தீவிரவாத ஆதரவு அல்ல மதப்பற்று!

அப்பாவி மக்களை அழிப்பதன் மூலம், ஒரு மதத்தையோ, அதை பின்பற்றுபவர்களையோ காப்பாற்றிவிட முடியும் என்பது பைத்திய காரத்தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள் ஏதாவது அசம்பாவிதங்களை நடத்தி, அதன் விளைவுகளால் மதங்கள் இடையே மோதலைத்தான் உருவாக்க முடியுமே தவிர்த்து ஒற்றுமை ஏற்படுத்தாது.
 | 

தீவிரவாத ஆதரவு அல்ல மதப்பற்று!

இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களை விட, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதே நேரத்தில், ஏனைய நாடுகளில் அவர்கள் படும் துன்பத்தை ஒப்பிட்டால், இங்கு அவர்களின் வாழ்க்கை மிக மிக அமைதியாகவே இருக்கிறது. 

சில அமைப்புகள் மட்டுமே சிறுபான்மையினர் இங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதாவும், ஒடுக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் வாழ்க்கை முறையை பற்றி, இங்கு முழுமையாக பேசப்பட்டிருந்தால்,நம்மவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 

அது பற்றி இஸ்லாமிய, கிறிஸ்தவர்களும் பேசவில்லை. சமயசார்பற்றவர்களாக இருப்பவர்களும் பேசவில்லை. இதன் காரணமாக, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என்ற மாயையில் இஸ்லாமியர்கள் சிக்கி கொள்கின்றனர்.

இதனால், இஸ்லாமிய இயக்கங்கள் பின்னால் அவர்கள் தஞ்சம் அடைகிறார்கள். இவர்களை கேடயமாக வைத்து, அந்த இயக்கங்கள் தீவிரவாத நடவடிக்கையை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விதைக்கிறார்கள். இது, தொழில் நகரமான கோவை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் அதிகமாக இருக்கிறது.

29–11–1997ம் ஆண்டில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, போக்குரவத்து காவலர் செல்வராஜ் கொலை செய்யப்படுகிறார். இதன் எதிரொலியாக, கோவையின் சில பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, ஆயுதங்களை குவியல் குவியலாக கைப்பற்றுகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட அந்த பகுதிகளில், இவ்வளவு ஆயுதங்கள் பதுக்கப்பட்டது வெளி உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அந்த ஆயுதங்கள் உள்ளே வருவதற்கு காவல்துறையின் வாகனத் தணிக்கையில் இருந்த முறைகேடு, அரசியல்வாதிகளின் ஆதரவு ஆகியவை தான் முழுமையான காரணம் என்றாலும் கூட, அந்த பகுதியினர் இது பற்றி மூச்சு கூட விடவில்லை என்பது தான் அதிர்ச்சி தரத்தக்க தகவல். உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற சம்பவம் நடக்கவே வாய்ப்பு இல்லை. 

அதன் பின்னர் கூட இது போன்றவர்கள் ஆதரவு குறையவில்லை. அதனால் தான், 2 ஆண்டுகள் கழித்து கோவைக்கு அத்வானி வந்த போது தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த முடிந்தது.

இப்படி தமிழகத்தில் பயங்கரவாதிகள் கொடூர தாண்டவம் அதிகம் நடந்தாலும், இஸ்லாமியர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க வைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. திமுக கூட இஸ்லாமிய மக்களை ஆதரிப்பதை விட அதன் அமைப்புகளை ஆதரிக்கும் வேலையை தான் அதிகம் செய்தது. விளைவு இன்றும் கூட இஸ்லாமியர்கள் தாமரை இலை தண்டாகத்தான் வாழ்கிறார்கள்.

இதனால் தான் தமிழகம் அமைதிப் பூங்கா போல காட்சியளித்தாலும், உள்ளே கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. வடமாநில வாலிபர்கள் இங்கு வேலை தேடி வந்து குவிந்த நிலையில், தமிழகத்தின் அமைதி எப்போது குலையுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. தமிழகத்தில் வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் அனைவருமே, பொதுவான பார்வையில் வடமாநிலத்தவர் தான். 

ஆனால் இவர்களில் எத்தனை பேர், பங்காளாதேஷ் நாட்டில் இருந்து உள்ளே வந்தவர்கள் என்று யாருக்கும் தெரியாது. காவல்துறையில் கூட, இதுபற்றிய கணக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

இந்த சூழ்நிலையில், அபாயத்தை வெளிக்காட்டும் வகையில் கடந்த, 10ம் தேதி சென்னையில் ஷேக் அசதுல்லா என்ற பயங்கரவாதியை  போலீசார் கைது செய்தனர். அதுவும் கூட தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்த பின்னர் தான் இந்த கைது நடந்துள்ளது. 

2013ம் ஆண்டில் பீகாரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்த பயங்கரவாதி, கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்தவன் என்பதை அறியும் போது, தமிழ்நாடு எவ்வளவு திறந்த வீடாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

இவர்கள் போன்றவர்கள், வெளியே தெரியாமல் வாழ உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் முடியாது. இது போன்ற சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காட்ட, அவர்கள் முன்வராததற்கு அடிப்படையில் மதம் தான் காரணமாக உள்ளது. ஆனால், இது போன்ற பயங்கரவாதிகள் ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபடும் போது, அதில் இறப்பது அனைத்து மதத்தையும் சேர்ந்தவர்கள் தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

அப்பாவி மக்களை அழிப்பதன் மூலம், ஒரு மதத்தையோ, அதை பின்பற்றுபவர்களையோ காப்பாற்றிவிட முடியும் என்பது பைத்திய காரத்தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள் ஏதாவது அசம்பாவிதங்களை நடத்தி, அதன் விளைவுகளால் மதங்கள் இடையே மோதலைத்தான் உருவாக்க முடியுமே தவிர்த்து ஒற்றுமை ஏற்படுத்தாது.

இதனால் சந்தேப்படும் நபர்களை, காவல்துறை வசம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க, எல்லா மதத்தினரும் முன்வரவேண்டும். அப்போதுதான் இந்துகள், இஸ்லாமியர்கள் ஓற்றுமையாக வாழ்கிறோம் என்பது உண்மையாகும். இந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது மத குருக்கள் உட்பட அனைவரின் கடமை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP