ராமர் பிராயசித்தம் செய்த ரிஷிகேஷை தரிசிப்போமா!

தேவ பூமியை நோக்கி ஓர் ஆன்மீக பயணம். ‘யோகாவின் உலகத் தலைநகரம்’ ரிஷிகேஷ் செல்வோமா ?
 | 

ராமர் பிராயசித்தம் செய்த ரிஷிகேஷை தரிசிப்போமா!

கங்கை ஆற்றின் குளுமை. கங்கை கரையோரம் நிலவும் ஆனந்த அமைதி,எங்கு திரும்பினாலும் ஆன்மீக மணம் கமழும் சூழல். இப்படி கங்கைக் கரையில் அமைந்து இருக்கும் ரிஷிகேஷ் நிச்சயம் தேவ பூமி தான். ரிஷிகேஷ் ஒவ்வொரு இந்துக்களுக்கும் மிக முக்கியமான இடமாகும்.

ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையின் கம்பீரமான அழகை காண்பதற்கும், புனித கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் பல ஆசிரமங்களுக்காகவும், பழமைவாய்ந்த கோவில்களுக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

புனித நதியான கங்கை கரையோரம், பழமையான மற்றும் புதிய சில கோயில்கள் காணப்படுகின்றன. "யோகாவின் உலகத் தலைநகரம்" என்று அழைக்கப்படும் அளவிற்கு ரிஷிகேஷ் யோகா மற்றும் ஆயுர்வேதத்திற்குப் புகழ்பெற்று விளங்குகிறது.

எங்கிருக்கிறது ரிஷிகேஷ்:

இந்திய மாநிலமான உத்தர்கண்டில் உள்ள டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றை உள்ளிட்ட சார் தாம் யாத்திரை செல்வதற்கான துவக்கப் புள்ளியாகவும் ரிஷிகேஷ் இருக்கிறது.

ஹிரிஷிகேஷ் பெயர் காரணம்

ரிஷிகேஷ் என்றால் 'புலன்களின் கடவுள்' என்று பெயர். இது விஷ்ணுவின் பெயராகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் பலனாக, விஷ்ணுவானவர் அவருக்கு முன் தோன்றியதன் நினைவாக இந்த இடம் அவரின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது.

புராண வரலாறு

இலங்கையின் அரசனான ராவணனை போரில் கொன்றதற்காக ராமன் இங்கு வந்து பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. ராமரின் இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார் என்பது நம்பிக்கை. இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' பாலம் உள்ளது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான புராண கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

ராமர் இந்த இடத்தில் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மிகச் சடங்குகளைச் செய்யும் போது, கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க, லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி அமைதியாக ஓடிக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ம் ஆண்டில் யாத்ரீகர்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டது.

பின் 1924ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது இப்போதுள்ள வலுவான பாலமாக மாற்றப்பட்டது. இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயிலும், அதற்கும் அப்பால் ராமருக்கென்றும் கோயில் உள்ளது. இதற்கு இணையாக 2 கி.மீ தள்ளி ராம் ஜூலா என்று இன்னொரு பாலம் உள்ளது.

நீலகண்ட மகாதேவர் கோவில்

லக்ஷ்மண் ஜூலா வழியாக அக்கரைக்கு சென்று அங்கிருந்து ஒரு டாக்ஸி அல்லது வேன் மூலம் நீலகண்டர் கோவிலுக்கு செல்ல வேண்டும். மலை மேல் செல்லும் பாதை மிகவும் கடினமாக இருப்பினும், கீழே கங்கை நதி ஓடுவதை பார்த்து கொண்டே செல்லும் போது இலகுவாகி விடும். நீலகண்டரின் கோவில் கோபுரம் நமது தமிழ்நாடு கோவில் கோபுரத்தை நினைவு படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தேவர்களும் அசுரர்களும் சமுத்திரத்தில் அமிர்தம் கடைந்த போது வந்த நஞ்சை இந்த இடத்தில் தான் சிவ பெருமான் அருந்தியதாகவும், ஈசன் அதன் விஷத்தை தன் கண்டத்தில் நிறுத்தி நீல நிறமாக காட்சியளித்தார் என்பதும் வரலாறு. சைவ அன்பர்கள் சிவராத்திரி சமயங்களில் ஹரித்வாரிலிருந்து இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம். இங்கு நாம் நம் கையால் சிவபெருமானுக்கு ஜலத்தினால் அபிஷேகம் செய்யலாம்.

கங்கா ஆர்த்தி :

ரிஷிகேஷ் செல்வோர் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. கங்கை நதியின் அருகே உட்கார்ந்து,கங்கா மாதாவை மனதில் தியானிப்பது மனதிற்கு புத்துணர்வை தரும்.இதமான காற்றும், ரம்மியமான இசையுடன் கூடிய பஜனையும்,கங்கைக்கு காட்டப்படும் ஆரத்தியும், நம்மை தெய்வீக உலகிற்கு அழைத்து செல்லும். ஒவ்வொரு நாள் மாலையிலும் பலர் திருவேணிகாட் அல்லது பரமார்த்த நிகேதன் ஆரத்தி நேரத்தில் வருகை தருகின்றனர். படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களிடமும் ஆரத்தி தட்டு தரப்படுகிறது.நாமும் கங்கைக்கு ஆரத்தி காண்பிக்கலாம்.அந்த நிமிடம் நம் மனதில் எழும் உணர்வை விளக்கிட வார்த்தை இல்லை.

அருகாமையில் இருக்கும் பிற கோவில்கள்

தட்சனுடன் நடந்த வாக்குவாதத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட பார்வதியின் உடலை சிவன் சுமந்து செல்லும் போது, சக்தியின் இடுப்புப்பகுதி விழுந்த இடத்தில் சதி அம்மனுக்காக இங்கு குஞ்சாபுரி என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் மற்றுமொரு முக்கியமான தலமாகும். குப்ஸ் என்ற சந்நியாசிக்கு யமுனை நதி பரிசாக அளித்த நீரால் இந்த குளம் நிரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. பழபெரும் ரகுநாத் கோவிலின் பிம்பத்தை பக்தர்கள் இக்குளத்தின் நீரில் கண்டு வணங்கலாம்.

கார்வால் இமாலயப் பாதை, புவானி நீர்குத், ரூப்குந்த், கெளரி பாதை, காலிந்து கால் மலைப்பாதை, கன்குல் கால் மலைப்பாதை மற்றும் தேவி தேசியப் பூங்கா ஆகியவை இங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகளாகும். மலையேற்றத்துக்கு தகுந்த மாதங்களாக பிப்ரவரி முதல் அக்டோபர் வரை கருதப்படுகிறது.

இதுமட்டுமல்லாது ஸ்ரீபாபா விஷுதா நந்தாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட காளி காம்ளிவாலெ பஞ்சாயத்தி ஷேத்ரா என்ற புகழ்பெற்ற ஆசிரமம் இங்கு உள்ளது. ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரி கோவிலும் பயணத்தின் போது கவனிக்கத்தக்கது. சிவன் கோயிலானது கங்கை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது. கீதா பவன், ஸ்வர்க ஆசிரம் ஆகியவை ரிஷிகேஷில் உள்ள மற்ற புகழ்பெற்ற இடங்களாகும்.

ரிஷிகேஷில் யோகா :

யோகாவிற்கு என்றே புகழ்பெற்ற பல ஆசிரமங்கள் ரிஷிகேஷில் உள்ளன. பரமார்த்த நிகேதன், சிவானந்தா ஆசிரமம், யோகி நிகேதன், ஏரோவர்லி ஆசிரமம், ஃபூல் சட்டி ஆஸ்ரம், ஆனந்த் பிரகாஷ் ஆஷ்ரம், ஓம்கர்நந்தா ஆசிரமம் மற்றும் ஸ்வாமி ராம் சதக் கிராம் ஆஷ்ரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ரிஷிகேஷில் பாரம்பரிய இந்திய உணவு, இத்தாலிய, மஸ்கிகன், சீன, மத்திய கிழக்கு, அமெரிக்கன் இஸ்ரேல் உணவு கிடைக்கும் . வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுவகைகளும் கிடைக்கும். ரிஷிகேஷ் ஒரு புனிதமான இடம் என்பதால் அசைவ உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

ரிஷிகேஷ் செல்ல ஏற்ற நேரம் :

ரிஷிகேஷ் கடல் மட்டத்திலிருந்து 360 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள், ரிஷிகேஷிற்கு செல்ல சிறந்த நேரமாகும்.

ரிஷிகேஷுக்கு எப்படி போகலாம்:

ரிஷிகேஷுக்கு சாலை வழியாக பயணிக்க விரும்புவோர் டெல்லி, டெஹ்ராடூன், ஹரித்வாரில் இருந்து தனியார் கார்கள் மற்றும் பேருந்து வழியாக இலக்கை அடையலாம். விமானம் மூலம் ரிஷிகேஷ் செல்ல விரும்புவோர், 18கிமீ தொலைவில் அமைந்துள்ள டெஹ்ராடூன் ஜாலி க்ராந்த் விமானநிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, கொத்வார், டெஹ்ராடூன், ஹரித்வார் ஆகியவற்றுக்கு ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் வசதி உள்ளது.

வழக்கமான இயந்திரகதி வாழ்க்கை முறையில் இருந்து விலகி, ஒரு நல்ல இயற்கை வளிமண்டலம், புனிதமான சூழல்கள், நதி மற்றும் மலைகள் ஆகி இயற்கை முறையில் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு முறை ரிஷிகேஷத்திற்கு வாருங்களேன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP