கர்நாடகா: நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி ஆட்சியின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்
 | 

கர்நாடகா: நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவை பதவியேற்றது முதலே பல்வேறு பிரச்னைகள் சந்தித்து வரும் நிலையில், ஆளும் குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  

இதையடுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப, கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்மானத்தின் மீது முதலமைச்சர் குமாரசாமி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவருக்கும், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் உள்ளிட்ட 20 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆளும் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும், சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் இதில் அடங்குவர். 

இந்நிலையில், தங்களது கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வராததால், இன்று வாக்கெடுப்பு நடத்தினால் அரசு கவிழும் வாய்ப்பு உள்ளது. எனவே வேறு ஒரு தினம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று குமாரசாமி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பாஜக தரப்பில் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. 

பின்னர் சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீது அனைத்து உறுப்பினரும் பேசுவது அவசியமானது என்று கூறினார். தொடர்ந்து தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

ஆளும்கட்சி கோரிக்கை வைத்துள்ளதால் சபாநாயகர் அதனை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கர்நாடக சட்டப்பேரவையின் தற்போதைய நிலை: 

மொத்தமுள்ள இடங்கள்: 224 

பாஜக --> 105+2 =107

காங்கிரஸ் கூட்டணி --> 79+37+1 =117 

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா : 16 (காங்கிரஸ் -13, மஜத -3)

தற்போதைய காங்கிரஸ் கூட்டணியின் பலம் --> 117- 16 =101

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP