உள்ளூர் டூரிசம்: ஈசிஆர் ஜாலி ஸ்பாட் முதல் வேலைவாய்ப்பு வரை!

உள்ளூர் டூரிசம்: ஈசிஆர் ஜாலி ஸ்பாட் முதல் வேலைவாய்ப்பு வரை!
 | 

உள்ளூர் டூரிசம்: ஈசிஆர் ஜாலி ஸ்பாட் முதல் வேலைவாய்ப்பு வரை!

மே மாதம் முழுவதும் சுட்டெரிக்கும் சூரியனை எப்படி சமாளிப்பது என்று வியர்க்க விறுவிறுக்க ஒரு பக்கம் நம் மனது யோசித்துக் கொண்டிருந்தாலும், டீன்ஏஜ் பிள்ளைகளை வீட்டில் வைத்து எப்படி சமாளிப்பது என்ற கேள்வியே முதலில் எழுகிறது. அவர்களின் பலதரப்பட்ட சிந்தனைகளை சில மணித்துளி நேரம் ஒருமுகப்படுத்தலாம் வாருங்கள். கோடை விடுமுறை என்றதும் சிறு பிள்ளைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள் வரை தோன்றும் முதல் எண்ணம், லீவுக்கு எங்கே போகலாம் என்பதுதான்.

பள்ளி விடுமுறை என்றவுடன் உங்கள் பெற்றோர் கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி தூரத்துச் சொந்தங்கள் வீடுகளுக்கு எல்லாம் போய் உறவைப் புதுப்பித்துக் கொண்டு ஆறு, அருவிகளில் குளித்துவிட்டு நகர்ப்புறங்களின் பரபரப்பை சற்றே குறைத்துக்கொண்டு வயல் வெளிகளில் சிறிது அமைதியை பெற்று திரும்பி வரவேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கலாம். எங்களின் முதல் ஓட்டும் அந்தத் திட்டத்துக்குத்தான். ஆனால், இப்போதுள்ள சூழலில் இது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால், சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சில சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு உங்களுக்காக.

மாமல்லபுரம் - புதுச்சேரி

வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் மாமல்லபுரத்தையும் புதுச்சேரியையும் வியந்து பார்க்கிறார்கள். ஆனால், அருகில் இருப்பதாலோ என்னவோ நாம் அதனை ரொம்ப கண்டுகொள்வதில்லை. ஆனால், இந்த இடங்களில் செயல்படும் டூர் ஆப்பரேட்டர்ஸ் சிலர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் சில பிரத்யேகமான வகையில் ஊரைச் சுற்றி காண்பிக்கிறார்கள்.

பைசைக்கிள் டூர்

உடம்பை ஃபிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சைக்கிள் ஓட்டுவதை தவமாக செய்வார்கள். இதை நான்கு சுவர்களுக்குள் ஜிம்மில் செய்யாமல் ஒருநாள் வித்தியாசமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு கிராமத்தின் அழகை சுற்றி பார்த்தால் என்ன?

இந்த எண்ணத்தில் ஏற்பட்டதுதான் மாமல்லபுரத்தைச் சுற்றி அமைந்த 'பைசைக்கிள் டூர்'. அமைதியான சூழலை மெல்ல சைக்கிளை பெடல் செய்தவாறே ரசிப்பது ஒரு ஏகாந்தமான உணர்வு. மாடுகளுடனும், மாட்டு வண்டிகளுடனும், தலையில் பானைகளை சுமந்து செல்லும் பெண்களுடனும் உரையாடிக்கொண்டே செல்வது கிராமங்களில் மட்டுமே சாத்தியம். இந்த டூரில் நாம் விரும்பினால் காய் கனி தோட்டம், நெல் வயல், கிராமத்தை சுற்றியுள்ள சின்னஞ்சிறு கோயில்கள் போன்ற இடங்களுக்கும் கூட்டிச் செல்வார்கள்.

சர்ஃபிங்

சென்னை அருகே உள்ள கோவளம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் சர்ஃப்பிங்-குக்கு என பிரத்யேகமான வகுப்புகள் நடத்தப்பட்டு பின்பு கடலில் சர்ஃப்ங் விளையாட அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்தப் பயிற்சியில் கைதேர்ந்த நிபுணர்கள் குறிப்பிட்ட மணி நேரம் பயிற்சி அளித்து சர்ஃப்பிங் அழைத்துச் செல்கின்றனர். கடல் அலைகளுடன் தாவி குதித்து விளையாட ஆசையா? எடுங்கள் ஒரு சர்ஃப்-போர்டை!

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங் தற்போது சென்னையில் புதிய வரவேற்பை பெற்று வருகிறது. கடலுக்குள் சென்று புதிய உலகத்தை ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு இன்றியமையா அனுபவம். அமைதியான மற்றும் தெள்ளத் தெளிவான நீரோட்டம் கொண்ட கோவளம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகின்றது. கைதேர்ந்த நிபுணர்களை கண்டறிந்து அதற்கேற்ற பயிற்சி மேற்கொண்டு ஸ்கூபா டைவிங் அனுபவம் பெறலாம்.

ஆஃ-ரோடு ஸ்போர்ட்ஸ் (ஈசிஆர் சாலை)

அக்டோபர் 2009 ஆம் ஆண்டு ஈசிஆர் சாலையில் துவக்கப்பட்டது ஆஃ-ரோடு ஸ்போர்ட்ஸ். ஆல் டெர்ரெயின் வெஹிகிள்ஸ் (ATV) என்று அழைக்கப்படும் அனைத்து வகை நிலப்பரப்புகளிலும் செல்லக் கூடிய வாகனங்களின் சாகச விளையாட்டுகளுக்கான தளம். இது சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ATV என்பது 4 சக்கரங்களில் ஓடும் காரைப் போல் காட்சியளிக்கும் பைக். மண் தரைகளில் ஓட்டுவதற்கு மிகவும் ஏதுவான வண்டி. த்ரில் ரைட் , பீச் ரைட், வூட்ஸ் ரைட் என பல வகையான ஜாலி ரைடுகளை நமக்கு விருந்தாக அளிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கட்டுமர ரைட், ஜெட்ஸ்கி போன்ற தண்ணீர் விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

டிராவெல் டிப்ஸ்

1. வடிவேலு படத்துல சொல்ற மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணக் கூடாது. அதுவும் இதுபோன்ற சுற்றுலா பயணத்துக்கு பிளானிங் மிகவும் அவசியம். பிளான் செய்வது கஷ்டமாக இருந்தால் ஒரு டௌர் ஆபரேட்டரை கண்டுபிடியுங்கள். அவர்கள் உங்களுக்காக பிளான் பண்ணுவார்கள்.

2. எல்லா முறையும் நாம பிளான் பண்ணது நடந்தால் அப்புறம் நம்ம எப்போ கடவுளை எல்லாம் நம்பறது. டூர் சமயத்தில் சிறிது மிஸ் ஆகும்போது பொறுமை மிகவும் அவசியம். பக்கத்தில் ஏதாவது கோயில், தேவாலயங்கள் அல்லது மசூதி இருந்தால் அங்கு சென்று மனதை சிறிது லேசாக்கலாமே! சில சமயங்களில் பிளான் பண்ணாமல் நடக்கும் நிகழ்வுகளில் சுவை கூடுதலாக இருக்கும்.

3. அம்மா மாச கடைசியில் கடுகு டப்பாவிலிருந்து நூறு ரூபாய் எடுத்து உங்களுக்கு பாக்கெட் மணி எடுத்து கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி நண்பர்களுடன் தனியாக டூர் செல்லும்போது பணத்தை பல்வேறு இடங்களில் பாதுகாத்து வைக்க வேண்டும். ஒரு இடத்தில வைத்திருந்த பணம் தொலைந்து போனால் கூட வேறொரு இடத்தில பாதுகாத்து வைத்த பணம் கை கொடுக்கும்.

4. டீன் ஏஜ் எட்டியவுடன் டூர் செல்லும்போது எப்போது எங்கு செல்கிறோம் என்பதை முழுவதுமாக பெற்றோருடன் பகிர விருப்பமில்லை என்றாலும் உங்கள் நிகழ்ச்சி நிரலை வீட்டில் இருப்போரிடம் தெரிவிப்பது அவசியம். ஃபோன் சிக்னல் இல்லாத இடங்களுக்கு செல்லும் முன் வீட்டிலிருப்பவர்களுக்கு ஃபோன் செய்து விஷயத்தைத் தெரிவிப்பது அவசியம். இவையனைத்தும் வீண் பிரச்னைகளைத் தவிர்க்கும்.

5. நீங்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்ற உடைகளையும் அக்ஸசரீஸையும் முதலிலேயே பிளான் செய்து எடுத்துக் கொள்வது நலம். எக்ஸ்ட்ரா ஒரு செட் ஆடைகளை கைவசம் வைத்திருத்தலும், ஸ்விம் சூய்ட் ஆடைகள் பேக் செய்வதும் இப்போது கட்டாயமாகிவிட்டது.

6. உயரமான மற்றும் ஆழமான இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுக்கும்போது கவனம் தேவை. "லேடீஸ் டேக் எ செல்ஃப்பி புள்ள" என்று நீங்கள் கேமராவை தூக்க, "ஐ வில் டேக் யு உள்ளே" என்று நீரோடை உங்களை உள்ளே இழுக்கும் சம்பவம் நடக்க வாய்ப்புகள் அதிகம். எனவே கவனம் தேவை.

டூரிசம் வேலைவாய்ப்புகள்

ITL World என்ற டூரிசம் கம்பெனியில் சீனியர் மேனேஜராக பணியில் உள்ள பாபுராஜா இந்தத் துறை தொடர்பாக வழிகாட்டுகிறார், கேள்வி - பதில் வடிவில்:

நீங்கள் எங்கே ஆரம்பித்தீர்கள்... இப்போது எங்கே நிற்கிறீர்கள்?

நான் ஒரு டிராவெல் ஏஜென்சியில் கஸ்டமர் கேர் எக்ஸிக்யூட்டிவ் ஆக முதலில் சேர்ந்தேன். பின்பு டிராவெல் கைடு ஆனேன். சில வருடங்கள் கழித்து டூர் ஆப்பரேஷன்ஸ் மேனேஜராக ப்ரோமொட் செய்யப்பட்டு இப்போது சீனியர் மேனேஜராக பணிபுரிகிறேன். இந்த துறையில் சுமார் 20 வருடமாக இருக்கிறேன்.

டூரிசம் துறையில் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன?

டூர் லீடர் / டூர் மேனேஜர், டிராவெல் கண்சல்டண்ட், டூர் எக்ஸிக்யூட்டிவ், டிக்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், க்ரூயிஸ் ஷிப்ஸ் போன்ற பல துறைகளில் பல வேலைகள் காத்திருக்கின்றன.

இந்தத் துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல்...

பயணம் செய்வதை விரும்புபவர்களும், பல இடங்களை பற்றிய தகவல்களை தெரிய விரும்புபவர்களாக இருப்பீர்களானால் இது சிறந்த துறை. புதிய இடங்கள், புதிய மக்கள் என்று பலவகையான அனுபவங்களை தரும். அந்நிய மொழி தெரிந்த கைடாக இருப்பீர்கள் என்றால் நல்ல சம்பளம் கூட கிடைக்கும். எப்போதும் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்க வேண்டும் இந்தத் துறையில். நீங்கள் எப்போதுமே ஃப்ரீயாக ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்.

பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்து தனது சொந்த விருப்பத்திற்காக டிராவெல் கைடு வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஊரையும் கதைசொல்லி சுற்றிக் காண்பிக்கிறார்கள். இதுகுறித்து மேலும் அறிய https://storytrails.in என்ற வலைத்தளத்தை நாடுங்கள்.

- சிவசங்கரி கோமதி நாயகம்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP