அடம்பிடிக்கும் டிரம்ப்: மூடப்படும் அமெரிக்க அரசு

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் மிகப்பெரிய சுவர் எழுப்ப அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்ட நிலையில், அதற்கான நிதியை ஒதுக்குவதில் நாடாளுமன்ற இரு சபைகளும் பிரிந்து கிடப்பதால், அமெரிக்க அரசு இன்று மூடப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது.
 | 

அடம்பிடிக்கும் டிரம்ப்: மூடப்படும் அமெரிக்க அரசு

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் மிகப்பெரிய சுவர் எழுப்ப அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்ட நிலையில், அதற்கான நிதியை  ஒதுக்குவதில் நாடாளுமன்ற இரு சபைகளும் பிரிந்து கிடப்பதால், அமெரிக்க அரசு இன்று மூடப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது.

அதிபர் தேர்தலில் நின்றபோது டொனால்டு ட்ரம்ப், தெற்கு எல்லையில் மிகப்பெரிய சுவர் ஒன்றை எழுப்ப உள்ளதாக வாக்குறுதி கொடுத்தார். மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக பலர் அமெரிக்காவில் குடியேறி வருவதாகவும், அவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் பறிபோவதாகவும் கூறினார். இதை தடுக்க சுவர் தான் ஒரே வழி என்றும், அந்த சுவருக்கு அமெரிக்காவிலிருந்து நிதி திரட்ட வேண்டாம்; மெக்சிகோவே நிதியளிக்கும் என ட்ரம்ப் கூறி வந்தார். ஆனால், மெக்சிகோ இந்த திட்டத்தை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 

சுவர் கட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதாலும், அதனால் சட்டவிரோதமான குடியேற்றத்தை முற்றிலும் தடுக்க முடியாது எனவும் நிபுணர்கள் எச்சரித்தனர். அதனால், இந்த திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அனைத்து தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், தான் கொடுத்த முக்கிய வாக்குறுதி என்பதால் அதை நிறைவேற்றுவதில் ட்ரம்ப் குறியாக இருந்தார். 

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கீழ்சபையில் எதிர்க்கட்சி பெரும்பான்மையை வென்றுள்ளது. இந்த சுவரை கடுமையாக எதிர்த்து வரும் எதிர்க்கட்சிகள், அடுத்த மாதம் பதவியேற்க உள்ளானார். அதனால், அதற்கு முன்னால் எப்படியாவது சுவருக்கான நிதியை பெறவேண்டும் என ட்ரம்ப் திட்டமிட்டார். 

இதற்காக நாடாளுமன்ற கீழ் சபையில் வருடாந்திர பட்ஜெட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியில், 5 பில்லியன் டாலர் அதாவது சுமார் 35,000 கோடி ரூபாயை சுவருக்காக ஒதுக்க முடிவெடுத்தனர். ஆனால் இதை நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்ற முடியாது என இரு கட்சி தலைமைகளும் திட்டவட்டமாக கூறிவிட்டனர். அமெரிக்க அரசின் பட்ஜெட் முடிந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் வெள்ளியாகும். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படாவிட்டால், அமெரிக்க அரசு நிதி இல்லாமல் மூடப்படும். இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு சேவைகளும் நிதி இல்லாமல் முடங்கும். கிறிஸ்துமஸ் நேரத்தில், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல்,  அனைவரும் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இது அமெரிக்க பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கும்.

 இறுதி கட்ட பேச்சுவார்த்தையில், சுவருக்கான நிதி இல்லாமல் ஒரு  இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்படும் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அமெரிக்க கீழ் சபை 5 பில்லியன் டாலரை சுவருக்காக ஒதுக்கி பட்ஜெட்டை நிறைவேற்றியுள்ளது. இது மேல் சபையில் நிறைவேற வாய்ப்பில்லை என்பதால், இன்று அமெரிக்க அரசு மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP