ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிட்டதற்காக, அந்நாட்டு அரசு ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
 | 

ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா!

ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிட்டதற்காக, அந்நாட்டு அரசு ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ரஷ்ய ஹேக்கர்கள் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக, அவரது ரகசிய ஈமெயில்களை லீக் செய்தனர். இது ஹிலாரிக்கு பெரும் பின்னடைவை தந்தது. அந்த நேரம் வேட்பாளர் ட்ரம் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்ததால், அது அவருக்குச் சாதகமாக அமைந்தது. தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற ரஷ்ய செய்த ஹேக்கிங் உதவியதாகப் பெரிதும் கருதப்பட்ட நிலையில், அதை அமெரிக்க உளவுத்துறை உறுதி செய்தது. 

ட்ரம்ப் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக ரஷ்யா இவ்வாறு செய்ததாக அமெரிக்காவின் 17 உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்தன. 

அப்போது அதிபராக இருந்த ஒபாமா ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். அதன்பின்னர், மேலும் சில பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்தது. 

நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் பொருளாதாரத் தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தடைகளைச் செயல்படுத்த ட்ரம்ப் மறுத்துவிட்டார். ஏற்கனவே ரஷ்யா குறித்தும், அதிபர் புடின் குறித்தும் ட்ரம்ப் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மறுத்து வந்தார். அதனால், பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்த ட்ரம்ப் தயங்கியது அவருக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவு குறித்துச் சந்தேகங்களைக் கிளப்பியது. 

இதற்கிடையே, பிரிட்டனில் வாழ்ந்து வந்த முன்னாள் ரஷ்ய உளவாளி மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் எனப் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்தார். 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் பிரிட்டனை விட்டு வெளியேற அவர் உத்தரவிட்டார். பிரான்ஸ் அதிபரும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்க அரசு, நீண்ட நாட்களாக ரஷ்யா மீது செயல்படுத்தப்படாமல் இருந்த பொருளாதாரத் தடைகளை அமலுக்குக் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. 

மேலும், அமெரிக்கத் தேர்தலின் போது, தவறான தகவல்களைப் பரப்பிய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஐ.டி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ரஷ்ய உளவுத்துறை அமைப்புகள் மீதும் தடை விதித்துள்ளது அமெரிக்கா.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP