மனோகர் பாரிக்கரின் வாழ்க்கை பயணம்

ஐஐடியில் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் முதலமைச்சர் என்ற கவுரவத்தை உடைய மனோகர் பாரிக்கர் தனது 63ஆவது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் மிராமர் கடற்கரையில் நடைபெறுகிறது.
 | 

மனோகர் பாரிக்கரின் வாழ்க்கை பயணம்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது 63ஆவது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் மிராமர் கடற்கரையில் நடைபெறுகிறது. 

கோவா மாநிலத் தலைநகர் பனாஜிக்கு அருகே உள்ள மபுசா தான் மனோகர் பாரிக்கரின் சொந்த ஊராகும். 1955ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பிறந்த அவர், லயோலா பள்ளியில் படித்தார். மும்பை ஐஐடியில் உலோகவியல் பொறியியல் படித்த மனோகர் பாரிக்கர், பின்னர் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்தார். 

1994ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். 2000ஆம் ஆண்டில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார். 

தனது மாநிலத்தின் மீதுள்ள பற்றால் வலிமை மிக்க அப்பதவியை துறந்து விட்டு கோவாவின் முதலமைச்சரானார். 4 முறை கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் தான், பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடியின் பெயரை முன்மொழிந்தவர்.

கடந்த ஆண்டில் இவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவா, மும்பை, டெல்லி மற்றும் அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் புற்றுநோயின் தாக்கம் அதிகமானதால், நேற்று அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்,   உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மனோகர் பாரிக்கரின் உடல் பனாஜியில் உள்ள பாஜக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கலா அகாடமிக்கு பாரிக்கரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ராணுவ மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கோவாவில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடி அரைக்கம்பங்களில் பறக்க விடப்பட்டுள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP