சபரிமலையில் காரணமின்றி 144, பக்தர்கள் மீது அடக்குமுறை: ஆய்வுக்கு பிறகு அல்போன்ஸ் கருத்து 

சபரிமலையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் அல்போன்ஸ், அங்கு தேவையற்ற 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், அவசர நிலை காலத்தைவிட மோசமான சூழல் நிலவுவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 | 

சபரிமலையில் காரணமின்றி 144, பக்தர்கள் மீது அடக்குமுறை: ஆய்வுக்கு பிறகு அல்போன்ஸ் கருத்து 

சபரிமலையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது காரணமற்றது என்றும், அங்கு அவசர நிலைக் காலத்தைவிட மோசமான சூழல் நிலவுவதாகவும் மத்திய அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். சபரிமலையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. 

இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் கார்த்திகை மாத மகர விளக்கு பூஜைக்காக வெள்ளிக்கிழமை நடைத்  திறக்கப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்கள் நடை திறந்திருக்க உள்ளதை அடுத்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. 

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ள கேரள அரசு போராட்டகாரர்களை தடுக்க அனைத்து வகையிலான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. 

பாஜக பொது செயலாளர் கைது: 

சபரிமலை நோக்கி சென்ற மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் சுரேந்திரனை போலீசார் கைது செய்து கொட்டாரக்காரா கிளைச் சிறையில் காலை அடைத்தனர். அதே போல கோவிலுக்கு இரவு 7மணிக்கு மேல் செல்லக் கூடாது என விதிமுறை இருப்பதாகக் கூறி நடைப்பந்தல் என்னுமிடத்தில் இருந்த பக்தர்களைக் கீழே உள்ள முகாமுக்குச் செல்லக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். குறிப்பிட்ட நேரத்தோடு நிலக்கல்லில் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. இதனைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட எழுபது பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

பாஜக தலைமையில் முதல்வர் பினராயி விஜயன் வீட்டை முற்றுகை இட்டு போராட்டம் நடைபெற்றதால் திருவனந்தபுரத்திலும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

சபரிமலையில் ஆய்வு 

நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் சபரிமலைக்கு சென்றார். அப்போது அவர் கூறும்போது, ''இங்கு பக்தர்கள் தீவிரவாதிகள் போல நடத்தப்படுகிறார்கள். பக்தர்களை ஒடுக்க எதற்காக இங்கு 15 ஆயிரம் காவலர்கள் போடப்பட்டுள்ளனர். காரணமின்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புனித சபரிமலை பகுதியை மாநில அரசு போர்ப்பகுதியாக மாற்றியுள்ளது. இங்கு தற்போது அவசர நிலைக் காலத்தைவிட மோசமான நிலை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது'' என்று அல்போன்ஸ் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP