சீனாவுக்கான ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

சீன இறக்குமதியை மட்டுப்படுத்தும் வகையில், அந்நாட்டுப் பொருள்களுக்கான சுங்க வரியை அதிகரிக்க வேண்டும். இதனால், தீவிரவாதிகளை ஆதரிப்பதற்கான பாதிப்புகளை அந்நாடு உணரும் என்று சுதேஷி ஜாக்ரான் மாஞ்ச் தெரிவித்துள்ளது.
 | 

சீனாவுக்கான ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு தடை போடும் சீனாவை கண்டிக்கும் வகையில், அந்நாட்டுக்கான ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பு இயக்கமான சுதேசி ஜாக்ரான் மாஞ்ச் வலியுறுத்தியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், உரி மற்றும் பதன்கோட்டில் ராணுவ முகாம்கள் மீது நடைபெற்ற தாக்குதல், புல்வாமாவில் கடந்த மாதம் 40 வீரர்களை பலி வாங்கிய தற்கொலை தாக்குதல் உள்ளிட்டவற்றில் மூளையாகச் செயல்பட்டவர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார். அவரது பெயரை ஐ.நா.வின் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதன் மூலமாக, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வைப்பதற்கான தீர்மானத்தை பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொண்டு வந்தன. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட சீனா, அந்த தீர்மானத்துக்கு தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கான ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று சுதேஷி ஜாக்ரான் மாஞ்ச் வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே, தங்கு தடையின்றி வர்த்தகம் நடைபெறுவதற்காக,உலக வர்த்தக விதிகளின்படி வழங்கப்படும் அந்தஸ்து அதுவாகும். முன்னதாக, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இந்த அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான சுங்க வரி பலமடங்கு அதிகரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சுதேஷி ஜாக்ரான் மாஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் கூறுகையில், ”சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தற்சமயம் வர்த்தகப் போரை நடத்தி வருகின்றன. இதனால், அந்நாடு பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், சீன இறக்குமதியை மட்டுப்படுத்தும் வகையில், அந்நாட்டுப் பொருள்களுக்கான சுங்க வரியை அதிகரிக்க வேண்டும். இதனால், தீவிரவாதிகளை ஆதரிப்பதற்கான பாதிப்புகளை அந்நாடு உணரும்’’ என்றார்.


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP