யார் நாடாள வேண்டும்... யார் காடு செல்ல வேண்டும்..?

யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் அது உங்களின் சுய முடிவாக இருக்கட்டும். அது தான் அனைவருக்கும் நல்லது. நாளை ஒரு நாள் தான் இருக்கிறது. நாம் வாழ்வதும், வீழ்வதும் என்ன முடிவு எடுத்துவிட்டீர்கள் தானே.
 | 

யார் நாடாள வேண்டும்... யார் காடு செல்ல வேண்டும்..?

சிறுவன் ராமன் கூனியின் முதுகில் அடித்து விளையாடுவான். அரசன் மகனை பழிவாங்க முடியாத கூனி வெகுநாள் காத்திருந்து வாய்ப்பு கிடைத்த போது கைகேயிடம் உன் மகன் நாடாள வேண்டும் ராமன் காடு செல்ல வேண்டும் என்று வரம் கேள் என்று ஆலோசனை கூறி; 14 ஆண்டுகள் ராமனை வனவாசம் செய்ய சொல்லுவாள். ராமன் மீது பாசம் கொண்டிருந்தாலும் தன் மகன் பதவிக்கு வர வேண்டும்,  கூனியின் துர்ஆலோசனை காரணமாக கைகேயி அதே வரத்தை பெறுவாள். விளைவு பாதிக்கப்பட்டவர்கள் அயோத்தி மக்கள். 

அதேபோல இப்போது ராமனை மோடியாகவும், பரதனாக ராகுலையும், கைகேயியாக வாக்காளர்களையும், கூனியாக ஜிஎஸ்டியால் தங்கள் கள்ள வியாபாரத்தை இழந்தவர்கள், பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் கோடி கோடியாக பணம் இழந்த பேர்வழிகளையும், வீட்டில் இருந்த பல சிலிண்டர் இணைப்புகளை இழந்தவர்களையும் ஒப்பிடலாம். 

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சிதான். பிறந்த குழந்தையான இந்தியாவை வளர்த்து ஆளாக்கிய கட்சி அதுதான். இன்றைக்கு நாடு இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்தற்கு காங்கிரஸ் கட்சியின் பங்குதான் அதிகம். இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தாலும், நாடு போதுமான வளர்ச்சியடையவில்லை. இதற்கும் அக்கட்சிதான் காரணம். 

பாஜ அரசு நிறைவேற்றிய பல திட்டங்கள் தொடங்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான் என்றாலும் அதை அமல்படுத்துவதில் உள்ள பயமே நம்மை கட்டிப் போட்டது. 

பில்லு போட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலையே காங்கிரஸ் கட்சியில் இல்லை. இதனால் கள்ள மார்க்கெட் விற்பனை கொடி கட்டி பறந்தது. நமக்கும் கூட விலை இவ்வளவு, வரி இவ்வளவு என்று பிரித்து சொல்லாததால் விலை குறைவாக பொருள் கிடைக்கிறதா, அல்லது பொருளின் விலையே இது தானா என்ற குழப்பம் உள்ளது. 

பணம் இருந்தால் போதும் ஒரே வீட்டில் 4 காஸ் இணைப்புகள் வாங்கி கொள்ள முடியும்; இன்னொரு புறம் புகை அடுப்பில் உயிரைக் கொடுக்கும் பெண்கள். காங்கிரஸ் அரசில் இந்த வேறுபாட்டை களைய திட்டம் இல்லை. ஒரு காலகட்டத்தில் எம்பிகள் பரிந்துரைத்தால் தான் காஸ் இணைப்பு கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது காங்கிரஸ் கட்சிதான் என்றாலும் கூட அதில் நடைபெறும் ஊழலுக்கு கடிவாளம் இட அவர்களால் முடியவில்லை. 

பண மதிப்பு இழப்பிலும் இதே நிலைதான். பொதுமக்களிடம் அதிகபட்டசம் 40 ஆயிரம் வரை வேண்டுமானால் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம். அதை செல்லாது என்று அறிவித்தால் கூட வங்கியில் செலுத்தி திரும்ப பெற வாய்ப்பு கிடைத்தது. அதனால் சில நாட்கள் சிரமப்பட்டாலும் கூட அதன் பிறகு பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால் கோடி கோடியாக சேர்த்து வைத்தவர்கள் பொறியில் சிக்கிய எலியாக மாறினர். இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்தால் கூட அரசு எப்போது வேண்டுமானாலும் ரூபாய் நோட்டுக்களை செல்லாது  என அறிவிப்பு வெளியிடலாம் என்ற பயம் அனாமத்தாக பணம் சேர்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தியதே வெற்றி தான். 

வரி செலுத்துவது என்ற வழக்கம் பெரும்பான்மையான மக்களுக்கு கிடையாது. ரேஷன் கார்டில் ஏழையாகவும், பெண் பார்க்கும் இடத்தில் பணக்காரராகவும் வாழ்க்கை நடத்துவது இந்த நாட்டில் தான் முடியும். இதில் பாவப்பட்ட ஜென்மங்கள் அரசு ஊழியர்கள் தான். அவருக்கு சம்பளம் அதிகம் என்று அலறுபவர்கள், வேறு வழியில்லாமல் நேர்மையாக வரி கட்டுவதை பற்றி விமர்சனம் செய்வதில்லை. நாட்டின் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அரசு நேரடியாக வரிசெலுத்துவோர் தலைகளில் கை .வைக்க வேண்டி இருக்கிறது. வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதற்கு மாற்று ஏற்பாடு. அதைதான் மத்திய அரசு செய்து இருக்கிறது. 

ஆதார், பான்கார்டு போன்றவை நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். உதாரணமாக கேஸ் இணைப்பையே எடுத்துக் கொள்வோம். சிலிண்டர் விலை 400 ரூபாய் என்று விற்பனை செய்தால் நாடு ஒன்றும் நாசமாகப் போகப் போவது இல்லை .அதாவது 2 இணைப்புகள் (சிலிண்டர்கள் அல்ல) கொண்ட வீட்டில் 1600 ரூபாய் இருந்தால் போதும் 4 சிலிண்டர்கள் வாங்கி விடலாம். தற்போது சுமார் 3800 ரூபாய் வேண்டும். தேவையில்லா முதலீடு, அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் வேறு வழியியே இல்லாமல் 2வது இணைப்பை ஒப்படைத்தனர். அதற்கும் அசராதவர்கள் மானியத்தொகை வங்கி கணக்கில் செலுத்துவதால் ஒரு இணைப்பை மட்டும் வைத்துக் கொண்டனர். 

ரேஷன் கடைகளில் எப்போது சென்றாலும் பொருட்கள் இருக்காது, ஆனால் மூட்டை மூட்டையாக சர்க்கரை, அரிசி மட்டும் விற்பனையாகும். எவன் கணக்கில் இவை திருடப்படுகிறது என்று எவனுக்கும் தெரியாது. தற்போது ஆதார், ஸ்மார்ட் கார்டு என்று பல திட்டங்கள் அரங்கேறிவிட்டதால், உடனே எஸ்எம்எஸ் வருகிறது. 

பொதுவாக மக்கள் நல்வாழ்விற்காகத்தான் அரசு வரிபணத்தை செலவு செய்கிறது. நடைமுறையில் உள்ள சிக்கல்களால் 20 ரூபாய் நல்வாழ்வுக்கு செலவு செய்ய 80 ரூபாய் வெட்டி செலவாகிறது. இதை தடை செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதைத் தான் தற்போதுள்ள மத்திய அரசு செய்துள்ளது. 

இதை விட சிறப்பாக காங்கிரஸ் செயல்படும் என்றால் அந்த கட்சிக்கு ஓட்டு போடலாம். ஆனால் சிவகங்கை வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட சறுக்கல், ராகுல்தான் பிரதமர் என்று அறிவிக்க தைரியம் இல்லாது, மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு பதிலாக தாஜா செய்து அவர்களை ஏமாற்றுவது போன்ற பல விஷயங்களினால் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இழக்கிறது. வேறு வழியில்லாவிட்டால் அந்த கட்சிக்கு ஓட்டுப் போடலாம். ஆனால் கடந்த 5 ஆண்டுகள் மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்கும் போது காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. 

இதைப்படிக்கும் வாசகர்கள் இதை விட பல காரண, காரியங்கள் அடிப்படையில் 2 கட்சிகளுமே திருடன்கள் தான்.காமராஜர் கூறியது போல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று நினைக்கலாம். நிரூபிக்கலாம் அவர்கள் மாற்று அரசியல் செய்ய வேண்டும் என்று களம் இறங்கி இருக்கும் சீமான், கமல் போன்றவர்களுக்கு ஓட்டுப் போடலாம். இவர்களுக்கு போடும் ஓட்டு நாட்டிற்கு பலன் கொடுக்கிறதோ இல்லையோ, புதிய முயற்சியில் களம் இறங்கி இருக்கும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். தொடர்ந்து அதே பாதையில் நடைபோட செய்யும். 

இவை எல்லாவற்றையும் விட வாங்கிய காசுக்கு நேர்மையாக இருப்போம் என்று ஓட்டு போட்டீர்கள் என்றால் அது உங்களுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஆனால் நாட்டிற்கு கேடு விளைவிக்கும். அப்போது அது உங்களுக்கே கேடாக முடியலாம். 

அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், ஊடகங்களின் பிரச்சாரம் போன்ற நவீன கூனிகள் உங்கள் முடிவை திசை திருப்பலாம். அதன் பேச்சை கேட்டு நீங்கள் முடிவு எடுத்தால் ராமனை இழந்த அயோத்தி போல தான் நாடும் சிறப்பை இழக்க முடியும். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் அது உங்களின் சுய முடிவாக இருக்கட்டும். அது தான் அனைவருக்கும் நல்லது. நாளை ஒரு நாள் தான் இருக்கிறது. நாம் வாழ்வதும், வீழ்வதும் என்ன முடிவு எடுத்துவிட்டீர்கள் தானே. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP