எதிர்கால ராணுவ வீரனை ஃபெயிலாக்கிடாதீங்க... ஆசிரியர்களை சென்டிமென்ட்டாக கவிழ்க்கும் மாணவர்கள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பொதுத் தேர்வு எழுதிவரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தங்களின் விடைத்தாளில், "எதிர்கால ராணுவ வீரனை ஃபெயிலாக்கிவிடாதீர்கள்" என எழுதி, ஆசிரியர்களை சென்டிமென்ட்டாக கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
 | 

எதிர்கால ராணுவ வீரனை ஃபெயிலாக்கிடாதீங்க... ஆசிரியர்களை சென்டிமென்ட்டாக கவிழ்க்கும் மாணவர்கள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பொதுத் தேர்வு எழுதிவரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களின் விடைத்தாளில், "எதிர்கால ராணுவ வீரனை ஃபெயிலாக்கிவிடாதீர்கள்" என எழுதி, ஆசிரியர்களை சென்டிமென்ட்டாக கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் சிலர், தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு அவர்கள் மீது கருணை ஏற்படும் வகையில், சென்டிமென்ட்டான வாசகங்கள், சாமி படங்கள், கவிதைகள், சினிமா வசனங்களை தங்களின் விடைத்தாள்களில் எழுதுவது வழக்கம்.

சில மாணவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, தங்களது விடைத்தாள்களுடன் ரூபாய் நோட்டுகளை இணைத்து வைக்கும் வழக்கமும் பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உண்டு.

ஆனால், இந்த முறை சற்று வித்தியாசமாக இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தேசபக்தியுடன் கூடிய வாசகங்களை எழுதி, விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை சென்டிமென்ட்டாக கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வரும் மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது விடைத்தாள்களில், "மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களே...நான் எதிர்காலத்தில்  ராணுவத்தில் சேர்ந்து உங்கள் பிள்ளைகளையும், நாட்டையும் எதிரிகளிடமிருந்து காக்கும் உயர்ந்த பணியை மேற்கொள்ள விரும்புகிறேன்.

எனவே, எதிர்கால ராணுவ வீரரான என்னை தேர்வில் ஃபெயிலாக்கிவிடாதீர்கள். எனது விடைத்தாளை மதிப்பீடு செய்வதற்கு முன், உங்களது பிள்ளைகளின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுங்கள்" என எழுதியுள்ளனர்.

"அண்மையில் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இத்தகைய சூழலில், தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில் இவ்வாறு எழுதி வருகின்றனர். தேர்வில் தங்களது இயலாமையை மறைப்பதற்காக மாணவர்கள் வழக்கமாக கையாளும் உத்தி தான் இது" என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP