கோவா : நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி!

கோவா மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு 20 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.
 | 

கோவா : நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி!

கோவா மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு 20 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் கடந்த ஞாயிறன்று மரணமடைந்தார். இதையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இருப்பினும், மாநிலத்தின் தனிப்பெரும் கட்சி என்ற முறையில், தங்களை ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோவா மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் கோரியிருந்தது. இதையடுத்து மாநிலப் பேரவையில் இன்று காலை 11:30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் வெற்றி பெற, முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசுக்கு குறைந்தபட்சம் 19 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. இந்த நிலையில் 20 எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

மொத்தம் 40 எம்எல்ஏக்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் 14 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இருப்பினும், 12 எம்எல்ஏக்களை மட்டும் கொண்டுள்ள பாஜக,கோவா பார்வர்டு, மகாராஷ்டிரவாதி கோமந்தி ஆகிய கட்சிகளின் தலா 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி நடத்தி வந்தது.

மனோகர் பாரிக்கரின் மறைவையடுத்து, பேரவையில் மொத்தமுள்ள 40 இடங்களில் 4 இடங்கள் காலியாக உள்ளன. எனவே தற்போது பேரவையின் பலமான 36 எம்எல்ஏக்களில், பெரும்பான்மை நிரூபிக்க பாஜகவுக்கு 19 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP