அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்தாலோ, குறைத்தாலோ ஏன் பிற நாடுகளின் பொருளாதாரத்தில் அதிர்வு ஏற்படுகிறது?

வட்டி விகிதத்தை அதிகரிப்பது என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மிக முக்கிய காரணியாகும். இரண்டு சதவீதம் பணவீக்கம் இருப்பதாகவும், அதனைக் கட்டுக்குள் வைக்க விரும்பி இந்த வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது: ஃபெடரல் ரிசர்வ் வங்கி
 | 

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்தாலோ, குறைத்தாலோ ஏன் பிற நாடுகளின் பொருளாதாரத்தில் அதிர்வு ஏற்படுகிறது?

நம் நாட்டு ரிசர்வ் வங்கி போன்று, அமெரிக்க நாட்டின்  தலைமை வங்கியாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக, இந்த வருடம் மட்டும் வட்டியை நான்கு முறை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. வட்டி விகிதத்தை அதிகரிப்பது என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மிக முக்கிய காரணியாகும். இரண்டு சதவீதம் பணவீக்கம் இருப்பதாகவும், அதனைக் கட்டுக்குள் வைக்க விரும்பி இந்த வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதாகவும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி சேர்மன் ஜெரோம் பாவல் அறிவித்திருக்கிறார். 

என்ன தான் ஒரு தீவிரமான பொருளாதாரச் சீர்திருத்தம் செய்தாலும், ஒரு வருடத்தில் நான்கு முறை வட்டி விகிதத்தை ஏற்றுவது என்பது சரியான பொருளாதார அணுகுமுறையாக இருக்காது. இத்தனைக்கும் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் காலத்தில் இந்த வட்டி விகித ஏற்றம் என்பது ட்ரம்ப்-ன் நிர்வாகத்திற்கு இடைஞ்சல் கொடுப்பதற்கு தான் என்பது ஊர்ஜிதமாகிறது.  இந்தியாவிலும், ரகுராம் ராஜன், உர்ஜித்பட்டேல் போன்றவர்களை மறைமுகமாக இயக்கி மத்திய அரசுக்கு இடைஞ்சல் கொடுக்கும் அதே உத்தியைத் தான் அங்கும் எதிர்க்கட்சிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. நம் ரிசர்வ் வங்கியை விட அமெரிக்க ரிசர்வ் வங்கியின் அதிகாரமும் சுதந்திரமும் அதிகம் அதைப் பயன்படுத்தி, அவருக்கு எதிரானவர்கள், அவர்களது மறைமுகமான அதிகாரத்தின் மூலம் அதிபர் டொனால்டு ட்ரம்பை எரிச்சலூட்டி வருகிறார்கள். 

ட்ரம்ப், "இதெல்லாம் பொதுமக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் என்றும், முதலீட்டாளர்களை இவ்வாறு அலைக்கழிப்பதும் சரியல்ல. ஏற்கனவே பங்குச் சந்தை பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேலையில் இப்படி வட்டி விகிதத்தை அநாவசியமாகக் கூட்டுவது ஏற்புடையதல்ல" என்று ட்விட்டரில் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். 

ட்ரம்ப்-க்கு பதில் சொல்லும் விதமாக, நாங்க வெள்ளை மாளிகை கொடுக்கும் அழுத்தத்திற்கெல்லாம் மசிய மாட்டோம். நாங்கள் மிகவும் ஆராய்ந்து தான் இந்த முடிவெடுத்து வருகிறோம் என்று சவடால் விட்டுக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியினர்.. எனினும் தாங்கள் செய்யும் அழிச்சாட்டியம் அளவைக் கடந்தால் பிரச்சினை பெரிதாகலாம் என்று நினைத்தோ என்னவோ, 2019ம் ஆண்டில் வட்டி விகிதத்தை 3 முறை கூட்டுவதாக அறிவித்திருந்ததை மாற்றி இரண்டு முறை மட்டும் அதிகரிப்போம் என்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறது அந்த வங்கி நிர்வாகம். 

இப்படி வட்டி விகிதத்தை அதிரடியாகத் தொடர்ந்து ஏற்றி வந்தால், அமெரிக்க வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்பவர்கள் வட்டி விகிதம் கூடக் கூட கடன் வாங்குவதைக் குறைக்கத் தொடங்குவர். அது குறைந்தால் உற்பத்தி குறையும். அது வேலை வாய்ப்பு இழப்பை அதிகரிக்கும். அந்த நிலை அப்படியே தொடர்ந்தால், பொருளாதாரம் மற்றும் சமூகச் சீரழிவு ஏற்படும். 

அதே போல அமெரிக்க வங்கிகளில் கடன் வாங்கி வெளி நாடுகளில் முதலீடு செய்யும் பெருநிறுவனங்கள் இனி கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளும். அது குறைந்தால் பிற நாடுகளுக்கு அந்நிய முதலீட்டு வரத்து வெகுவாகக் குறையும். இன்றைய சூழலில் உலகளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா (ஜப்பான், சீனா முதல் இரண்டு) மேலும் பின்னால் தள்ளப்படும் நிலை ஏற்படும். 

முதலீடுகள் குறைவதால் பிற நாடுகள் சிரமப்படுவதை விட, வட்டி விகிதத்தைக் கூட்டியதால் பிற நாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளைத் திரும்பப் பெற்று கடனை அடைக்க,  அமெரிக்க நிதி நிறுவனங்கள் முற்படும். அது பிற நாடுகளை இன்னும் மோசமாக பாதிக்கச் செய்யும். 

எனக்கென்னவோ, அரசியல் சித்து விளையாட்டிற்கு அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளையும் அதன் தலைமைகளையும் அரசியல் எதிரிகள் உலகளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்றே தோன்றுகிறது. தேசத்தின்பாற் உண்மையான அக்கறை இல்லாதவர்களை இது போன்ற உயர்பதவிகளில் அமர்த்துவது, அந்தந்த நாட்டிற்கு மட்டுமல்ல, அதன் சார்புடைய அண்டை நாடுகளையும் வெகுவாக பாதிக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP