ஈரான் மீதான தடை - பாதிக்கப்படும் நாடுகளுக்கு டிரம்பின் பதில் இதுதான்

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா விதிக்கும் தடை 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80% இறக்குமதியாகிறது
 | 

ஈரான் மீதான தடை - பாதிக்கப்படும் நாடுகளுக்கு டிரம்பின் பதில் இதுதான்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதிக்கவுள்ள தடை 5ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. இதனால், பாதிக்கப்படவுள்ள நாடுகளுக்கு போதிய அளவில் கச்சா எண்ணெய் கிடைக்க அமெரிக்கா வழிவகை செய்யும் என்கிறார் அதிபர் டிரம்ப்.

அணு ஆயுதக் குவிப்பை ஈரான் நிறுத்துவது என்றும், அதற்குப் பதிலாக ஈரான் மீது வல்லரசு நாடுகள் விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்குவது என்றும் கடந்த 2015ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், நிபந்தனைகளை ஈரான் மீறி விட்டதாகக் கூறி, ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்தார். அத்துடன், ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை அவர் படிப்படியாக அமல்படுத்தி வருகிறார்.

ஈரானில் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய  விதிக்கப்படும் தடை 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. அதே சமயம், அமெரிக்க டாலரை தவிர்த்துவிட்டு, இந்திய ரூபாய் மூலமாகவே ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளது என்ற நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.

இத்தகைய சூழலில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதால் பாதிப்புகளை சந்திக்கும் நாடுகளுக்கு, மாற்று வழிகளில் போதிய அளவில் கச்சா எண்ணெய் கிடைப்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மீதான தடை அமலுக்கு வரும் நேரம் நெருங்கியிருக்கும் சூழலில் அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in

 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP