இமயத்தின் சாரலில் வீற்றிருக்கும் அன்னை வைஷ்ணவிதேவி!

இமயத்தின் சாரலில் கொலுவீற்றிருக்கும் அன்னை வைஷ்ணவிதேவியை தரிசிக்க செல்லலாம். முழுமையான வழிகாட்டி இதோ.....
 | 

இமயத்தின் சாரலில் வீற்றிருக்கும் அன்னை வைஷ்ணவிதேவி!

கோடை விடுமுறை என்றதுமே நமக்கு சுற்றுலா தான் நினைவிற்கு வரும். அப்படி செல்லும் சுற்றுலா நமது மனதிற்கு சந்தோஷத்தை கொடுப்பதுடன் மன அமைதியையும் கொடுக்கும் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தானே. கோடையை சமாளிக்க சுற்றுலாவுக்கு திட்டமிடும் போதே,அது ஆன்மீக தேடலுக்கான இடமாகவும் அமைத்துக் கொள்ளலாம். உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைவை தரக்கூடிய அத்தகைய ஒரு புண்ணிய தலம் தான் அம்மனின் சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமானதும், இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலமான வைஷ்ணவிதேவி ஆலயம். இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லாமல் அரூபமாக துர்கை, லட்சுமி, சரஸ்வதி என மூன்று கோலங்களில் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறாள்.உங்கள் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் தேவியின் தர்பாரில் அங்கீகரிக்கப்படும் என்பதே இவளின் தனி சிறப்பு.

வைஷ்ணவிதேவி ஆலயம் எங்குள்ளது - காணும் இடமெங்கும் தூய வெண் பட்டாடை போர்த்தியது போல பனி படர்ந்து இருக்கும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின், கட்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 1000 - 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலமாக கருதப்படுகிறது, வைஷ்ணவி மாதா தேவியின் கோயில். அடர் காடுகளுக்கு நடுவில் கடல் மட்டத்திலிருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. வைஷ்ணவிதேவியை தரிசிக்க ஏற்ற சீசன் ஏது ? தேவியை தரிசிக்க ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தவிர ஏனைய அனைத்து மாதங்களும் ஏற்றது தான். கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா சிறப்பாக நடைபெறும்

கோவில் செல்லுவதற்கான வழிதடம் - ஜம்முவில் இருந்து 50கிமீ தூரத்தில் உள்ளது கட்ரா. ஜம்மு வந்தடைந்ததும் களைப்பு தீர,வைஷ்ணோ தேவி போர்டு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி தாம் மற்றும் வைஷ்ணோ தேவி தாம் என்னும் தாங்கும் விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம். மேலும் வைஷ்ணவி தேவியை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காகவே ஜம்மு ரயில் நிலையத்தில் இருந்தே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாம் கட்ரா சென்றடையலாம். கட்ராவில் இருந்து அடுத்து மாதா கோவில் தர்பாருக்குச் செல்ல வேண்டும். ஆம் தாய் வைஷ்ணவி தேவி அருளாட்சி செய்யும் இடத்தை அவளின் பக்தர்கள் தர்பார் என்றே அழைக்கிறார்கள். கட்ராவில் இருந்து 14 கி.மீ., நடந்து சென்றால் அன்னையின் தர்பாரை அடையலாம். கட்ராவில் இறங்கியவுடன் பஸ் ஸ்டாண்டில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் ‘யாத்ரி பர்ச்’என்ற அனுமதிச் சீட்டை நம்முடைய முழு முகவரியைக் கொடுத்து பெற்றுக் கொண்டால் தான் மேற்கொண்டு நடை பயணத்தைத் தொடர முடியும்.இந்த சீட்டு இல்லாதவர்கள் அன்னையின் தர்பாருக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

கோயிலுக்குச் செல்லும் முதல் பாதையான திரிகூட பர்வதத்தின் அடிவாரத்தை அடைந்தால், நடந்து வந்த களைப்பு தீரும் பொருட்டு அங்கு கொடுக்கப்படும் இலவச உணவை பெற்றுக்கொள்ளலாம். இங்கு பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இலவச உணவு அளிக்கப்படுகிறது. கொஞ்சம் இளைப்பாறிய பின் மலைப்பாதையில் அரை கீ.மி., தூரம் பயணபட்டால் ராணுவ செக்போஸ்ட்டை அடைவோம். இங்கு யாத்ரீ-பர்ச்சையில் ( அனுமதி சீட்டு), ராணுவ முத்திரை பெற்று பயணத்தை தொடர வேண்டும். இங்கிருந்து வைஷ்ணவி தேவியின் கோயில் உள்ள தர்பாருக்குச் செல்லும் பயணத்தில், படிகள் உள்ள பாதையும், சறுக்கு பாதையும் காணப்படுகிறது. இரண்டில்,நமக்கு விருப்பமான மற்றும் வசதியான பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடரலாம்.

நம்முடைய இந்து மதத்தில், கோவிலுக்கு செல்லும் போது சில நடைமுறைகளை நாம் பின்பற்றுவது உண்டு. அதில் ஒன்று இறைவனை தரிசிக்க செல்லும் முன் நமது உடலையும் மனதையும் சுத்தப்படுத்திக் கொண்டு செல்வது. ஆன்ம சுத்தி,இறைவனின் நாம ஸ்மரணத்தில் செய்துக்கொல்கிறோம். உடல் சுத்தி ,பவித்ரமான நீரினால் செய்துக் கொள்கிறோம். அன்னையும் தன்னை காண வரும் அன்பர்களின் உடல் சுத்தி செய்யப்படுவதற்கு ஏதுவாக பயணத்தின் நடுவே கங்கையை கடக்கச் செய்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு

அடுத்து நாம் கடப்பது சரண்பாதுகா என்ற இடம். நாம் தரிசிக்க செல்லும் அன்னை என்ன சாமானியமானவளா? மக்களைக் காக்கும் ஜெகன் மாதா அல்லவா?தன்னை நாடி தன் குழந்தைகள் வரும் போது, அரக்கன் இடையூறு செய்ய வருகின்றானா என நம்மை பின் தொடர்ந்து கண்காணித்து பாதுகாவல் செய்வதாக ஐதீகம். இதை தொடர்ந்து அடுத்து வருவது அர்த் குமாரி. இங்குள்ள ஒரு குகையில் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், நமது பயணத்தை தொடர வேண்டும் என்பது மரபு.

அன்னையை காணச் செல்கிறோமே ,வெறுங்கையுடனா செல்வது என்ற யோசனை வருகிறதா .... கவலையே வேண்டாம். அர்த் குமாரியில் இருந்து சிறிது தூரம் நடந்தால், மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன்புள்ள பஜாரில் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களையும் வாங்கிக் கொள்ளளாம். 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரத்தில், படுத்தபடி ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால்,சிறிது தூரத்தில் மீண்டும் ஒரு குகை காணப்படுகிறது. இங்கு தான் மாதா வைஷ்ணவி தேவியின் சிலா விக்கிரகங்கள் உள்ளன. மஹா காளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி என்று மூன்று வடிவங்களில் மாதா அருள் பாலிக்கிறார். தவழ்ந்து செல்லவேண்டிய குகையாக இருந்த இடம் இப்போது வசதியான பாதையாக மாற்றியிருக்கிறார்கள்.அங்குள்ள அகண்ட ஜோதி எப்போதும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும். மாதா தேவிக்கு காலை, மாலை என்ற இரு வேளை பூஜை உண்டு.

தல வரலாறு தட்சனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரில் வளர்கிறார் அன்னை பார்வதி. தட்சனனை எதிர்த்து தாட்சாயணியை கரம் பிடிக்கிறார் ஈசன்.ஒரு முறை தட்சன் நடத்தும் யாகத்தில் ஈசனின் எதிர்ப்பையும் மீறி பங்கெடுக்க செல்கிறார் பார்வதி . தட்சன் யாகத்தில் ஈசன் அழைக்கப்படாததற்கு தந்தையிடம் நியாயம் கேட்கிறார்அன்னை. தட்சன் பார்வதியை அவமானப்படுத்துகிறான். அதனால், பார்வதி அவமானம் தாங்காமல், தன் சரீரத்தை யோகத்தால் துறக்கிறாள். அதை அறிந்த சிவன் பெருங்கோபம் அடைகிறார். சக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ர தாண்டவம் ஆடுகிறார் ஈசன். அவரை சாந்தபடுத்த கிருஷ்ணர் சக்தியின் உடலின் மீது சக்ராயுதத்தை வீசுகிறார். வெட்டுப்பட்டு விழுந்த சக்தியின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்தி பீடமாக ஆகியது. அதில் ஒன்று தான் ஜம்முவில் இருக்கும் வைஷ்ணவி தேவி ஆலயம் என்கிறது தல புராணம்.

இன்னொரு புராணத்தில் , ஜாஸ்துமல் என்ற பக்தருக்கு மகளாக பிறந்து வளர்கிறாள் அன்னை வைஷ்ணவி தேவி. அவள் அழகில் கவரப்பட்டு அவளை அடைய துரத்துகிறான் பைரவன் என்ற அரக்கன். அவனிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள ஒரு குகைக்குள் சென்று ஒளிந்துக் கொள்கிறாள் தேவி. அங்கு தன்னுடைய சுய ரூபம் வெளிப்பட்டு குகையின் வாயிலில் வைத்தே அரக்கனை சம்ஹாரம் செய்கிறாள் தேவி. சாகும் தருவாயில் மோட்சம் வேண்டிய பைரவனுக்காக இறங்கியஅன்னை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பாதம் பட்டு முக்தி அடைவான் என்று வரம் அருளுகிறாள். இன்றும் அன்னையை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை வாயிலை மிதித்தவாறு தான் உள்ளே நுழைகிறார்கள். மேலும் அன்னையை தரிசித்துவிட்டு திரும்பும் போது பைரவ காடிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பக்தர்களுக்கு வழக்கப்படும் சேவைகளும் வசதிகளும் - அன்னையை காண ஜாதி, மதம் போன்ற ஏல்லைகளைக் கடந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதனால் அரசாங்கமும் கோவில் நிர்வாகமும் எண்ணற்ற வசதிகளை செய்துக் கொடுத்துள்ளனர்.நம்முடைய பிரயாண ஏற்பாடுகளை கோவிலின் அதிகாரபூர்வ இணையதள தகவல் மற்று சேவை மையத்தின் மூலமாக முன் கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்துக்கொள்ளலாம்.தங்கும் இடம், போர்வைகள்,ஹெலிக்கொப்டர் சேவைகள் என பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த இணைய சேவை மூலம் பதிவு செய்துக்கொள்ளலாம். www.maavaishnodevi.org நடக்க இயலாதவர்கள், பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் கட்ராவில் அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டவுடன் அங்கிருக்கும் டெக்கான் ஏர்வேஸ் அலுவலகத்தை தொடர்புக்கொண்டால் ஹெலிகாப்டர் மூலம் அன்னையின் ஆலயத்தை அடையலாம்.

மற்றவர்கள் நடந்தோ, குதிரையிலோ, பல்லக்கிலோ போவதற்கு வசதியாக பெரும்பாலான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் மலை பாதை அமைக்கபட்டிருக்கிறது. போஜனாலயங்களில் பக்தர்களுக்கு மலிவான விலையில் சாப்பாடும், ஓய்வெடுக்க வசதியாக சுத்தமான கூடங்கள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நடந்து செல்பவர்களின் வசதிக்காக ஒரு கி.மீட்டருக்கு ஒரு கடை அமைக்கப்பட்டுள்ளது.அங்கு அனைத்து உணவுப் பொருட்களும் கிடைக்கும். மேலும் இரண்டு கி மீட்டருக்கு ஒரு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு பக்தர்களின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குப் இலவச மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.

தவிர்க்கப் பட வேண்டியவை - கோடைகாலமே வைஷ்ணவ தேவியை தரிசிக்க சிறந்தது. குளிர்காலத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை -4 டிகிரி வரை குறையும் மற்றும் பாறைகள் சரியும் ஆபத்து உள்ளது என்பதால் குளிர்காலத்தை தவிர்க்கவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பயணத்திற்கு படிகளை பயன்படுத்தக்கூடாது. சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம் என்பதால் அது தொடர்புடைய முதலுதவிக் கருவி மற்றும் அவசியமான மருந்துகளை வைத்திருப்பது நல்லது. அதிகமான சுமைகளை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். கைத்தடி ஒன்றை வைத்திருப்பது பெரும் உபயோகமாக இருக்கும். மலையேற வசதியாக அதற்கேற்ற காலணி அணிவது வசதியாக இருக்கும். இவை எல்லாவற்றையும் விட ஜெய் மாதா தி என்ற மந்திரத்தை உச்சரித்தபடி செல்வது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். அன்னையை காண செல்லும் உங்கள் பயணம் இனிதாக அமையட்டும். ஜெய் மாதா தி

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP