"அலிபாபாவும், 4 திருடர்களும்’’ - காங்கிரஸ் அமைச்சர் சொன்ன புதிய கதை

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினரை விமர்சிக்கும் வகையில், அலிபாபாவும், நான்கு திருடர்களும் என்ற கதையை பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார்.
 | 

"அலிபாபாவும், 4 திருடர்களும்’’ - காங்கிரஸ் அமைச்சர் சொன்ன புதிய கதை

அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அலிபாபாவும்,4 திருடர்களும் என்ற புதிய கதையை சொல்லியிருக்கிறார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து. தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், முதல்வர் சந்திரசேகர் ராவின் குடும்பத்தினரை விமர்சிக்கும் வகையில் இவ்வாறு பேசினார்.

தெலுங்கானாவில், டி.ஆர்.எஸ். கட்சி ஆளும்கட்சியாக உள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் தவிர்த்து, அவரது மகன் ராம ராவ் அமைச்சராகவும், மகள் கவிதா எம்.பி.யாகவும் உள்ளனர். மேலும் இரண்டு உறவினர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புகளில் இருக்கின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் நேற்று பிரசாரம் செய்த சித்து, “அலிபாபாவும், 40 திருடர்களும் என்ற கதையை நான் கேள்விபட்டிருக்கிறேன். அது பழைய கதை. இங்கு அலிபாபாவும், நான்கு திருடர்களும் இருக்கின்றனர்’’ என்று பேசினார். பின்னர் சித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, பச்சோந்தியை விடவும் மிக வேகமாக நிறம் மாறக் கூடியவர் சந்திரசேகர் ராவ் என்றும், தெலுங்கானாவை புதிய மாநிலமாக உருவாக்கினால், தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாகக் கூறிவிட்டு, சோனியா காந்தியை ஏமாற்றியவர் என்றும் குற்றம்சாட்டினார்.

”ஒரு தலித்தையே முதல்வராக்குவேன் எனக் கூறிய வாக்குறுதியையும் சந்திரசேகர் ராவ் நிறைவேற்றவில்லை. அவர் அளிக்கும் வாக்குறுதிகள் மூங்கில் போல உயரமாகவும், உறுதியாகவும் காட்சியளிக்கும். ஆனால், உள்ளுக்குள் வெறும் கூடாக இருக்கும்’’ என்றார் சித்து.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP