ரஜினிகாந்த்துக்கு விருது: சுயம்புகள் மட்டுமே போற்றப்படும். நகல்கள் அல்ல!!!

இந்த நேரத்தில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினியை நாம் வாழ்த்துவது தான் சரியாக இருக்கும். அவர் பெருமையை எண்ணி நாமும் பெருமிதப்பட வேண்டும்
 | 

ரஜினிகாந்த்துக்கு விருது: சுயம்புகள் மட்டுமே போற்றப்படும். நகல்கள் அல்ல!!!

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உள்ளது மத்திய அரசு. ஆனால், இதைக் கொண்டாட வேண்டிய தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வேலையில் இறங்கியுள்ளனர் விஷ்வல் நக்சல்கள். அதிலும், தமிழ் சினிமாவின் இரட்டையார்களாக இருக்கும் கமல், ரஜினி இடையே தங்களால் இயன்ற அளவு கொம்பு சீவி விடுகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையின் அனைத்து பிரிவுகளையும் அறிந்தவர், எல்லா விஷயங்களையும் தெரிந்தவர், சிறந்த நடிகர் என்பதில் எல்லாம் சந்தேகம் இல்லை. தமிழர்கள் பார்த்தறியாத உலக சினிமாவை தமிழர்கள் தரத்திற்கு இணையாக மாற்றி காட்டியவர் கமல் என்று அறிவு ஜீவி ரசிகர்கள் கூறுகிறார்கள். இது உண்மையாக இருந்தாலும், ரஜினி பற்றி பேச அவ்வளவு அறிவு ஜீவித் தனம் எல்லாம் வேண்டியது இல்லை. நம்ம வீட்டு பையனை புரிந்து கொள்ள முடியாதா என்ன என்கிற வகையில் தான் ரஜினியின் நடிப்பு இருந்தது.

ரஜினி நடிப்பு என்ற உடனேயே எள்ளி நகையாடுபவர்கள் 6 இல் இருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களை நிச்சயமாக மறந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

சாதாரண ஸ்டார் ஆக இருந்தவர், சூப்பர் ஸ்டார் ஆன பின்னர் தன் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தவர்கள் காசில் சினிமாவில் பரிசோதித்து பார்க்கும் முயற்சிகள் எதிலும் அவர் இதுவரை ஈடுபடவில்லை. தனக்கு என்ன தெரியும், தன்னிடம் ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து நடிப்பதால் தான் 46 ஆண்டுகளாக ரசிகர்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்து வருகிறது.

அரசியலில் கூட அவர் இறங்காமலேயே வாய்ஸ் மட்டும் கொடுத்ததால் ஆட்சியின் முடிவே மாறிவிட்டது. நேரில் இல்லாமல், ரஜினியின் அண்ணாமலை பால்காரன் போஸ்டர் ஒன்றே போதும் என்று அதை வைத்தே வெற்றிக் கொடி நாட்டியவர் அவர். ஆனால், இன்றும் அவர் சொல்லுவதை மாற்றி மாற்றி பேசி தன் வருமானத்தை விஷ்வல் நக்சல்கள் பெருக்கி கொள்கிறார்கள்.

இன்று வரை திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான் போட்டி நிலவுகிறதே தவிர காதல் இளவரசன் யார் என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அடைய முடியாத இடத்தை அடைந்துள்ளபோதும், அடக்கத்தின் உச்சமாகவே உச்சநட்சத்திரம் இருந்து வருகிறார்.

எந்த ஒரு முன் உதாரணமும் இல்லாமல், தனக்கு என்று ஓர் தனி பாணியை உருவாக்கியதால் தான் அவர் இன்றும் ஒரு ஐகான் ஆக திகழ்கிறார். இதனால் தான் திரைத்துறையில் 40 ஆண்டுகள் சேவை செய்ததை பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக, "வாழ் நாள் சாதனையாளர்" என்ற கோவா திரைப்பட விழாவின் 50ஆம் ஆண்டு முத்திரை விருது வழங்க உள்ளனர். 

இன்னொரு ரஜினி உருவாக எத்தனை காலம் பிடிக்கும் என்பதை விட, தற்போதைய காலகட்டத்தில் மற்றொரு ரஜினிக்கு வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம். 

இதுவரையில் ரஜினி வருவாரா? மாட்டாரா என்று ஏங்கி தவித்தவர்கள் எல்லாம், தற்போது விருதின் மூலம் பாஜக அவரை வளைத்துப் போடப் பார்ப்பதாக கூச்சல் போடத் தொடங்கி உள்ளனர். ரஜனி, பாஜக ஆகியோரை இவர்கள் திட்டி தீர்ப்பது, தங்கள் மீது ஓளி வெள்ளம் பாய வேண்டும் என்ற காரணத்திற்காகதான். அதன் மூலம் பிரபலம் அடையலாம் என்ற எண்ணம் அவர்கள் அடுக்கும் காரணங்களில் இருந்து வெட்ட வெளிச்சமாக நம்மால் உணர முடிகிறது.

ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் விருது கொடுத்துதான் ஒருவரை கட்சிக்காரராக மாற்ற வேண்டும் என்று இல்லை. மத்திய அரசு நினைத்திருந்தால், அமைச்சர், கவர்னர், அவ்வளவு ஏன், மற்றவர்களை விட அதிக ஆதரவு கிடைக்கும் என்ற நிலையில் ஜனாதிபதி பதவி் கூட வழங்க முடியும்.

திருமாவளன் கூறுவதைப் போல, கடந்த பல ஆண்டுகளாக திராவிட அரசியல் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை தமிழகத்தில் உருவாக்கி வளர்த்து வருகிறது. இவர்கள் பின்புலத்தில் தான் ரஜினிக்கு விருது வழங்கியது குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. இவர்கள் வளர்க்கும் இந்த மாய பிம்பம், மோடியின் தமிழ் பற்று, ரஜினியின் கவுரவிப்பு போன்ற காரணங்களால் உடையும் போது அதை உருவாக்கியவர்களால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடிவதில்லை.

ஆனால், இந்த நேரத்தில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினியை நாம் வாழ்த்துவது தான் சரியாக இருக்கும். அவர் பெருமையை எண்ணி நாமும் பெருமிதப்பட வேண்டும்.

தகுதியற்ற ஓர் நபருக்கு விருது வழங்கியிருந்தால் ஆட்சேபணை குரல்களில் நியாயமிருக்கிறது. திரைத்துறையில் இவர் அடைந்துள்ள உச்சம் தொடர்ந்து உச்சநிலையிலேயே இருந்து வருகிறதே கடந்த 40 ஆண்டுகளாக, அதுவே மாபெரும் சாதனை, அதற்கே இந்த விருது தரப்பட்டுள்ளது.

வாழ்த்த மனதிருந்தால் வாழ்த்துங்கள், இல்லையேல் விலகிச் செல்லுங்கள்.பெரும்பான்மையானோர் கருத்துக்கு எதிராகத்தான் தமிழக ஊடகங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவைகளின் கருத்தை கேட்டு  உள்ளூர்காரர்களே நகைத்துக் கொண்டிருக்கையில், மத்திய அரசா இவர்கள் ஆட்சேபணைகளை கருத்தில்கொள்ளப் போகிறது. நடைமுறை உண்மையை உணருங்கள்.

இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லையென்றாலும், அவரின் உச்சநிலையை மற்றொருவர் இனி தொட இயலுமா என்ற கேள்வியே, உங்கள் ஆட்சேபணைகளுக்கான பதிலாகும். உங்களால் ரஜினியை சிறுமைப்படுத்து முடியாது. இத்தகைய கருத்துக்களை பரப்புவதன் மூலம் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறீர்கள். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP