அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா??

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தியா வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், சில அயல்நாட்டு பயணிகளின் புத்தகங்களையும் எழுத்துக்களையும் கருத்தில் கொண்டே இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
 | 

அயோத்தியா வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அயல்நாட்டு எழுத்தாளர்கள் யார் என்பதை அறிவோமா??

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தியா வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், சில அயல்நாட்டு பயணிகளின் புத்தகங்களையும் எழுத்துக்களையும் கருத்தில் கொண்டே இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி, அந்த நிலத்தை அரசாங்க நிலமென்று அறிவித்துள்ள நீதிபதிகள் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்ததோடு, இஸ்லாமியர்களுக்கென்று அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலமும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை தொடர்ந்து, இந்த தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் அயோத்திய பயணம் மேற்கொண்டிருந்த டைஃபென்தேலர், வில்லியம் ஃபின்ச் மற்றும் மாண்ட்கோமேரி போன்ற அயல்நாட்டு எழுத்தாளர்களின் பதிவுகளையும் கருத்தில் கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். அவர்கள் யார், அயோத்தியா குறித்த அவர்களின் பதிவுகள் என்ன என்பதை குறித்த சில முக்கிய விஷயங்களை தற்போது பார்க்கலாம்.

1. ஜோசப் டைஃபென்தேலர் : 

18ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த இதாலி நாட்டை சேர்ந்த இவர், இந்தியாவில் சுமார் 27ஆண்டுகள் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 1743ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நகரத்திலிருந்து இந்தியாவின் கோவா மாநிலத்திற்கு கடல் வழி பயணம் மேற்கொண்டிருந்த ஜோசப், மதசார்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், கணிதம், புவியியல், வானியல், ஜெர்மன், இதாலியன், ஸ்பானிஷ், ப்ரஞ்ச், ஹிந்துஸ்தானி, பெர்ஷியன், அராபிக் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கைதேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

இதைதொடர்ந்து, இந்தியாவின் ஆக்ரா நகரில் உள்ள ஜெசூட் கல்லூரியில் சில ஆண்டுகள் பணியாற்றிய அவர், அயோத்தியாவின் அவாத் நகரில் சுமார் 5 வருடங்கள் வசித்து வந்துள்ளார். இந்த 5 வருட அனுபவத்தை வைத்து அயோத்தியா பற்றிய தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ஜோசப் டைஃபென்தேலர்.

"இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓர் ஆலயத்தை அழித்துவிட்டு அதன் மேல் இஸ்லாமியர்களின் மசூதியை கட்டினார் மொகலாய பேரரசர் அவுரங்கசிப், ஆனால், மற்றவர்கள் பாபர் தான் இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். இந்த பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரமாக பல தூண்கள் இங்கே காணப்படுகின்றன. இந்த தூண்கள் ஹனுமான் மற்றும் மற்ற குரங்குகளால் கொண்டு வந்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறிப்படுகின்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.

2. வில்லியம் ஃபின்ச் :

கடந்த 1608ஆம் ஆண்டு, ஆங்கிலேய அதிகாரியான சர் வில்லியம் ஹாக்கின்ஸுடன் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதிக்கு வந்தடைந்த வில்லியம் ஃபின்ச், இந்தியாவின் காஷ்மீர் குறித்தும், வர்த்தக பாதைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவே காஷ்மீர் குறித்த முதல் ஆங்கில பதிவாகும்.

இவர் அயோத்தியாவில் 1608 முதல் 1611 வரை வசித்து வந்ததாகவும், இவரது பதிவின்படி அங்கு இஸ்லாமிய வடிவம் கொண்ட எந்த கட்டிடமும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. 

மேலும், அயோத்தியா பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்த நிலையில் காணப்படுவதாக கூறியுள்ளார் வில்லியம் ஃபின்ச். மேலும், இவரின் பதிவுகளில், இந்துக்களின் கடவுளான ராமரை குறித்த பல தகவல்களும் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

3. ராபர்ட் மாண்ட்கோமேரி மார்ட்டின் :

அயர்லாந்தின் தப்லின் நகரை சேர்ந்த எழுத்தாளரும், பொது பணியாளருமான ராபர்ட் மார்ட்டின், சிலோன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு இந்தியாவின் கொல்கத்தாவின் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவரின் அயோத்தியா பதிவு குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களில், சர்ச்சைக்குரிய பகுதியில் கோவில்கள் கட்டியது யார் என்பது போன்ற பதிவுகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த பகுதி இந்து மக்கள் ராமரை விக்ரமா காலத்திற்கு முன்னரே வழிபட தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளனர்.

இந்த மூன்று அயல்நாட்டு பயணிகளின் பதிவுகளையும் கருத்தில் கொண்டே பல ஆண்டுகளாக நிலுவியில் இருந்து வந்த அயோத்தியா வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP