5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - காங்கிரஸ் கட்சியின் வியூகம் வென்றதா?

தெலுங்கானாவில் மகா கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கிறது. மிஸோரமில் ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சத்தீஸ்கரில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் வகுத்த வியூகத்தின் பலன் இவைதான்.
 | 

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - காங்கிரஸ் கட்சியின் வியூகம் வென்றதா?

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஸோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வெற்றி பெற்றிருப்பவர்கள் புதிய அரசை நிறுவுவதற்கான முயற்சிகளில் களமிறங்கியிருக்கிறார்கள். இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இதை அனைவரும் பார்க்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 2014ம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் டெல்லி, பீகார், பஞ்சாப் போன்ற ஒருசில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க.தான் வெற்றி பெற்று வந்தது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான சறுக்கல் அக்கட்சியின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்தது.

இப்படியொரு சூழலில்தான், 2015ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் புதியதொரு வியூகத்துடன் களமிறங்கினார் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி. இந்த தேர்தலின் வெற்றியே, அவரை காங்கிரஸ் தலைவராக பதவியேற்பதற்கு உந்துதலாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. பீகார் தேர்தலில் ராகுல் காந்தி செயல்படுத்திய மந்திரம்தான் என்ன?

பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கு இல்லையென்ற போதிலும், பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ராகுல் காந்தி. அந்த வகையில், அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருந்த நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸும் இணைந்து ‘மகா கூட்டணி’ அமைவதற்கான காரணகர்த்தாவாக இருந்தார் ராகுல் காந்தி. அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், நிதீஷ் குமார், பின்னர் இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து புதிய அரசை அமைத்தது வேறு கதை.

இருப்பினும், மகா கூட்டணி என்ற வியூகம், எதிரெதிர் துருவங்களில் இருப்பவர்களுடன் கை கோர்ப்பது போன்ற அரசியல் உத்திகளை ராகுல் காந்தி உறுதியுடன் நம்பத் தொடங்கினார். அதன் விளைவுதான் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து அவர்கள் கூட்டணி ஆட்சியை நடத்தி வருவதும்.

இதற்கு அடுத்தபடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும், கொள்கை மாறுபாடுகளைக் கொண்ட பல கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் மகா கூட்டணியை அமைக்கும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தேர்தல் வெற்றியை, அவர்களுடன் இணையக் காத்திருக்கும் தோழமைக் கட்சிகளும் கொண்டாடி மகிழ்கின்றன. 

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்துவதற்கான அச்சாரமாக 5 மாநில தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்பதும், மகா கூட்டணி என்ற வியூகம் வெற்றி பெறும் என்பதும் எதிர்க்கட்சிகளின் கணக்கு. ஆனால், காங்கிரஸுக்கு எத்தகைய வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை ஆராயவும், தெலுங்கானாவில் மகா கூட்டணி என்ற வியூகம் தோல்வி அடைந்திருப்பதையும் எதிர்க்கட்சிகள் வசதியாக மறந்துவிட்டன. காரணம், இந்த தேர்தல்களில் ‘மோடி அலை’ பின்னடைவு கண்டிருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள மாயத் தோற்றம் எதிர்க்கட்சிகளின் கண்களை மறைத்திருக்கிறது.

ஆனால், உண்மையில் நடந்துதான் என்ன? 5 மாநில தேர்தல் யாருக்கு வெற்றியாக அமைந்தது? திரை மறைவில் தோல்வி கண்டது யார் என்ற கேள்விகளுக்கான பதிலை ஆராய வேண்டியிருக்கிறது. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில்தான் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது. 

இந்த மூன்று மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. அரசுகளுக்கு எதிராக பொது மனநிலை நிலவும் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், சத்தீஸ்கர் தவிர்த்து, மற்ற இரு மாநிலங்களிலும் பெரும்பான்மைக்கு தேவையான வெற்றியைக் கூட காங்கிரஸ் கட்சி பெற முடியவில்லை என்பதும், இரு கட்சிகளும் சற்றேறக்குறைய சம அளவிலான வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கின்றன என்பதும் யதார்த்த உண்மையாக இருக்கிறது.

ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழுகிறது என்ற அடிப்படையில் இந்த முறை காங்கிரஸ் கட்சி, வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் 4வது முறையாகவும் வெற்றிக் கனியை தனதாக்கிக் கொள்ள முயற்சித்த பா.ஜ.க.விடம் இருந்து வெறும் 4 இடங்கள் வித்தியாசத்தில்தான் ஆட்சியை தட்டிப் பறித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. சத்தீஸ்கரிலும்கூட நடுநிலையாளர்களால் பாராட்டபடுபவரான ரமண் சிங் தலைமையிலான அரசு தோல்வியடைந்தது எப்படி? என்று அரசியல் விமர்சகர்கள் அதைத்தான் ஆச்சரியமாகப் பார்க்கிறார்களே தவிர காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிக்க மிஸோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு பெரிய அளவிலான அடித்தளம் இல்லை என்ற நிலையில், இங்கு தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. அதில் மிஸோரம் மாநிலத்தில்கூட, வழக்கமான தேர்தல் கணக்குப்படி, ஆட்சிக்கு எதிரான மனநிலை காரணமாக காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பதாக கருதிக் கொள்ளலாம்.

ஆனால், எல்லா வாய்ப்புகளும் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தன்னை நிரூபிக்கத் தவறியிருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால், ‘மகா கூட்டணி’ என்ற காங்கிரஸ் வியூகம் இங்கு படுதோல்வி கண்டிருக்கிறது. அதாவது, காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தன. தனித்துப் போட்டியிட்ட டி.ஆர்.எஸ். கட்சி பெற்ற நான்கில் ஒரு பங்கு இடங்களைக்கூட மகா கூட்டணியால் கைப்பற்ற இயலவில்லை. ஆனால், ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொன்னதைப் போல, தெலுங்கானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கமான பல்லவியை பாடுகிறது காங்கிரஸ் கட்சி.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் சமயங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கூக்குரல் எழுப்பியதுடன், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துவிட்டு வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், அதே முறைகேடு புகாரை காங்கிரஸ் இங்கு முன்வைக்காதது ஏன்? என்ற கேள்விக்கான பதில் அவ்வளவு கடினமானதல்ல. அதாவது தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக அமைந்தால் கொண்டாடுவதும், பாதகமாக அமைந்தால் முறைகேடு என புலம்புவதும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக இருக்கிறது.

ஆக, இரண்டு மாநிலங்களில் படுதோல்வி, இரண்டு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், ஏதோ பிரளயத்தை ஏற்படுத்தி விட்டதைப் போல காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையில் அமையும் மகா கூட்டணி என்ற மண் குதிரையை நம்பிக் கொண்டுள்ள கட்சிகளும் குதூகலித்து வருகின்றன. நல்ல வேடிக்கைதான்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP