பாஜகவை சீண்டிப்பார்க்கிறதா சிவசேனா? மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பு!

மஹாராஷ்டிராவில் இம்மாத இறுதியில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போது, பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக உள்ள நிலையில், தேர்தலுக்குப்பின், முதலமைச்சர் பதவியை சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோஷம் அக்கட்சி தலைவர்களிடையே மீண்டும் எழுந்துள்ளது.
 | 

பாஜகவை சீண்டிப்பார்க்கிறதா சிவசேனா? மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பு!

மஹாராஷ்டிராவில் இம்மாத இறுதியில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போது, பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக உள்ள நிலையில், தேர்தலுக்குப்பின், முதலமைச்சர் பதவியை சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோஷம் அக்கட்சி தலைவர்களிடையே மீண்டும் எழுந்துள்ளது. இதன் மூலம், சுமுகமாக உள்ள கூட்டணியில் சிவசேனா தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என அந்த கட்சியில் கோரிக்கை எழுந்தது. அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரை முதலமைச்சர் ஆக்குவது என சிவசேனா தரப்பில் பேசப்பட்டது, பாஜகவினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால், கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. 

இதையடுத்து, நிதர்சனத்தை உணர்ந்த உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பட்னாவிஸ் உடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மகன் தற்போதுதான் அரசியலில் நுழைவதாகவும், அதற்குள் முதலமைச்சர் என்ற பேச்சு அர்த்தமற்றது எனவும் தாக்கரே பேசினார். 

இதையடுத்து, இரு கட்சியிடயே கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடும் முடிந்தது. இந்நிலையில், சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் இடம்பெற்ற தலையங்கத்தில், கூடிய விரைவில் சிவசேனாவை சேர்ந்த ஒருவரை மாநிலத்தின் முதலமைசர் ஆக்கி, சிவசேனா நிறுவனர் மறைந்த தலைவர் பால் தாக்கரேவின் கனவை நினைவாக்குவோம் என எழுதப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், "சிவசேனாவை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்குவதே எங்கள் குறிக்கோள். அதற்காக பாடுபடுவோம். கூட்டணி தர்மத்திற்காக வாய் மூடி கிடக்கிறோம். அதன் காரணமாகவே பலவற்றை வாய் திறந்து பேச முடியவில்லை" எனக்கூறியுள்ளார்.  

சாம்னா தலையங்கமும், சஞ்சய் ராவத் பேச்சும், பாஜகவை சீண்டிப்பார்க்கிறதோ என அந்த மாநில அரசியல் வட்டாரங்களில் சலசலப்பாக பேசப்படுகிறது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP