திவாரம் இட்டார். இது போன்றவர்கள் தான் தமிழர்களுக்கு ,தமிழகத்திற்கு நன்மை கிடைக்க செய்யும் தலைவர்கள். தமிழ் தேசியத்திற்காக புது அவசாரம் எடுத்தவர்களின் வரவு செலவு அனைத்துமே மர்மமாகவே இருக்கிறது. 

இப்படிப்பட்டவர்களா நம் மாநிலத்தை காப்பாற்ற போகிறார்கள்..?

மத்திய அரசின் திட்டங்களை அறிந்து கொண்டவர்கள் இது போன்றவர்கள் கோ பேக் மோடி என்று கூச்சல் இடும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மத்தியில் ஆள்பவருக்கு வரும். அவர்கள் மோடியை தானே எதிர்க்கிறார்கள், நாம் காங்கிரஸ் கட்சிகாரன் என்று நினைத்து மவுனம் காப்போம் என்றால், நாளை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் அவ்வளவு செய்த மோடியையே இவர்கள் மதிக்க வில்லை நாம் என்ன செய்து எண்ண ஆகப் போகிறது என்று நினைத்தால் அம்போதான். விபி சிங் பிரதமராக வரும் வரையில் தமிழகத்தி்ல கேபினட் அமைச்சர் பதவியை நினைத்து பார்க்க கூட முடியவில்லை என்பது வரலாறு.

தமிழகத்திற்கு மோடியை விட அதிகம் நலத்திட்டங்களை ஒருவர் கொண்டு வருவார் என்றால் அவருக்கு தேர்தலில் ஒட்டு போடுவதுடன் நம் கடமை முடிந்தது. அதை விடுத்து அரைவேக்காடு தனமாக தற்போது சாலை ஓரங்களின் நின்று கோ பேக், கோ பேக் என்று கூச்சல் இடுவதும், அவ்வாறு கூச்சல் இடுபவர்களை எதிர்க்காமல் மவுனம் காப்பதும் தமிழகத்திற்கு நல்லது அல்ல. ஆனால் வரும் காலங்களில் கூட தமிழகம் மாறாவிட்டால் மத்திய அரசு திட்டங்களையும் எடுத்துக் கொண்டு கோ பேக் மோடி கே பேக். செய்நன்றி கொன்ற மகற்கு அது நல்ல தண்டனையாக இருக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP