மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை : சுமித்ரா மகாஜன் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது இந்தூர் மக்களவை தொகுதிக்கு பாஜக வேட்பாளரை அறிவிக்கலாம் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
 | 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை : சுமித்ரா மகாஜன் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது இந்தூர் மக்களவை தொகுதிக்கு பாஜக, தங்களது வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும், இந்தூர் தொகுதி எம்.பியுமான சுமித்ரா மகாஜனுக்கு வருகிற ஏப்ரல் 12ம் தேதியுடன் 76 வயதாகிறது. பாஜகவில் கடந்த நான்கு ஆண்டுகளாக கடைபிடித்து வரும் விதிமுறைகளின்படி, 75 வயதை தாண்டிய பாஜக மூத்த தலைவர்களுக்கு பதவிகள் அளிக்கப்படுவதில்லை. தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், தற்போது சுமித்ரா மஹாஜனுக்கும் 76 வயது பூர்த்தியாவதால், இந்தூர் தொகுதியின் வேட்பாளரை அறிவிப்பதில் பேச்சுவார்த்தை நீடித்து வந்தது. இதையடுத்து, தான் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுமித்ரா மஹாஜனே இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், இந்தூர் தொகுதியின் வேட்பாளரை தேர்தெடுக்கும் பொறுப்பை நான் கட்சியிடமே விட்டுவிடுகிறேன்; பாஜக இதில் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்; யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறியுள்ளார். 

சுமித்ரா மகாஜன் - குறிப்பு

சுமித்ரா மகாஜன், 1984-85ம் ஆண்டு முதலாவதாக இந்தூர் நகரின் துணை மேயராக பதவியேற்றார். அதன்பிறகு 1989ம் ஆண்டு 9வது மக்களவைத் தேர்தலில் இந்தூர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக லோக்சபா எம்.பி ஆனார். அதைத்தொடர்ந்து தற்போதைய லோக்சபா உறுப்பினர் பதவியையும் சேர்த்து இதுவரை 8 முறை இந்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, வேறு வேறு சந்தர்ப்பங்களில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜகவின் பொதுச்செயலர் பதவியையும் சுமித்ரா மகாஜன் வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP