மகாராஷ்டிரா அரசியல் : உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள்

மகாராஷ்டிரா பதவியேற்புக்கு எதிரான வழக்கில் ஆளுநரை விரைவாக வேலை செய்ய சொல்லவோ, அவரை அவசரப்படுத்தவோ நீதிமன்றத்தால் முடியாது என ஆளுநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மகாராஷ்டிரா அரசியல் : உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள்

மகாராஷ்டிரா பதவியேற்புக்கு எதிரான வழக்கில் ஆளுநரை விரைவாக வேலை செய்ய சொல்லவோ, அவரை அவசரப்படுத்தவோ நீதிமன்றத்தால் முடியாது என ஆளுநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும்  நீதிபதிகள் ரமணா, அஷோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா  ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் சார்பில் வாதாடிய துஷார் மேத்தா, ஆளுநரை விரைவாக வேலை செய்ய சொல்லவோ, அவரை அவசரப்படுத்தவோ நீதிமன்றத்தால் முடியாது என்றும் ஆளுநரின் முடிவில் நீதிமன்றங்கள் தலையிடவே முடியாது என்றும் கூறினார். கட்சியின் சட்டமன்ற தலைவராக அஜித்பவார் தேர்வு என்ற கடிதம் உள்ளதாகவும், 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்ஏக்களும் தனக்கு ஆதரவாக உள்ளதாக அஜித்பவார் ஆதரவு கடிதம் தந்ததாகவும் இதற்கு பிறகே ஆட்சி அமைக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். மேலும், ஆதரவு கடிதங்கள் பற்றி ஆளுநர் விசாரிக்க தேவையில்லை என்றும், ஆட்சியமைக்க அக்டோபர் 30ஆம் தேதி சுயேட்சைகள் பலர் ஆதரவு அளித்தனர் எனவும் வாதாடினார். 

இதையடுத்து பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி, மகராஷ்டிராவில் தற்போது பாஜக அரசுக்கு 170 எம்.எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும், ஆதரவு கடிதம் போலியானது எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். ஆட்சி அமைத்த பிறகு எங்களை பார்த்து குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சிவசேனா எம்எல்ஏக்கள் தான் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், தற்காலிக சபாநாயகரை நியமித்து எம்எல்ஏக்கள் பதவியேற்று நிரந்தர சபாநாயகர் நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் எனவே பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் தேவை என்றும், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.  

இதை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில் சிபில், "அவசர அவசரமாக ஆட்சியமைத்த ஃபட்னாவிஸ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளதாகவும், காலை 5.47க்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கும் அளவுக்கு இது அவசர நிலை பிரகடனமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் சிவசேனா கூட்டணி ஆட்சியமைப்பதைத் தடுக்கவே அவசரமாக ஆளுநர் முடிவெடுத்துள்ளதாகவும் வாதாடினார். 

தேசியவாத காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி:  மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயகப்படுகொலை. ஒரு தேசியவாத கங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவை ஆதரிப்பதாகக் கூறினால் அது கட்சியின் கருத்தா? 54 எம்எல்ஏக்களின் கையெழுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பாஜகவை ஆதரித்து ஒப்புதல் தெரிவித்தார்களா? சரத்பவாரின் கடிதம் இல்லாத நிலையில் ஆளுநர் எப்படி அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். மேலும், 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கடந்த கால உத்தரவுகள் உள்ளன. அதன்படி கட்சி பேதமின்றி மூத்த சட்டமன்ற உறுப்பினரை பேரவையின் தற்காலிகத் தலைவராக நியமித்து, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

பாஜக தரப்பு வழக்கறிஞர் ரோஹத்தி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு ஆளுநர் 14 நாள் அவகாசம் தந்துள்ளதாகவும் அதனை நீதிமன்றம் 3 அல்லது 4 நாட்களாக குறைக்க முடியாது எனவும் குறிப்பிட்டதோடு இன்றோ, நாளையோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது என வலியுறுத்தினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP