17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 27ல் உச்சநீதிமன்றம் விசாரணை

17 எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று தகுதி நீக்க வழக்கை ஜூன் 27ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 27ல் உச்சநீதிமன்றம் விசாரணை

17 எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று தகுதி நீக்க வழக்கை ஜூன் 27ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் அளித்த புகாரை தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார். இந்தநிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதால், 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். 

இந்தநிலையில், தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் அல்லது உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் சார்பு எம்.எல்.ஏக்களின் வக்கீல் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சஞ்சய் கிஷன் மற்றும் அருண் மிஸ்ரா இந்த வழக்கு நாளை மறுநாள்(27ம் தேதி) விசாரணை வரும் என்று தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP