முதல் முறையாக ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது: பிரதமர் மோடி

ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும்கட்சிக்கு எதிரான அலை தான் வீசும்; ஆனால் முதல்முறையாக நாட்டில் ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று பிரதமர் மோடி வாரணாசியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
 | 

முதல் முறையாக ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது: பிரதமர் மோடி பேச்சு!

"ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும்கட்சிக்கு எதிரான அலை தான் வீசும்; ஆனால் முதல்முறையாக, நாட்டில், ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது என" பிரதமர் நரேந்திர மோடி, பேசினார். 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, 3 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 29, மே 6, 12, 19 ஆகிய தேதிகளில், எஞ்சிய 4 கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 

இதில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு, மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, வாரணாசியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பா.ஜ., தொண்டர்களின் உற்சாக முழக்கத்துடன், திறந்தவெளி ஜீப்பில், பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்றார்.

முதல் முறையாக ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது: பிரதமர் மோடி பேச்சு!

தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது : 

►  நாம் இந்த தேர்தலில் யாருடனும் சண்டையிடப்போவதில்லை. இந்த தேர்தலை, கங்கைத் தாய் பார்த்துக்கொள்வார். வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு செல்லும் போது விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல், வாக்குச்சாவடியில் இருக்கும் பா.ஜ.க., முகவர்களும், விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்தால் கூட, அந்த தேர்தல் வெற்றி எனக்கு திருப்தியளிக்காது.

►  நமக்கு, தேசத்தின் பாதுகாப்பு தான் முக்கியம். பயங்கரவாதத்தை இந்த தேசம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்திற்கு உரிய பதிலடி கொடுக்க தேவையான வலிமையை, எனக்கு இந்த தேசம் தந்துள்ளதாக கருதுகிறேன். 

►  நாட்டில் தற்போதைய சூழலில், நமது ஆட்சிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும், ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துகள் தான் பேசப்படும். ஆனால், இந்த முறை, மோடியின் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. இதனால், சில அரசியல் பண்டிதர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர்.

முதல் முறையாக ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது: பிரதமர் மோடி பேச்சு!

►  இந்தியாவில், முதல் முறை வாக்களிக்கும் நபர்களின் பட்டியலை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை வாக்களிக்க ஊக்கப்படுத்துங்கள். வாக்களிப்பதன் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். அதே நேரத்தில், அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாம் கூறக்கூடாது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். வாக்களிக்கும் விவகாரத்தில், யாருடைய தனிப்பட்ட விருப்பத்திலும் தலையிடுவது சரியாகாது. 

►  மோடியை யாரேனும் ஏமாற்றினாலோ அல்லது மோடிக்கு யாரும் மோசடி செய்தாலோ அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். நான் வெற்றி பெறுகிறேனா, இல்லையா என்பது இங்கு பிரச்னை இல்லை. இந்த ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும்; அது தான் முக்கியம். 

►  முன்னதாக நாட்டில் பலரின் ஆட்சிகள் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில், நமது ஆட்சி எவ்வாறு நடைபெற்றது என்பது மக்களுக்கு தெரியும். நான் ஒரு பிரதமர். என்னால் எவரையும் பார்க்க முடியாது என்று நான் ஒரு போதும் கூறியதில்லை. ஒரு தனிப்பட்ட சிறிய தொழிலாளியைக் கூட சந்தித்து பேசியுள்ளேன். ஒரு தொழிலாளி, என்னால் மடியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு பிரதமராக, எனக்கான பணிகள் என்னவென்று எனக்கு தெரியும். அதே நேரத்தில், ஒரு எம்.பி.,க்கான பணிகள் என்னவென்று தெரியும். இரண்டையும் நான் சிறப்பாக செய்துள்ளதாகவே கருதுகிறேன். 

முதல் முறையாக ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது: பிரதமர் மோடி பேச்சு!

►  காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை, திருவிழா போல் உள்ளது. நமது கட்சித் தொண்டர்களின் உழைப்பு, என்னை வியக்க வைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு நான் உழைத்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளும் மக்களுக்கு சேவை செய்ய ஆர்வமுடன் இருக்கிறேன். 

இவ்வாறு வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 

இந்த கூட்டத்தில், பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட, பா.ஜ.க., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

அதே போல், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான, ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர் வேலுமணி, பி.வேணுகோபால் எம்.பி., உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP